• HOME
 • »
 • NEWS
 • »
 • coronavirus-latest-news
 • »
 • இந்தியாவின் தடுப்பூசிக் கொள்கை: கற்பிதங்களும் உண்மையும்- மத்திய அரசின் மருத்துவ நிபுணர் விளக்கம்

இந்தியாவின் தடுப்பூசிக் கொள்கை: கற்பிதங்களும் உண்மையும்- மத்திய அரசின் மருத்துவ நிபுணர் விளக்கம்

கோவிஷீல்டு தடுப்பூசி

கோவிஷீல்டு தடுப்பூசி

இந்தியாவின் தடுப்பூசிக் கொள்கை, தடுப்பூசி திட்டம் ஆகியவை பற்றி சிலபல கற்பிதமான தகவல்கள் வளைய வந்து கொண்டிருக்கின்றன. இவை திரிக்கப்பட்ட கூற்றுகளாகவும் அரை உண்மை அல்லது அப்பட்டமான பொய்களாகவும் பரவி வருவதாகக் கூறுகிறது மத்திய அரசு. 

 • Share this:
  இந்தியாவின் தடுப்பூசிக் கொள்கை, தடுப்பூசி திட்டம் ஆகியவை பற்றி சிலபல கற்பிதமான தகவல்கள் வளைய வந்து கொண்டிருக்கின்றன. இவை திரிக்கப்பட்ட கூற்றுகளாகவும் அரை உண்மை அல்லது அப்பட்டமான பொய்களாகவும் பரவி வருவதாகக் கூறுகிறது மத்திய அரசு.

  இதனையடுத்து நிதி ஆயோக் மருத்துவப் பிரிவு உறுப்பினரும் கோவிட்-19 தடுப்பூசித் திட்ட தேசிய நிபுணர் குழு தலைவருமான டாக்டர் விநோத் பால் நீண்ட விளக்கம் அளித்துள்ளார்.

  கற்பிதம் 1: மத்திய அரசு வெளிநாடுகளிலிருந்து தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய போதிய ஈடுபாடு காட்டவில்லை

  உண்மை நிலவரம்: கடந்த 2020-ம் ஆண்டு மத்தியிலிருந்தே உலகின் பல்வேறு தடுப்பூசித் தயாரிப்பாளர்களுடன் இந்தியா தொடர்பில் இருந்து வருகிறது. பைசர், ஜே அன்ட் ஜே, மாடர்னா ஆகிய நிறுவனங்களுடன் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. அவர்கள் நமக்கு சப்ளை செய்யவோ அல்லது இந்தியாவிலேயே தயாரிக்க வசதி செய்து தரவோ சம்மதம் என்று மத்திய அரசு உறுதியளித்தது. மற்ற மருந்துகளை வாங்குவது போல வாக்சின்களை நாம் வாங்கி விட முடியாது. கையில் இருக்கும் தடுப்பூசிகளை பகிர்ந்தளிப்பதில் நிறுவனங்களுக்கென்றே பிரத்யேக முன்னுரிமைகள், உத்திகள், வற்புறுத்தல்கள், ஆகியவை இருந்தே தீரும்.

  covid vaccine

  அவர்கள் உற்பத்தி செய்யும் நாட்டுக்கு முதலுரிமை அளிப்பார்கள் இது வழக்கம்தான், நம் வாக்சின் தயாரிப்பாளர்கள் எப்படி நம் நாட்டுக்கு முக்கியத்துவம் அளிப்பார்களோ அவர்களும் அப்படித்தான். பைசர் நிறுவனம் வாக்சின் இருக்கிறது என்று சொன்னவுடனேயே மத்திய அரசும், ஃபைசரும் சேர்ந்து இறக்குமதிக்கான வேலைகளைச் செய்தன. இத்தகைய முயற்சிகளால்தான் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வாக்சின் இரண்டு கொள்முதல்கள் இந்தியாவுக்கு வந்துள்ளன. மேலும் இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய தனது தொழில்நுட்பத்தையும் அளித்துள்ளது, இதெல்லாம் அரசின் முயற்சியினால்தான். இந்தியாவில் தடுப்பூசியை உற்பத்தி செய்யுங்கள், இந்தியாவுக்காக செய்யுங்கள், உலகத்திற்காகச் செய்யுங்கள், மேக் இன் இந்தியா என்றுதான் நாங்கள் அவர்களுக்கு மீண்டும் மீண்டும் கோரிக்கை வைத்து வருகிறோம்.

  கற்பிதம் 2: உலகம் முழுதும் கிடைக்கும் வாக்சின்களுக்கு இந்தியா அனுமதியளிக்கவில்லை

  உண்மை: யுஎஸ்எஃப்டிஏ, இஎம்ஏ, யுகே-யின் எம்.எச்.ஆர்.ஏ., ஜப்பானின் பிஎம்டிஏ, உலகச் சுகாதார அமைப்பு அவசரகால பயன்பாட்டுக்குப் பரிந்துரை செய்த பட்டியல் அனைத்தையும் இந்தியாவுக்குள் நுழைய கடந்த ஏப்ரலிலேயே வழிவகை செய்துள்ளோம். இந்த வாக்சின்கள் சோதனை செய்யப்பட வேண்டிய தேவையற்றது. நன்கு நிறுவப்பட்ட தடுப்பூசிகளுக்கு இப்போது மேலும் சில தளர்வுகளை அறிவித்துள்ளோம். எந்த ஒரு அயல்நாட்டு தடுப்பூசி உற்பத்தியாளரின் விண்ணப்பமும் நிலுவையில் வைக்கப்படவில்லை.  கற்பிதம் 3: உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்க மத்திய அரசு போதிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை

  உண்மை: 2020 தொடக்கத்திலிருந்தே அதிக நிறுவனங்கள் தடுப்பூசி உற்பத்தி செய்ய மத்திய அரசு ஒரு திறம்பட்ட வழிவகைகளை செய்து கொடுத்துள்ளது. கோவாக்சினை பாரத் பயோடெக் மட்டுமல்லாமல் 3 பிற நிறுவனங்களும் உற்பத்தி செய்வதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது. ஒரு உற்பத்தி தொழிற்சாலையிலிருந்து நான்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. கோவாக்சின் உற்பத்தி மாதம் ஒரு கோடி என்பதிலிருந்து அக்டோபரில் 10 கோடி தடுப்பூசி உற்பத்திக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதோடு 3 பொதுத்துறை நிறுவனங்களும் சேர்ந்து டிசம்பருக்குள் 4 கோடி தடுப்பூசிகளை உற்பத்தி செய்யவிருக்கின்றன. அரசின் ஊக்கத்தின் அடிப்படையில் சீரம் நிறுவனம் தன் கோவிஷீல்ட் உற்பத்தியை மாதம் 6.5 கோடி டோஸ்களிலிருந்து 11 கோடியாக அதிகரிக்கிறது. இதோடு ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசியை டாக்டர் ரெட்டி நிறுவனத்துடன் ஒருங்கிணைந்து 6 நிறுவனங்கள் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஜைடஸ் கெடில்லா, பயோ-இ, ஜென்னோவா, ஆகியவையும் தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய கோவிட் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் அரசு ஆதரவு அளித்து வருகிறது.

  மாதிரிப்படம்.


  மேலும் பாரத் பயோடெக்கின் ஒரேடோஸ் வாக்சினான மூக்கு வழியே செலுத்தும் தடுப்பூசி உற்பத்தியும் அரசின் நிதியுதவியுடன் நடைபெற்று வருகிறது, இது மட்டும் வெற்றி பெற்று விட்டால் உலகிற்கு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். 2021 இறுதிக்குள் 200 கோடி டோஸ்கள் தடுப்பூசி உற்பத்தி என்ற லட்சிய இலக்கு எட்டப்படுவது இத்தகைய சீரிய முயற்சிகளினால்தான். உலகில் எத்தனை நாடுகள் இப்படி பெரிய அளவில் தடுப்பூசி தயாரிப்பு திட்டத்தை வைத்துள்ளன? மத்திய அரசும் வாக்சின் உற்பத்தியாளர்களும் தினசரி அடிப்படையில் ஒருங்கிணைந்து ஒரு டீம் இந்தியாவாக செயல்பட்டு வருகின்றன.

  கற்பிதம் 4: மத்திய அரசு கட்டாய உரிமத்தை கொண்டு வர வேண்டும்

  உண்மை: கட்டாய உரிமம் ஒரு கவர்ச்சிகரமான தெரிவு அல்ல. ஏனெனில் வாக்சின் ஃபார்முலா பிரச்னையல்ல, ஆனால் செயல்பூர்வமான ஒரு பார்ட்னர்ஷிப், மனித ஆதாரங்களைத் திரட்டி பயிற்சி அளித்தல், வாக்சின் தயாரிப்புக்கு வேண்டிய இடுபொருட்களை பெறுதல், உயர் பாதுகாப்பு உயிர்-பாதுகாப்பு சோதனைச்சாலைகள் ஆகியவைதான் பிரச்னை. தொழில்நுட்பத்தை மற்ற நிறுவனத்துக்கு கையளித்தல் முக்கியமானது அது ஆய்வு மற்றும் மேம்பாடு பிரிவு வைத்துள்ள நிறுவனங்களின் கையில்தான் உள்ளது. மாடர்னா நிறுவனம் தன் தடுப்பூசியை பிற நிறுவனங்கள் உற்பத்தி செய்தால் தாங்கள் வழக்குப் போட மாட்டோம் என்று கூறினர். ஆனாலும் எந்த நிறுவனமும் அவர்கள் வாக்சினை உற்பத்தி செய்ய முன் வரவில்லை, எனவே லைசென்சிங் எல்லாம் ஒரு பிரச்னையும் இல்லை. தடுப்பூசி உற்பத்தி அவ்வளவு சுலபம் என்றால் ஏன் உலகின் வளர்ந்த நாடுகளுக்கும் தடுப்பூசி தட்டுப்பாடுகள் ஏற்படுகின்றன?

  தடுப்பூசி


  கற்பிதம் 5: மாநிலங்களுக்கான பொறுப்பை மத்திய அரசு தட்டிக் கழித்தது

  உண்மை: மத்திய அரசால் கொள்முதல் செய்யப்பட்ட வாக்சின்களை மாநில அரசுகள் மக்களுக்கு இலவசமாக போட முழுதும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது அனைத்து மாநிலங்களுக்குமே தெரியும். மாநில அரசுகள் தாங்களே வாக்சின் கொள்முதல் செய்யவும் மத்திய அரசு உதவியது. நாட்டில் தடுப்பூசி உற்பத்தித் திறன் பற்றி மாநிலங்கள் அனைத்துமே அறியும். நேரடியாக அயல்நாடுகளிலிருந்து கொள்முதல் செய்வதில் உள்ள கடினப்பாடுகளும் மாநிலங்களுக்குத் தெரியும். மாநில அரசுகள் 3 மாத காலமாக முன்களப் பணியாளர்கள், மருத்துவ பணியாளர்களுக்கே முழுதாக தடுப்பூசிப் போட்டு முடிக்கவில்லை எனும்போது தடுப்பூசி நடைமுறைகளை பரவலாக்க வேண்டும் என்கின்றனர். தடுப்பூசிகளுக்கான உலக டெண்டர்கள் விவகாரத்தில் நாங்கள் என்ன கூறிவருகிறோமோ அதையே மாநிலங்களும் இப்போது உணர்ந்திருக்கும். அதாவது தடுப்பூசிகள் போதிய அளவில் இல்லை, எனவே குறுகிய காலத்தில் அவற்றை கொள்முதல் செய்வது கடினம் என்பதே எங்களது கருத்துமாகும்.

  தடுப்பூசி போட்டுக்கொள்ளும் மு.க.ஸ்டாலின்


  கற்பிதம் 6: மாநிலங்களுக்கு மத்திய அரசு போதிய தடுப்பூசிகளை வழங்குவதில்லை:

  உண்மை: ஒத்துக் கொள்ளப்பட்ட வழிகாட்டுதல்களின்படி மத்திய அரசு வெளிப்படைத்தன்மையுடன் மத்திய அரசு போதிய தடுப்பூசிகளை மாநில அரசுக்கு வழங்குகிறது. இன்னும் சொல்லப்போனால் வாக்சின் கையிருப்பு விவரங்களையும் மாநில அரசுகளுடன் பகிர்ந்து கொண்டுதான் இருக்கிறோம். மாநிலங்களுக்கு 25% டோஸ்களும் தனியார் மருத்துவமனைகளுக்கு 25% டோஸ்களும் கிடைத்து வருகின்றன. ஆனால் இந்த 25% டோஸ்களை மக்களுக்குச் செலுத்துவதில் சிக்கல்கள் மாநிலங்களுக்கு உள்ளன. நாட்டின் சில அரசியல் தலைவர்கள் தடுப்பூசி உற்பத்தி, சப்ளை பற்றி விவரம் தெரிந்துமே தினமும் தொலைக்காட்சியில் தோன்றி மக்களிடத்தில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவது துரதிர்ஷ்டவசமானது. இது அரசியல் விளையாட்டுக்கான நேரமல்ல. இந்தப் போரில் நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

  கற்பிதம் 7: குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  உண்மை: இப்போதைய நிலவரம் வரை எந்த நாடும் குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடவில்லை. உலகச் சுகாதார அமைப்பும் குழந்தைகளுக்கான தடுப்பூசி விவகாரத்தில் எந்த பரிந்துரைகளையும் மேற்கொள்ளவில்லை. இந்தியாவில் குழந்தைகளுக்கு வாக்சின் செலுத்தும் சோதனைகள் விரைவில் தொடங்குகிறது. வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடக குழுக்கள் ஏற்படுத்தும் பரபரப்பு, பதற்றத்தை வைத்தும், சில அரசியல் தலைவர்கள் செய்யும் அரசியலை வைத்தும் குழந்தைகளுக்கான வாக்சின் திட்டம் பற்றி முடிவெடுக்க முடியாது. சோதனைகள் மூலம் கிடைக்கும் தரவுகள் அடிப்படையில் குழந்தைகளுக்கான தடுப்பூசி பற்றி விஞ்ஞானிகளே முடிவெடுக்க முடியும்.

  இவ்வாறு அவர் கற்பிதங்களுக்கு பதில் அளித்துள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Muthukumar
  First published: