எப்படியும் பசியில் சாகப் போகிறோம், அது ஊருக்குப் போகும்போது நிகழ்ந்துவிட்டு போகட்டும்...! வெளிமாநில மக்களின் கண்ணீர் குரல்

”தங்கியுள்ள ரூம்க்கு வாடகை கொடுக்க முடியவில்லை. மேலும் மருந்துகள் வாங்குவதற்கு காசில்லை”

எப்படியும் பசியில் சாகப் போகிறோம், அது ஊருக்குப் போகும்போது நிகழ்ந்துவிட்டு போகட்டும்...! வெளிமாநில மக்களின் கண்ணீர் குரல்
ஊரடங்கால் தவிக்கும் வெளிமாநில மக்கள்
  • Share this:
எப்படியும் பசியில் சாக போகிறோம், அது ஊருக்குப் போகும்போது நிகழ்ந்துவிட்டு போகட்டும் என்று ஊரடங்கால் தவிக்கும் வெளிமாநில மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள மெக்கீஸ் கார்டன் பகுதி முழுவதும் ஏராளமான லாட்ஜ்களும், ஒட்டல்களும், டிக்கெட் முன்பதிவு மையங்களும் இயங்கி வருகின்றன.
இங்கெல்லாம் ரூம் பாய் வேலைக்கும், சமையல் வேலைக்கும், டிக்கெட்டுக்கு ஆள் பிடிக்கும் வேலைகளையும் செய்ய ஒடிசா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வந்து 200 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் 10 முதல் 15 ஆண்டுகளுக்கு மேலாக வேலை செய்து வருகின்றனர்.


இவர்களுக்கு மாத சம்பளம் குறைந்தபட்சம் 6000 முதல் அதிகபட்சமாக 12,000 வரை மட்டுமே கிடைத்து வருகிறது. இந்த சம்பளத்தை வைத்து அன்றாட வாழ்க்கையை நகர்த்தி வரும் அவர்களை கடந்த 21 நாட்களாக கடுமையாக முடக்கி போட்டுள்ளது கொரோனா ஊரடங்கு.

கலங்கிய கண்களுடன் கைகளை பிசைந்தபடி நின்று கொண்டிருந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த அர்ஜுன் பேசுகையில்,
"ஒடிசாவில் இருந்து வந்து 20 வருடமாகி விட்டது. மாதம் 6000 ரூபாய் சம்பளத்திற்கு ரூம் பாய் வேலை செய்து வருகிறேன்.21 நாள் ஊரடங்கால் சம்பளம் இல்லை, உணவிற்கு வழியில்லை. ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவே முழுமையாக கிடைத்து வருகிறது.
இந்நிலையில், இப்போது மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது" என்றார்.

மேலும், "இப்போதைக்கு ஒன்றே ஒன்று தான் எங்கள் எண்ணம். ஊருக்கு திரும்பி செல்ல வேண்டும். ஏதேனும் பேருந்து, ரயில் விட்டால் போதும். அப்படி ஏதுவும் கிடைக்காவிட்டால், நடந்தாவது ஊருக்கு செல்வோம். எங்கள் மக்கள் 200 பேரும் நடந்தே செல்லலாம் என்று கூட முடிவெடுத்து விட்டோம்" என்றார்.

"நடந்தே ஒடிசா செல்வது அவ்வளவு சுலபமா?" என்று நாம் கேட்டதற்கு, "வழியில் எங்கேயாவது உணவு கிடைத்தால் உண்போம், இல்லாவிட்டால் சாக வேண்டியது தான். இங்கே இருந்தால் எப்படியும் உணவு இல்லாமல் சாகத்தான் போகிறோம். எனவே ஊரை நோக்கி நடந்து சென்று சாகலாம் என்று நினைக்கிறோம்" என்று சொல்லி கண் கலங்கினார்.

தொடர்ந்து பேசிய அவர் "என் குடும்பத்தார் என்னை ஊருக்கு வர சொல்கின்றனர். எனக்கு 6 வயது மகன் உள்ளான். என்னை பார்க்க வேண்டும் என அழுகிறான்" என்றார்.

"உணவு கேட்டு மாநகராட்சியை தொடர்பு கொண்டீர்களா?" என்று கேட்டதற்கு, "வெளியே செல்லவே போலீசார் அனுமதிக்கவில்லை. இருந்தும், சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவரை தொடர்பு கொண்டு 198 நபருக்கு உணவு கேட்டோம். ஆனால், அவர் 37 பேருக்கு மட்டுமே உணவு கொடுத்தார். நாங்கள் வேலை செய்யும் கடை உரிமையாளர்களும் வியாபாரம் நடந்தால் தான் சம்பளம் கொடுக்க முடியும் என்று கை விரித்து விட்டனர்" என்றும் தெரிவித்தார்.

கூலி வேலை செய்ய வந்தவர்கள் அனுபவிக்கும் கஷ்டம் ஒருபுறம் என்றால், மருத்துவ சிகிச்சைக்காக சென்னை வந்து சிக்கிக் கொண்ட 150 பேரின் துயரம் மறுபுறம்.

வங்கதேசத்தை சேர்ந்த பர்ஹானா பேசுகையில், "60 வயதான என்னுடைய அம்மாவின் நரம்பு சம்பந்தமான பிரச்சனைக்கும், எனக்கு கருப்பை தொடர்பான சிகிச்சையும் பெற மார்ச் 12 அன்று சென்னை வந்தோம். சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள வி.எஸ்.மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றோம்.

மார்ச் 24 அன்று சிகிச்சை முடியும் என்பதால், மார்ச் 25 அன்று விமான டிக்கெட் முன்பதிவு செய்து இருந்தோம்.
ஆனால், மார்ச் 24 இரவில் இருந்து ஊரடங்கு அமலானதால். எங்களால் ஊருக்கு செல்ல முடியவில்லை" என்றார்.

மேலும், "சிகிச்சை செலவுக்காக கொண்டு வந்த 1.5 லட்சம் ரூபாயும் செலவாகி விட்டது. நாங்கள் தங்கியுள்ள ரூம் வாடகை மட்டும் ஒரு நாளைக்கு 1000 ரூபாய் ஆகிறது. எனவே எங்களால் அந்த தொகை கொடுக்கக் முடியவில்லை. இந்த நிலையில் தான், ஊரடங்கு வரும் 14-ம் தேதியுடன் முடிந்து விடும் என்று நினைத்து, ஏப்ரல் 17 அன்று மீண்டும் டிக்கெட் புக் செய்தோம். ஆனால், இப்போது மீண்டும் மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இப்போது, என்ன செய்வதென்றே தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறோம்" என்றார்.

வங்கதேசத்தை சேர்ந்த சுவதாஸ் என்ற இளைஞர் பேசுகையில்,
"என்னுடைய தந்தைக்கு கேன்சர். அவருக்கு சிகிச்சை செய்ய
பிப்ரவரி 27-ம் தேதி சென்னை வந்தோம். எங்கள் சிகிச்சை முடிந்து மார்ச் 25 அன்று டிக்கெட் புக் செய்திருந்தோம்.
இப்போது, நாங்கள் செலவுக்கு கொண்டு வந்த அனைத்தும் செலவாகி விட்டது.

தங்கியுள்ள ரூம்க்கு வாடகை கொடுக்க முடியவில்லை. மேலும் மருந்துகள் வாங்குவதற்கு காசில்லை. இப்போது நாங்கள் ஊருக்கு செல்ல வேண்டும். உதவி செய்யுங்கள்" என்று கையெடுத்து கும்பிட்டார்.

திடீர் ஊரடங்கு அறிவிப்பால் உள்ளூர் வாசிகள் பல்வேறு விதமான பாதிப்புகளை எதிர்கொண்டு வரும் நிலையில், வெளிமாநில மக்கள் நாம் சிந்தித்துப் பார்க்காத அளவிலான சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.

வெளிமாநில மக்களை காப்பதற்கு அந்தந்த மாநில அரசுகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு அறிவிப்பு ஒருபுறம், முதல்வர்களின் வேண்டுகோள்கள் மறுபுறம் என அரசுகள் செயல்பட்டாலும் இவர்களை போல பலரும் நிர்கதியாய் நிற்கத்தான் செய்கிறார்கள்.

Also see...
First published: April 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading