நாட்டில் ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு கூடுதலாக 40 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இதேபோல, மாநிலங்கள் கடன் பெறுவதற்கான வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளதன் மூலம், கூடுதலாக 4 லட்சத்து 28 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பொருளாதாரத்தை ஊக்குவிக்க 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார். இதில், 5-வது மற்றும் இறுதிக்கட்டமாக, ஊரக வேலைவாய்ப்புத் திட்டம், சுகாதாரம் மற்றும் கல்வி, வர்த்தகம் மற்றும் கொரோனா பாதிப்பை எதிர்கொள்ளுதல், பொதுத் துறை நிறுவனங்கள், மாநில அரசுகளுக்கான ஆதாரங்கள் உள்ளிட்ட 7 பிரிவுகளில் புதிய அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.
கல்வித் துறையில் தொழில்நுட்பத்தைப் புகுத்தும் வகையில், பிரதமரின் இவித்யா என்ற திட்டம் உடனடியாக அறிமுகப்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் கூறினார். இதன்படி, ஒரு நாடு, ஒரே டிஜிட்டல் கட்டமைப்பு என்ற முறையில், பள்ளிக் கல்வியில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் மின்னணு பாடப் புத்தகங்கள் ஏற்பாடு செய்யப்படும். ஒரு வகுப்பு, ஒரே சேனல் என்ற திட்டத்தின்படி, ஒன்றாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை, ஒவ்வொரு வகுப்புக்கும் ஒரு தொலைக்காட்சி அலைவரிசை தொடங்கப்படும்.
ஆன்லைன் வகுப்புகளை மே 30-ம் தேதிக்குள் தொடங்க முதல் 100 பல்கலைக் கழகங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் கூறினார். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் மனநலனைப் பாதுகாக்க மனோதர்பன் என்ற திட்டம் உடனடியாக அறிமுகப்படுத்தப்படும்.
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு கூடுதலாக 40 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதன்படி, ஒட்டுமொத்தமாக 300 கோடி நாள் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்றும், இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளிட்டோருக்கு பலன் கிடைக்கும் என்றும் நிர்மலா சீதாராமன் கூறினார்.
எதிர்காலத்தில் புதிதாக எந்தவொரு தொற்று ஏற்பட்டாலும், அதனை எதிர்கொள்ளும் வகையில், அனைத்து மாவட்டங்களிலும் தொற்று நோய்களுக்கான மருத்துவமனை வளாகங்கள் அமைக்கப்படும். வட்டார அளவில் பொது சுகாதார ஆய்வகங்கள் அமைக்கப்படும்.
திவால் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக சிறு, குறு நிறுவனங்களுக்கான வரம்பு ஒரு கோடியாக அதிகரிக்கப்படும். புதிதாக திவால் நடவடிக்கைகள் ஓராண்டுக்கு நிறுத்திவைக்கப்படும். புதிய மற்றும் சுயசார்பு இந்தியாவை உருவாக்க பொதுத்துறை நிறுவனங்கள் கொள்கை தேவைப்படுவதாக மத்திய அமைச்சர் கூறினார்.
இதன்படி, பொதுமக்களின் நலன் கருதி குறிப்பிட்ட சில நிறுவனங்கள் மட்டுமே பொதுத்துறை நிறுவனங்களாக இருக்கும்.
முக்கியத்துவம் வாய்ந்த துறைகளைத் தவிர மற்ற துறைகளில் உள்ள பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.
மாநிலங்கள் கடன் பெறுவதற்கான வரம்பு ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதமாக உள்ளது. இதனை மாநில அரசுகளின் கோரிக்கையை ஏற்று 5 சதவீதமாக அதிகரிக்க மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. இதன்படி, மாநிலங்கள், கூடுதலாக 4 லட்சத்து 28 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற முடியும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
மாநிலங்களுக்கு வருவாய் பற்றாக்குறை மானியமாக ஏப்ரல், மே மாதங்களில் 12 ஆயிரத்து 390 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும், வரிப் பகிர்வாக 46 ஆயிரத்து 38 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் கூறினார்.
இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் விவகாரத்தில் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகளை அவர் கேட்டுக் கொண்டார். இடம்பெயர்ந்தவர்களை அதிக பொறுப்புடன் கையாள வேண்டும் என்று சோனியாகாந்தியை கைகூப்பி வேண்டிக் கொள்வதாக நிர்மலா சீதாராமன் கூறினார்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CoronaVirus, Lockdown, Migrant workers, Minister Nirmala Seetharaman