பள்ளிகளில் மாணவர்களுக்கு முகக்கவசம் கட்டாயம் - பள்ளி கல்வித்துறை உத்தரவு

பள்ளிகளில் மாணவர்களுக்கு முகக்கவசம் கட்டாயம் - பள்ளி கல்வித்துறை உத்தரவு

மாதிரிப் படம்

பள்ளிகளில் மாணவர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

 • Share this:
  கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் 9, 10, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 22ம் தேதி முதல் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆன்லைன் மூலமாக அவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வரும் சூழலில், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடைபெறுகின்றன.

  இந்நிலையில், தமிழகத்தில் தற்போது கொரோனா 2வது அலை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி, தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், பள்ளி கல்வித்துறைக்கு வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது.

  அதன்படி, வகுப்பறைகளில் மாணவர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி அமர வைக்கப்பட வேண்டும் என்றும், மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

  மாணவர்களுக்கு வெப்பநிலை பரிசோதனை அவசியம் செய்யப்பட வேண்டும் என்றும், ஒவ்வொரு வகுப்பறையிலும் சானிடைசர் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  மதிய உணவு சாப்பிடும் போது மாணவர்கள் தனியாக அமர்ந்து சாப்பிடுவதை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ள குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம்,

  வகுப்பறை ஜன்னல், கதவுகள் கிருமி நாசினி மூலம் தினமும் சுத்தப்படுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

  ஒவ்வொரு வகுப்பறையிலும் கொரோனா விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை வைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  இந்த சுற்றறிக்கையை, மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித்துறை அனுப்பியுள்ளது.
  Published by:Vijay R
  First published: