தாத்தாவுக்காக ஆக்சிஜன் கேட்டு ட்விட்டரில் பதிவிட்ட பேரன்: வதந்தி பரப்பியதாக கிரிமினல் வழக்கு தொடர்ந்த உ.பி. போலீஸ்

உ.பி. போலீஸ்.

உத்தரப் பிரதேசத்தில் தன் தாத்தாவுக்காக ஆக்சிஜன் கேட்டு ட்விட்டரில் மன்றாடிய ஷஷாங்க் யாதவ் என்ற நபர் ஆக்சிஜன் இல்லை என்று வதந்தி பரப்புகிறார் என்ற குற்றச்சாட்டில் உத்தரப் பிரதேச போலீசார் அவர் மீது வழக்குத் தொடர்ந்துள்ளது கடும் விமர்சனங்களைக் கிளப்பியுள்ளது.

 • Share this:
  ஆனால் ட்விட்டரில் தன் தாத்தாவுக்கு கோவிட் 19 பாதித்திருப்பதாக ஷஷாங்க் குறிப்பிடவில்லை, இவரது தாத்தா மாரடைப்பினால் காலமானார்.

  டிவிட்டரில் ஆக்சிஜன் கேட்டது ஆக்சிஜன் பற்றாக்குறையை அம்பலப்படுத்தும் வதந்தியாம் உடனே உ.பி போலீஸ் ஷஷாங்க் மீது கிரிமினல் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

  கோவிட் 19 கேஸ்கள் உத்தரப்பிரதேசத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு என்பது இந்தியா முழுதும் உள்ள நிலைமை, இதில் உ.பி. மட்டும் என்ன விதிவிலக்கா? ஆனால் ஆக்சிஜன் இல்லை என்று கூறினாலோ, ஆக்சிஜன் கேட்டு ட்விட்டரிலோ, சமூக ஊடகங்களிலோ ஒருவர் முறையிட்டல் அதனை வதந்தி என்று வழக்குப் போட்டால் அவர்கள் வேறு எந்த ஊடகம் வழியாக தங்கள் கோரிக்கையை வைக்க முடியும் என்று சமூக ஆர்வலர்கள் கொதிப்படைந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

  இந்நிலையில்தான் தன் தாத்தாவுக்கு ஆக்சிஜன் வேண்டி நடிகர் சோனு சூட்டை டேக் செய்து ஷஷாங்க் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். ஷஷாங்க் யாதவ்வின் நண்பர் அன்கிட் இந்தத் தகவலைப் பகிர்ந்து பத்திரிகையாளர் அர்ஃபா கானும் ஷெர்வானி இடம் ஆக்சிஜன் உதவி கேட்டுள்ளார். அவர் மீண்டும் ஆக்சிஜன் கேட்டு மேலும் சிலருக்கு பகிர்ந்துள்ளார். ஷெர்வானி அமேதி எம்.பி ஸ்மிருதி இரானியையும் டேக் செய்து பதிவிட்டுள்ளார்.

  ஆனால் இந்த மெசேஜ் எதிலுமே கொரோனா நோயில் பாதிக்கப்பட்டவருக்காக ஆக்சிஜன் என்று இல்லவே இல்லை. ஸ்மிருதி இரானி மட்டும் பதில் அளித்து ஷஷாங்கை தொடர்பு கொள்ள முயற்சித்ததாகவும் ஆனால் முடியவில்லை என்று தெரிவித்துள்ளார். மாவட்ட மேஜிஸ்ட்ரேட், மற்றும் அமேதி போலீஸிடம் இந்த விவகாரத்தை கவனிக்குமாறு அறிவுறுத்தியதாக ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.

  சில மணி நேரங்களில் ஷஷாங்க் யாதவ் தாத்தா இறந்து விட்டார், ஸ்மிருதி இரானி ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்திருந்தார்.

  ஷஷாங்கின் தாத்தாவுக்கு கோவிட் இல்லை ஆனால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் 88 வயது முதியவரான அவர் மாரடைப்பினால் மரணமடைந்தார்.

  ஏன் அவர் கோவிட் போல் ஆக்சிஜன் வேண்டும் என்று ட்விட்டரில் பதிவிட்டு அனைவரையும் பதற்றப்படுத்த வேண்டும் என்று போலீஸார் கேள்வி எழுப்பியுள்ளனர்.

  இந்நிலையில் தனியார் ஆங்கில தொலைக்காட்சியில் போலீஸ் உயரதிகாரி தினேஷ் குமார் கூறும்போது, ஷஷான்க் அமேதிக்கு ராஜஸ்தானிலிருந்து ஏப்ரல் 25ம் தேதி வந்துள்ளார். இவரது தாத்தா உடல் நலமின்மை அடைந்தவுடன் ஆக்சிஜன் கேட்டு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். நடிகர் சோனு சூட்டையும் டேக் செய்துள்ளார். அவர் ஆக்சிஜன் சிலிண்டர் வேண்டும் என்று கேட்க வேண்டிய இடத்தில் கேட்கவும் இல்லை, அவரது தாத்தா கோவிட் நோயாளியும் அல்ல” என்றார்.

  இதனையடுத்து ஆக்சிஜன் தட்டுப்பாடு உள்ளது என்ற வகையில் ட்வீட் செய்ததற்காக அவர் மீது வழக்கு தொடர்ந்துள்ளதாக தினேஷ் குமார் தெரிவித்தார். இனி இவ்வாறு செய்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் எச்சரித்துள்ளார்.
  Published by:Muthukumar
  First published: