தமிழகத்துக்கு ₹ 9,000 கோடி நிதி... ஏழைக் குடும்பங்களுக்கு தலா ₹10,000.. அரசு ஊழியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வுகள்: பிரதமரிடம் திமுக கோரிக்கை

"சிறுகுறு தொழில்கள் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்பட உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுகிறோம்."

தமிழகத்துக்கு ₹ 9,000 கோடி நிதி... ஏழைக் குடும்பங்களுக்கு தலா ₹10,000.. அரசு ஊழியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வுகள்: பிரதமரிடம் திமுக கோரிக்கை
திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு, பிரதமர் மோடி.
  • Share this:
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சார்பாக, திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு  பிரதமர் மோடியிடம் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனையில் பங்கேற்றார்,

அதில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகளுக்கு திமுக உறுதுணையாக நிற்கும் என்றார். பிரதமரைப் போல தமிழக முதல்வரும் தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்களின் கருத்துகளைக் கேட்டு, ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று கூறிய அவர், இது பற்றிய திமுக தலைவர் ஸ்டாலினின் கோரிக்கைகள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டுள்ளதாக வருத்தம் தெரிவித்தார்.

அரசின் நிர்வாகத்துறை, சுகாதாரத்துறை, காவல்துறை, உள்ளாட்சித் துறை ஆகியவற்றின் அதிகாரிகளுக்கும், பணியாளர்களுக்கும், அலுவலர்களும் ஓய்வு சிறிதுமில்லாமல் உழைத்து வருவதற்கு நன்றி கூறிய அவர், ”நாடாளுமன்ற உறுப்பினர் ஒவ்வொருவரும் - தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாயை கொரோனோ ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு வழங்கிட வேண்டுமென்று எங்கள் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவுரை வழங்கினார்.


அதைபோல, எங்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகம் இயங்கும் ‘அண்ணா அறிவாலய’ வளாகத்திலுள்ள 'கலைஞர் அரங்கத்தை' - கொரோனோ ஒழிப்பு நடவடிக்கைக்குப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்” என்று குறிப்பிட்டார்.

மேலும் அவர் தெரிவித்ததாவது: ”நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பை திரும்பப் பெற வேண்டுமென எங்கள் திமுக சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

ஏனெனில், மாநில அரசினால் செய்ய முடியாமல் போன, மக்களுக்கு உடனடியாகத் தேவைப்படும் சில முக்கியமான பணிகளை உடனுக்குடன் நிறைவேற்றித் தந்து, மக்களுக்கு மகிழ்ச்சியையும் - மனநிறைவையும் அளிப்பதில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த தொகுதி மேம்பாட்டு நிதி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இதை இரண்டு ஆண்டுகளுக்கு நிறுத்துவது - நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடமைகளையும் பணிகளையும் முடக்குவது போலிருக்கிறது. எனவே, தொகுதி மேம்பாட்டு நிதி ரத்து செய்யப்படுவதைக் கைவிடுமாறு எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சார்பில் மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.Also read: எம்.பி.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் கைவைப்பதா? - சீமான் ஆவேசம்

தமிழகத்தில் 1 லட்சம் பேர் வரை கொரோனோ நோய்த் தடுப்புப் பணியில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். அவர்களை கொரோனோ சோதனை செய்யப்படுவதற்கான ஐ.சி.எம்.ஆர். (I.C.M.R) சோதனைக் கருவிகள் போதுமான அளவில் இல்லாத காரணத்தால், இந்த I.C.M.R கருவிகள் அதிகம் கிடைக்க ஆவன செய்து, தனிமைப் படுத்தப்பட்டுள்ளோரிடமும், பிறரிடமும் சோதனை நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட மத்திய அரசு உதவிட வேண்டுகிறோம்.

தமிழக டாக்டர்களிடம் தனிநபர் பாதுகாப்பு சாதனம் (Personal Protected Equipment) இல்லாததால், அவர்கள் எச்.ஐ.வி. நோய்க்கான சாதனங்களைப் பயன்படுத்த வேண்டிய நெருக்கடியில் உள்ளனர். இதன் பொருட்டு, இந்த நெருக்கடி தீர, Personal Protected Equipment - வெண்டிலேட்டர்கள், மாஸ்க் கருவிகளை தமிழகத்திற்கு போதிய அளவில் உடனடியாக வழங்கிட வேண்டுகிறோம்.

கொரோனோ தடுப்பு நடவடிக்கைகளை தமிழகத்தில் முழுமையாக நிறைவேற்றுவதற்காகத் தமிழக அரசு கோரியுள்ள 9,000 கோடி ரூபாயை உடனடியாக வழங்கிட வேண்டுகிறோம். மத்திய அரசு, தமிழகத்திற்கு வெறும் 510 கோடி ரூபாயை மட்டும் ஒதுக்கியிருப்பது மிக மிகக் குறைவாகும். மாநில அரசு கேட்ட தொகை ரூபாய் 9,000 கோடியை முழுமையாக வழங்கிட மத்திய அரசை தி.மு.க. சார்பில் வேண்டுகிறேன்.

அதைபோல, புதுச்சேரி அரசுக்குக் கொரோனோ ஒழிப்புப் பணிகளுக்காக இதுவரை எந்த ஒரு நிதியும் மத்திய அரசினால் அறிவிக்கப்படவில்லை. மத்திய அரசு பாரபட்சமின்றி புதுச்சேரி அரசுக்கும் உடனடியாக நிதி வழங்கிட வேண்டுகிறேன். இதனால், தமிழகத்தையும் - புதுச்சேரியையும் மத்திய அரசு புறக்கணிக்கிறதே எனத் தமிழக மக்கள் எண்ண மாட்டார்களா என்பதைச் சிந்தித்து பாரபட்சமின்றி நிதியை ஒதுக்கிட திமுக சார்பில் வேண்டுகிறேன்.

ஈரானில் சிக்கித் தவிக்கும் 300க்கம் மேற்பட்ட மீனவர்களை உடனடியாகத் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை மேற்கொண்டு, அவர்களை தாயகத்திற்கு மீட்டுவர வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். இது குறித்து பிரதமர் அவர்களுக்கும், வெளியுறவுத் துறை அதிகாரிகளுக்கும் பலமுறை கோரிக்கைகள் வைத்தும் இதுவரை அவர்கள் மீட்கப்படவில்லை. எனவே உடனடியாக நடவடிக்கைள் மேற்கொண்டு அவர்களை தாயகத்திற்கு மீட்டுவர வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

ஏழை - எளிய தொழிலாளர்கள் புலம் பெயர்ந்து வந்து ஆங்காங்கே தங்கியுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு, உடை முதலியவை தடையின்றி கிடைக்க உதவிட மாநில அரசுக்கு உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

அதைபோலவே, ஊரடங்கு நடவடிக்கைகளை நீட்டிக்க விரும்பினால், வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு தலா 5000 வீதம் இரண்டு தவணைகளில் மொத்தம் 10,000 ரூபாய் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

கொரோனோ ஒழிப்பில் அயராது போராடி வரும் சுகாதாரப் பணியாளர்கள் - காவல்துறை பணியாளர்கள் - உள்ளாட்சி பணியாளர்கள் என அனைவருக்கும் மூன்று ஊக்க ஊதிய உயர்வுகள் (3 incentivies) உடனடியாக அனுமதிக்க வேண்டும்.

சிறுகுறு தொழில்கள் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்பட உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுகிறோம்.

நிதி நெருக்கடிகளைச் சமாளித்திட 20,000 கோடி ரூபாய்ச் செலவில் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ள புதிய பாராளுமன்றக் கட்டடம் போன்ற பெரிய திட்டங்களை தற்போது தவிர்க்கலாம் என தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும், கொரோனோ ஒழிப்புத் தடுப்பு நடவடிக்கைகளில் நாடு மும்முரமாக ஈடுபட்டிருக்கும்போது, சிலர் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, மத வேறுபாடுகளை புகுத்தும் வகையில் பேச முற்படுவதை பிரதமர் அவர்களும், உள்துறை அமைச்சர் அவர்களும் உடனடியாக தடுத்து நிறுத்திட வேண்டுமென திராவிட முன்னேற்றக் கழகத்தில் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இப்படியாக தொடக்கத்தில் நான் குறிப்பிட்டதைப் போல, கொரோனா ஒழிப்புப் பணிகளில் திராவிட முன்னேற்றக் கழகம் மத்திய அரசுக்கும் - மாநில அரசுக்கும் முழு ஒத்துழைப்பு நல்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Also see:
First published: April 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading