• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • அனுமதி இல்லாமல் சென்னை டூ புதுச்சேரி பயணம்; ஒருவருக்கு கொரோனா தொற்று - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் மீது வழக்கு

அனுமதி இல்லாமல் சென்னை டூ புதுச்சேரி பயணம்; ஒருவருக்கு கொரோனா தொற்று - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் மீது வழக்கு

ஜிப்மர்.

ஜிப்மர்.

ஊரடங்கு விதிகளை மீறி பயணம் செய்த குடும்ப உறுப்பினர்களுள் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்தக் குடும்பத்தினர் ஐவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

  • Share this:
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ஓட்டுநராக பணிபுரிபவர் தியாகராஜன். இவர் தனது கர்ப்பிணி மனைவி சிவசங்கரியுடன் ஜிப்மர் குடியிருப்பில் வசித்து வருகிறார். கடந்த 23ம் தேதி சிவசங்கரிக்கு ஜிப்மர் குடியிருப்பில் வளைகாப்பு நடந்துள்ளது. இதற்காக சென்னையிலிருந்து சிவசங்கரியின் தாய் சாந்தாதேவி, சகோதரர் கணேஷ்குமார் ஆகியோர் எந்த அனுமதியும் பெறாமல் வந்துள்ளனர். வளைகாப்பு முடித்துவிட்டு சிவசங்கரியையும் அவர்கள் சென்னைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், சென்னையிலிருந்த சிவசங்கரியின் தந்தை கலியபெருமாளுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. கொரோனா பீதியால் சென்னைக்கு பதில் புதுச்சேரி ஜிப்மரில் சிகிச்சை பெறலாம் என அவர்கள் திட்டமிட்டனர். இதற்காக சென்னையிலிருந்து மறுநாள் 24ம் தேதி காரில் கலியபெருமாள், சாந்தாதேவி, சிவசங்கரி, கணேஷ்குமார் ஆகியோர் புதுச்சேரிக்கு எந்த அனுமதியும் பெறாமல் வந்துள்ளனர்.

கோரிமேடு எல்லைக்கு வந்தபோது அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த தட்டாஞ்சாவடி கிராம நிர்வாக அதிகாரி ஆறுமுகம் மற்றும் போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது கலியபெருமாளுக்கு சிகிச்சை பெற வந்ததாக தெரிவித்தனர். அவர்களிடம் முழுமையாக நடத்திய விசாரணையில் சென்னைக்கும் புதுச்சேரிக்கும் 2 நாட்களாக எந்தவித அனுமதியுமின்றி வந்து சென்றது தெரியவந்தது.

மேலும், ஒரு காரில் 2 பேருக்கு மேல் பயணம் செய்யக்கூடாது என்ற அரசு உத்தரவையும் மீறியிருந்தனர். தடை உத்தரவை மீறி வளைகாப்பு நிகழ்ச்சியை தியாகராஜன் நடத்தியதும் தெரியவந்தது. இதனையடுத்து, ஜிப்மர் ட்ரைவர் தியாகராஜன் உள்ளிட்ட 5 பேர் மீதும் விஏஓ ஆறுமுகம் புகாரின் பேரில் தன்வந்தரி நகர் போலீசார்   வழக்குப் பதிவு செய்தனர். அவர்கள் அனைவரும் ஜிப்மர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

அப்போது இருதய நோயாளியான கலியபெருமாளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் ஜிப்மர் நிர்வாகத்தினரும், புதுச்சேரி போலீசாரும் அதிர்ச்சியடைந்தனர். நோய்த் தொற்றுடன் இருந்த கலியபெருமாளிடம் இருந்து அவரது மகள் உள்ளிட்ட குடும்பத்தினருக்கு மட்டுமின்றி, வளைகாப்பு நடத்தியதால் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கும் நோய்த் தொற்று பரவியிருக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் வளைகாப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் யார், காரில் பயணித்தபோது எங்கெல்லாம் நிறுத்தினார்கள் என்பன போன்ற அனைத்து விவரங்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றன.






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




Also see:

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Rizwan
First published: