கொரோனா லாக்டவுன் யாருக்கு வரம் தெரியுமா? இவர்களுக்குத்தான்.. ஆய்வில் தகவல்..

கொரோனா லாக்டவுன் யாருக்கு வரம் தெரியுமா? இவர்களுக்குத்தான்.. ஆய்வில் தகவல்..

பறவைகள், விலங்குகள்

கொரோனா லாக்டவுன் காலம் பறவைகள், விலங்குகள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களுக்கு வரமாக அமைந்திருப்பதாக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

  • Share this:
மனிதர்கள் நடமாட்டம் முழுவதுமாக குறைந்திருந்த கொரோனா லாக்டவுன் காலம் பறவைகள், விலங்குகள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களுக்கு வரமாக அமைந்திருப்பதாக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

கடந்த ஆண்டு சீனாவில் உருவான கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் வேகமாக பரவி மனித குலத்துக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக மாறியது. உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு கட்ட கடுமையான ஊரடங்குகளை அறிவித்து வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தனர். வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களும் வீட்டிலேயே முடங்கியிருக்க வேண்டிய சூழல் உருவானது. ஆனால், இந்த காலகட்டத்தில் பறவைகள், விலங்குகள் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

கொரோனா லாக்டவுனில் வாகனங்களின் செயல்பாடு முடங்கியிருந்ததால் இரைச்சல் உள்ளிட்ட ஒலி மாசுபாடு இல்லாமல் இருந்தது. இது பறவைகளுக்கு பெரும் உதவியாக இருந்துள்ளது. தங்களின் ஒலி மூலம் நீண்ட தூரத்தில் இருக்கும் மற்றொரு பறவைகளை எளிதாக அவை தொடர்புகொள்ள முடிந்துள்ளது. இதனால், பறவைகளின் இனப்பெருக்கம் அதிகரித்துள்ளதுடன், இரைக்காக தாக்க வருபவர்களிடம் இருந்தும் தற்காத்துக்கொண்டுள்ளது. காட்டுப்பகுதியில் மட்டுமே உலாவிக் கொண்டிருந்த பறவைகள் கொரோனா காலத்தில் நிலவிய அமைதியின் காரணமாக நகரப்பகுதிகளிலும் பெருமளவில் உலாவின. 

நகரப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கும், கூட்டம் கூட்டமாக பறவைகள் செல்வதை பார்ப்பது புது அனுபவமாக இருந்தது. கொரோனா லாக்டவுன் காலங்களில் விலங்குகளின் வாழ்க்கைத் தரம் குறித்து ஆய்வு நடத்திய டி.டபிள்யூ அமைப்பு, வாகனங்களால் எழுப்பப்படும் சத்தம் சிறிய வரிக்குதிரைகளின் வளர்ச்சியை வெகுவாக பாதிக்கும் என தெரிவித்துள்ளது. ஆனால், கொரோனா காலத்தில் வாகனங்கள் இயக்கம் முற்றிலுமாக முடங்கியதால், அது சிறிய வரிக்குதிரைகள் இயல்பாக வளருவதற்கான சூழல் ஏற்படுத்திக்கொடுத்ததாக அந்த அமைப்பு கூறியுள்ளது. 

லாக்டவுன் காலத்தில் மான்களின் நடமாட்டமும் பொதுவெளியில் அதிகமாக இருந்ததை காணமுடிந்ததை சுட்டிக்காட்டியுள்ள அந்த அமைப்பு, வாகனங்களால் எழுப்பப்படும் ஒலி விலங்குகளுக்கு ஒருவித அச்ச உணர்வை ஏற்படுத்தும், அந்த சத்தங்கள் இல்லாததால் பயமின்றி மான்கள் பொதுவெளியில் சுற்றித்திரிந்ததாக தெரிவித்துள்ளது. அசாமில் குடியிருப்பு பகுதிகள் மற்றும் திருப்பதி மலைக்கோவில் உள்ளிட்ட பல இடங்களில் மான்கள் பயமின்றி உலவியதை அதற்கு எடுத்துக்காட்டாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஜப்பான் நாராவிலும் சுதந்திரமாக மான்கள் உலவின.

கடல்வாழ் உயிரினங்களின் வாழ்க்கைத்தரமும் கொரோனா காலத்தில் சிறப்பாக இருந்தது தெரியவந்துள்ளது. பொதுவாக, சத்தமில்லாத கடல் பகுதிகளில் இருப்பதற்கு திமிலங்கள் விரும்புகின்றன. கடல்பகுதியில் செல்லும் கப்பல்கள் எழுப்பும் சத்தம் திமிங்கலங்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. ஆனால், கொரோனா காலத்தில் கப்பல் இயக்கம் இல்லதாததால், திமிங்கலங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 

நீண்ட தூரத்தில் இருக்கும் மற்றொரு இணையை, ஒலி எழுப்பி திமிங்கலங்கள் தொடர்புகொள்ள முடிந்ததாக தெரிவிக்கும் ஆய்வாளர்கள், அழிந்து வரும் ஹம்பேக் திமிங்கலங்கள் அதிகரிக்கப்பதற்கான காலமாகவும் லாக்டவுன் இருக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில், ஓநாய்கள் வகையைச் சேர்ந்த கொயோட்டுகள் தெருக்களில் உலவின. இங்கிலாந்தில் முள்ளெலிகள் அதிகமாக காணப்பட்டன. இந்தியாவின் ஒடிசாவில், கஹிர்மாதா கடற்கரையில் ஐந்து லட்சம் ஆபத்தான ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகள் காணப்பட்டன. இதன்மூலம், கொரோனா காலம் விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் ஒரு வரமாக இருந்திருப்பதை உணர முடிவதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
Published by:Gunavathy
First published: