CoronaVirus : கேரளாவில் ஆம்புலன்ஸ் தட்டுப்பாடு.. வாடகை வாகனங்களை ஆம்புலன்ஸாக மாற்றிய கொச்சி நபர்!

வாடகை வாகனங்களை ஆம்புலன்ஸாக மாற்றிய கொச்சி நபர்

மாநிலத்தில் ஆம்புலன்ஸ்கள் பற்றாக்குறை இருப்பதாக தெரிவித்த அவர், அதற்கு தீர்வு காண இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாக தெரிவித்து?

  • News18
  • Last Updated :
  • Share this:
கேரளாவில் கொரோனா பாதிப்புகள் பெருமளவில் அதிகரித்து வருவதால், மருத்துவமனை படுக்கைகள் மற்றும் ஆம்புலன்ஸ்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கொச்சியை சேர்த்த 'டெம்போ டிராவலர்ஸ்' உரிமையாளர் நஜீப் வெள்ளக்கல் தனது வாகனங்களை ஆம்புலன்ஸாக மாற்றி மக்களுக்கு உதவும் சேவையில் ஈடுபட்டுள்ளார். மாநிலத்தில் ஆம்புலன்ஸ்கள் பற்றாக்குறை இருப்பதாக தெரிவித்த அவர், அதற்கு தீர்வு காண இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ANI உடன் அவர் பேசியதாவது, "எனது ஊழியர்களில் ஒருவருக்கு பரிசோதனை செய்தபோது கொரோனா இருப்பது உறுதியானது. பின்னர், அவரை பாலக்காட்டில் உள்ள அவரது சொந்த ஊருக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் கிடைக்கவில்லை. ஆம்புலன்ஸ் பெற நாங்கள் கடுமையாக முயற்சித்தோம். அது கிடைக்காததன் விளைவாக, அவரை பாலக்காடுக்கு அழைத்துச் செல்ல எனது வாகனங்களில் ஒன்றைப் பயன்படுத்தினோம்.

நாங்கள் வாகனத்தின் இருக்கைகளை அகற்றி, ஓட்டுநரின் அறையை பிளாஸ்டிக் தாளைப் பயன்படுத்தி பிரித்து, டிரைவரை பிபிஇ கிட் அணியச் செய்தோம். அப்போது தான், இந்த சூழ்நிலையில் சாதாரண மக்களுக்கு ஆம்புலன்ஸ் கிடைப்பது கடினம் என்று என்னால் உணர முடிந்தது. இந்த கொடிய வைரஸின் பயம் காரணமாக வேறு எந்த வாகனங்களும் ஆம்புலன்சாக பயன்படுத்தப்படுவதில்லை. மேலும் கேரளாவில் ஆம்புலன்ஸ் பற்றாக்குறை உள்ளது. அதனால்தான் நான் எனது டெம்போ ட்ராவெல்ஸை ஆம்புலன்ஸாக மாற்ற முடிவு செய்தேன்" என்று அவர் கூறியுள்ளார்.

வெள்ளக்கல் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக 'டெம்போ டிராவலர்ஸ்' வாடகை வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும், வாகனத்தை அம்புலன்ஸாக மாற்றும் முடிவுக்கு வந்தபோது, தனது ஓட்டுநர்களில் 75 சதவீதம் பேர் என்னை அழைத்து இந்த நெருக்கடியில் ஆம்புலன்ஸ் ஓட்டத் தயாராக இருப்பதாகக் கூறினர் என்று வெள்ளக்கல் கூறினார்.

தனது யோசனைக்கு கொச்சி மேயரும் பிராந்திய போக்குவரத்து அதிகாரியும் (ஆர்.டி.ஓ) பாராட்டு தெரிவித்து சேவையை ஆரம்பிக்க தன்னை அழைத்ததாகவும், அவர்களின் முழு ஆதரவையும் தனக்கு அளிப்பதாக கூறியதாகவும் வெல்லக்கல் மேலும் தெரிவித்தார். சோதனை அடிப்படையில் ஒரு வாகனத்தை COVID ஆம்புலன்சாக மாற்றவும் அவர்கள் பரிந்துரைத்தனர் என்று கூறினார். அவரது வாடகை வாகனங்களை ஆம்புலன்ஸாக மாற்றுவதற்கு சுமார் ₹ 25,000 செலவாகும் என்று தெரிவித்தார்.

Also read... கேரளாவில் சுழன்றடிக்கும் கொரோனா: ஒரே நாளில் 38,670 பேருக்கு தொற்று உறுதி!

இருப்பினும், மக்களுக்கு சேவை செய்யும் நோக்கத்துடன் அந்த தொகையை செலவிட அவர் தயாராக இருப்பதாக கூறினார். மேலும் இந்த ஆம்புலன்ஸ்கள் மலிவு விலையை வசூலிக்கும் என்றும், அந்த தொகை ஓட்டுநருக்கு சம்பளம் கொடுப்பதற்கும் வாகனத்திற்கு எரிபொருளைப் பெறுவதற்கும் போதுமானதாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஏப்.28ம் தேதி நிலவரப்படி, கேரளாவில் புதிய உச்சமாக ஒரேநாளில் 35 ஆயிரத்து 13 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரளாவில் இதுவரை பதிவான அதிகபட்ச ஒருநாள் கொரோனா பாதிப்பு இதுவாகும். இதனால், அம்மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 14 லட்சத்து 95 ஆயிரத்து 377 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2,66,646 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 12,23,185 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,211 ஆக அதிகரித்துள்ளது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: