கொரோனாவுக்குப் பலியான இந்து ஒருவரின் உடலை எரிக்க அனுமதி தந்த கிறித்துவக் கல்லறை- பினராயி விஜயன் நெகிழ்ச்சி

பினராயி விஜயன்

கேரளாவில் கொரோனாவினால் மரணமடைந்த கே.ஸ்ரீநிவாஸ் (86) என்பவரது உடலை செயிண்ட் ஜார்ஜ் தேவாலயக் கல்லறையில் எரிக்க அனுமதிக்கப்பட்டது பாராட்டுகளைக் குவித்து வருகிறது.

 • Share this:
  கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள கத்தோலிக்க தேவாலயம் இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவரின் உடலை எரிக்க அனுமதித்தது  முதல்வர் பினராயி விஜயனின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

  கோவிட்டால் பாதிக்கப்பட்டு செவ்வாயன்று மரணமடைந்தார் 86 வயது கே.ஸ்ரீநிவாஸ் தமிழ்நாட்டிலிருந்து கேரளாவுக்கு புலம் பெயர்ந்தவர். இவர் இறந்த இடமான எதாதுவாவில் பொது எரியூட்டு மேடை கிடையாது. இவரது குடும்பத்தினர் 5 பேரும் கொரோனா பாசிட்டிவ் என்பதால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் கனமழையினால் இவரது வீட்டைச் சுற்றி மழை நீர் தேங்கியிருந்தது.

  எதாத்துவா கிராம அதிகாரி எம்.டி.தாமஸ் கூறுகையில், “மருத்துவமனையில் பல மரணங்கள் ஏற்படுகின்றன. இதனால் மார்ச்சுவரியில் உடலை நீண்ட நேரம் வைத்திருக்க முடியவில்லை. இதனையடுத்து ஸ்ரீநிவாஸ் உடலை எரிக்க சர்ச் பாதிரியார் மேத்யூ சூரவாடியிடம் அனுமதி கேட்டோம். அவர் சிறிது நேரம் யோசித்து பிறகு ஆலோசனை நடத்தி தங்கள் தேவாலயக் கல்லறையில் உடலை எரிக்கலாம் என்று அனுமதி அளித்தார்” என்றார்.

  பாதிரியார் மேத்யூ இந்தச் செய்கை தனது கடமையும் பொறுப்புமாகும் என்றார். “இது கொரோனா பெருந்தொற்று காலத்தின் ஒரு வழக்கத்துக்கு விரோதமான நாள். நெருக்கடி தருணத்தில் தேவைப்படுவோருக்கு உதவி அளிக்க வேண்டும். ஒரு இந்துவின் உடலை எரிக்க அனுமதி தந்ததன் மூலம் கிறித்த்துவத்தின் கருணை, அன்பு போன்ற தத்துவத்தை நிரூபிக்க ஒரு தருணமாகும். இதைத்தான் நாங்களும் உபதேசித்து வருகிறோம்” என்றார்.

  இதனையடுத்து முதல்வர் பினராயி விஜயன் கூறும்போது, “செயிண்ட் ஜார்ஜ் தேவாயலத்தின் இந்த சிறப்பான செயல், அதாவது ஒரு இந்துவின் உடலை கல்லறையில் எரிக்க அனுமதித்தது மிகவும் பாராட்டுதலுக்குரியது” என்றார்.
  Published by:Muthukumar
  First published: