• HOME
  • »
  • NEWS
  • »
  • coronavirus-latest-news
  • »
  • எட்டுவழிச் சாலை: போராடமுடியாத நிலையை அரசு தனக்குச் சாதகமாக்கிக்கொள்கிறது - கனிமொழி எம்.பி குற்றச்சாட்டு

எட்டுவழிச் சாலை: போராடமுடியாத நிலையை அரசு தனக்குச் சாதகமாக்கிக்கொள்கிறது - கனிமொழி எம்.பி குற்றச்சாட்டு

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி.

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி.

போராட முடியாத நிலையை அரசு தனக்குச் சாதகமாக்கிக்கொண்டு எட்டுவழிச் சாலை திட்டத்தை நடைமுறைப்படுத்த முனைவதாக கனிமொழி எம்.பி குற்றம் சாட்டியுள்ளார்.

  • Share this:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள லிங்கம்பட்டி, கோவில்பட்டி பாரதிநகர், இந்திரா நகர், வானரமுட்டி, ஆத்திகுளம் உள்ளிட்ட பகுதியில் கொரோனா ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்கள், இசைக்கலைஞர்கள், தூய்மைப் பணியாளர்கள் என மூவாயிரம் பேருக்கு உணவுப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று.

இதில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்துகொண்டு உணவுப் பொருள்களை வழங்கினார். முன்னதாக மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டி பொது மக்களுக்கு வழங்கினார். இதில் திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளரும், எம்.எல்.ஏவுமான கீதாஜீவன் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து கனிமொழி எம்.பி செய்தியாளர்களிடம் பேசுகையில், ”இந்த அரசாங்கம் தனது சொந்த ஆதாயத்துக்காக எட்டுவழிச் சாலையைக் கொண்டுவருவதில் மும்முரமாக இருக்கிறது. எட்டுவழிச் சாலை திட்டத்தை எதிர்த்து பல போராட்டங்கள், எதிர்ப்புகள் வந்ததைப் பார்த்த பிறகும் மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமல், கொரோனா ஊரடங்கு  காலத்தில் பொதுமக்கள் போராடமுடியாத நிலையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு இந்தத் திட்டத்தை நிறைவேற்ற முனைகிறது. இது மக்களுக்கு விரோதமான, மிக மோசமான ஒரு முன்னெடுப்பு. இதை அரசாங்கம் நிறுத்த வேண்டும். அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கப்படும்போது மக்கள் திரண்டு வந்து போராடுவார்கள். இன்னும் அதிகமாக கொரோனா தொற்று பரவ இதுவும் காரணமாக அமையும். இத்தனை தவறுகள் செய்த பிறகும் எட்டுவழிச் சாலை திட்டத்தைத் தொடர்வோம் என்று சொல்லும் மனம் அரசாங்கத்திற்கு எப்படி இருக்கும் என்பது புரியவில்லை.

மத்திய - மாநில அரசாங்கம் மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமல்தான் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. மத்திய அரசு பல திட்டங்களை அறிவித்தாலும் பொருளாதாரத்தை சீர்படுத்தக்கூடிய எந்த அறிவிப்பும் வரவில்லை. தொழிற்சாலை நிறுவனங்கள், விவசாயிகள், சிறு குறு தொழில் நடத்துபவர்கள் என யாருக்கும் மகிழ்ச்சியையும், எதிர்காலம் பற்றிய  நம்பிக்கையையும் தரக்கூடிய திட்டங்களை இதுவரை மத்திய அரசு அறிவிக்கவில்லை.

தமிழகத்துக்கு வெட்டுக்கிளிகள் வராமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். தனியார் மருத்துவமனைகள் கொரோனா சிகிச்சை அளிப்பதற்கான கட்டணத்தை நிர்ணயம்செய்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ரூ. 7500 முதல் 22 ஆயிரம் வரை கட்டண நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. ஆனால், பல தனியார் மருத்துவமனைகளில் அதை மீறி செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

கொரோனா சிகிச்சைக்காக லட்சக்கணக்கில் பணம் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். தமிழக அரசு ஒரு அறிவிப்பைச் செய்துவிட்டு நிறுத்துவதோடு அரசாங்கத்தின் கடமை முடியவில்லை. அது நிறைவேற்றப்படுகிறதா என்பதைப் பார்க்க வேண்டியதுதான் அரசின் கடமை. இரண்டு, மூன்று நாட்கள் சிகிச்சை பெற்றவர்கள் கூட லட்சக்கணக்கில் பணம் கட்டவேண்டிய சூழ்நிலைக்கு உள்ளாக்கப்படுகின்றர்கள்.

அரசிடம் போதுமான படுக்கை வசதி ஏதுமில்லை என்பதால்தான் தனியார் மருத்துவமனைகளைப் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலைக்கு மக்கள் தள்ளப்படுகின்றனர். அவை இந்த அளவுக்குக் கட்டணம் வசூலிப்பதை அரசு பார்த்துக்கொண்டு சும்மா இருக்க கூடாது” என்றார்.


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Also see:

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Rizwan
First published: