கல்லூரிகளை கொரோனா சிகிச்சைக்காக மாற்றுங்கள் - கமல்ஹாசன் வலியுறுத்தல்

கல்லூரிகளை கொரோனா சிகிச்சைக்காக மாற்றுங்கள் - கமல்ஹாசன் வலியுறுத்தல்

கமல்ஹாசன்

தமிழகம் முழுவதும் கல்லூரிகளை கொரோனா சிகிச்சைக்காக மாற்றவேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

  • Share this:
    மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் உச்சத்தில் இருந்தபோது கல்லூரிகள், சமூக நலக் கூடங்கள் கொரோனா சிகிச்சை வார்டுகளாக மாற்றப்பட்டன. தற்போது, கொரோனா இரண்டாவது அலை மிகவும் தீவிரம் அடைந்துவருகிறது. மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள். படுக்கை வசதிகளை அதிகரிக்க சென்னையில் ஓரிரு கல்லூரிகள் கொரோனா சிகிச்சை வார்டுகளாக மாற்றுவதற்கான ஏற்பாடுகள் நடந்துவருவதாக அறிகிறேன். இந்த எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டும். மின்சாரம், குடிநீர் வசதி, கழிவறைகள் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக உள்ள கல்லூரிகளை மற்ற மாவட்டங்களிலும் கொரோனா வார்டுகளாக மாற்ற அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் எண்ணிக்கையும் தேவைக்கேற்ப அதிகரிக்கப்பட வேண்டும்.

    தமிழகத்தில் உயர்தர தொழில்நுட்பங்கள், சிறந்த கட்டமைப்பு வசதிகள் கொண்ட பொறியியல் கல்லூரிகள் நிறைய இருக்கின்றன. அவைகளின் உட்கட்டமைப்பு வசதிகளைப் பயன்படுத்தி பொறியியல் மாணவர்களின் திறமையையும் பயன்படுத்தி கொரோனா சிகிச்சைக்குத் தேவையான ஆக்ஸிஜன் உற்பத்தி செய்வதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து செயல்படுத்த வேண்டும்.

    கொரோனா பரவல் சுனாமி போல தாக்குகிறது என சிறப்பு அதிகாரியே சொல்கிறார். வரும் முன் காக்கும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை தமிழக அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

    அதேபோல, மத்திய சுகாதாரத்துறையின் கீழ் செயல்படும் ஹெச்.எல்.எல் லைப் கேர் என்ற பொதுத்துறை நிறுவனத்தின் துணை நிறுவனமான இந்துஸ்தான் பயோடெக் எனும் நிறுவனம் உலகத் தரத்திலான தடுப்பூசிகளை தயாரிப்பதற்காக உருவாக்கப்பட்ட திட்டத்தின்படி இந்த நிறுவனத்தின் மூலம் செங்கல்பட்டு அருகே திருமனியில் 594 கோடி ரூபாய் செலவில் ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகம் அமைக்கப்பட்டது. 100 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த வளாகம் இன்னமும் செயல்படாமல் முடங்கிக் கிடக்கிறது. அதனை செயல்பட விரைவில் நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Karthick S
    First published: