’அரை கொரோனா’ எனக் கேலி செய்தவர்களுக்கு இந்திய பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா பதிலடி!

"'பிறருடைய பண்பாட்டையும் உணவுப் பழக்கத்தையும் கேள்விக்குள்ளாக்குவதற்கு நாம் யார்?' எனக் கடுமையாக சாடியுள்ளார்"

’அரை கொரோனா’ எனக் கேலி செய்தவர்களுக்கு இந்திய பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா பதிலடி!
பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா குட்டா.
  • Share this:
இந்திய பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவை ’அரை கொரோனா’ என சமூக வலைதளங்களில் கேலி செய்தவர்களுக்கு அவர் பதிலடி கொடுத்திருக்கிறார்.

கொரோனா பரவலையொட்டி உலகெங்கும் வாழும் சீனர்கள் மீதும் அவர்களைப் போன்ற முகவடிவம் கொண்ட பிலிபைன்ஸ், ஜப்பான் இந்தோனேசியா முதலான நாடுகளைச் சார்ந்தோர் மீதும் இன ரீதியிலான வெறுப்புணர்வு உருவாகியிருக்கிறது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களைச் சார்ந்தோரும் இதேபோன்ற சிக்கலை எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், தன்னை சமூக ஊடகங்களில் ‘அரை கொரோனா’ என அழைப்பதாக பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா குட்டா இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் எழுதியுள்ளார். சர்வதேச அளவில் இந்தியாவின் சார்பாக விளையாடி உலக தரவரிசையில் 6வது இடம் வரை தொட்ட இவர் இவ்வாறு கூறியிருப்பது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.


ஜுவாலா குட்டாவின் தந்தை ஆந்திராவைச் சேர்ந்தவர்; தாய் சீன நாட்டவர். இதன் காரணமாக அவரை சீனச்சி, அரை சீனக்காரி எனவும் அவருடைய உருவத்தைக் கேலி செய்யும் நோக்கில் ’சிங்கி’ என்றெல்லாம் சொல்லி சமூக வலைதளங்களில் தாக்கி வந்ததாகக் குறிப்பிட்டுள்ள அவர், இப்போது அந்தப் பட்டியலில் ’அரை கொரோனா’ என்பதையும் சேர்த்திருக்கிறார்கள் என்று கூறியுள்ளார். இப்படியான வார்த்தைகள் மூலம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களைச் சார்ந்தோரும் கிண்டல் செய்யப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், தான் எதையும் தாங்கிக்கொள்ளும் தன்மையைப் பெற்றிருப்பினும் “சீன அம்மாவின் பிள்ளையாக வளர்வது அவ்வளவு சுலபமில்லை” என்று குறிப்பிட்டிருக்கிறார். சீனர்களின் உணவுப் பழக்கம் இங்கு பேசப்படுவது குறித்து தெரிவித்த அவர், உலகெங்கும் விதவிதமான உணவுப் பழக்க வழக்கங்கள் இருப்பதைச் சுட்டிக்காட்டி, “பிறருடைய பண்பாட்டையும் உணவுப் பழக்கத்தையும் கேள்விக்குள்ளாக்குவதற்கு நாம் யார்?” எனக் கடுமையாக சாடியுள்ளார்.

தான் சீனர்கள், இந்தியர்கள் என யாரையுமே இப்படி பொதுமைப்படுத்தாமல், அனைவரையும் சமமாகப் பார்க்கும் பரந்த மனப்பான்மை கொண்டுள்ளதாக ஜுவாலா தெரிவித்திருக்கிறார். கொரோனாவை வீழ்த்த வேண்டுமென்றால் இப்படியான கண்ணோட்டம் அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார்.Also see:
First published: April 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading