கொரோனா தடுப்பூசி: எங்கிருந்து வரும்? எப்படி உங்கள் ஊருக்கு வரும்?

கொரோனா தடுப்பூசி: எங்கிருந்து வரும்? எப்படி உங்கள் ஊருக்கு வரும்?

மாதிரி படம்

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், தமிழகத்தில் இன்று கொரோனா தடுப்புமருந்து செலுத்துவதற்கான தயாரிப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.

 • Share this:
  கொரோனா தடுப்பூசி ஜன 13ல் இந்தியாவில் பயன்பாட்டுக்கு வரும் என மத்திய அரசு அறிவித்ததை அடுத்து அதத்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. முதல் கட்டமாக தடிப்பூசி பெறும் மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் கண்டிப்பாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

  இன்று தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறுகிறது. இந்த ஒத்திகையின் போது கொரோனா தடுப்பூசி மையம் எப்படி செயல்பட வேண்டும், COWIN செயலியில் தடுப்பூசி பயனாளர்களின் விவரங்களை எப்படி சரிபார்க்க வேண்டும், தடுப்பூசி போட்டுக் கொண்ட நபரை 30 நிமிடங்கள் கண்காணிக்க, சமூக இடைவெளியுடன் அமர போதிய இடம் இருக்கிறதா, விவரங்களை பதிவேற்றம் செய்ய இணைய வசதி இருக்கிறதா, இரண்டு மணி நேரத்தில் 25 பேருக்கு இந்த நடைமுறைகளை செய்து முடிக்க என்னென்ன சவால்கள் எழுகின்றன என்பவை ஒத்திகை பார்க்கப்படும். ஏற்கனவே கடந்த 2ஆம் தேதி தமிழகத்தில் சென்னை கோவை திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் 17 இடங்களில் தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது.

  சென்னை பெரியமேட்டில் மத்திய அரசின் மருந்து கிடங்கில் 2கோடி தடுப்பு மருந்து சேமித்து வைப்பதற்கான வசதிகள் உள்ளன. இந்த மையத்திலிருந்து கேரளா கர்நாடகா தெலங்கானா ஆந்திரா புதுச்சேரி லட்சத்தீவு அந்தமான் உள்ளிட்ட இடங்களுக்கு கொரோனா தடுப்பு மருந்து வான் வழியாகவோ அல்லது தரை வழியாகவோ அனுப்பப்படும். சாலை மூலம் அனுப்புவதற்கு குளிரூட்டி வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன. இந்தியாவில் பயன்பாட்டுக்கு வர உள்ள கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பு மருந்துகளை 2 முதல் 8 டிகிரி செல்சியஸில் பதப்படுத்தி வைக்க வேண்டும். தடுப்பூசி மத்திய அரசிடம் இருந்து சென்னைக்கு வந்து பல்வேறு மாவட்டங்களில் உள்ள தடுப்பூசி மையத்தை சென்றடையும் வரை 2 முதல் 8 டிகிரி செல்சியஸில் பதப்படுத்தி வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

  தடுப்பு மருந்தை செலுத்துவதற்கு தேவையான 33 லட்சம் சிரஞ்சுகள் மத்திய அரசிடம் இருந்து தமிழகத்துக்கு கிடைத்துள்ளன. அவை மாவட்ட வாரியாக பகிர்ந்து அளிக்கப் பட்டு வருகின்றன. இதைத் தவிர மாநில அரசு சார்பில் 17 லட்சம் சிரஞ்சுகள் இருப்பில் உள்ளன.

  தமிழகத்திற்கு கொடுக்கவேண்டிய தடுப்பு மருந்துகள் எவ்வளவு என முடிவு செய்த பிறகு அவை பெரியமேட்டில் உள்ள மத்திய கிடங்கிற்கோ அல்லது, தேனாம்பேட்டை பொது சுகாதார கிடங்குக்கோ வந்து சேரும். அங்கிருந்து மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டு இருக்கக்கூடிய ஐம்பத்தொரு வாக்கின் குளிரூட்டிகளுக்கு அனுப்பப்படும். அங்கிருந்து மாவட்ட அளவில் உள்ள 2880 பதப்படுத்தும் மையங்களுக்கு அனுப்பப்படும். அங்கிருந்து தமிழகத்தில் தயார் நிலையில் உள்ள 47 ஆயிரத்து 200 தடுப்பு ஊசி போடும் மையங்களுக்கு அனுப்பப்படும்.

  ஒரு தடுப்பூசி மையத்தில் ஒரு நாளுக்கு நூறு பேருக்கு தடுப்பூசி செலுத்த முடியும். இந்த தடுப்பூசியை செலுத்த மாநிலம் முழுவதும் 21 ஆயிரம் செவிலியர்களுக்கு பயிற்சி அளித்து தயார் நிலையில் இருக்கிறார்கள்.

  முதல்கட்டமாக இந்தியா முழுவதும் கொரோனா நேரத்தில் பணியாற்றிய சுகாதார பணியாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் துறையில் பணியாற்றும் மருத்துவர்கள் செவிலியர்கள் மருந்தாளுநர்கள் என 6 லட்சம் பேர் கண்டறியப்பட்டுள்ளன. அவர்களின் விவரங்கள், அடையாள அட்டை, ஆதார் எண் உள்ளிட்டவை பெறப்பட்டு COWIN செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்ட நபர்களுக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்படும்.

  அதன்பின் காவல்துறை தீயணைப்புத்துறை கொரோனா அறிகுறிகளை கண்டறிய வீடு வீடாக சென்று களப்பணியாளர்கள் சில மாவட்டங்களில் ஆசிரியர்கள் ஊடகத்துறையினர் என பல்வேறு முன்கள பணியாளர்களை கணக்கெடுக்கும் பணி பணி நடைபெற்று வருகிறது. அதன்பின் 50 வயதுக்கு மேற்பட்ட இணை நோய்களை கொண்ட முதியவர்களுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக ஆரோக்கியமாக உள்ள முதியவர்களுக்கும் அதன்பின் பொதுமக்களுக்கும் என ஒவ்வொரு கட்டமாக தடுப்பூசியை செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. முன்னுரிமை வழங்கப்படும் பிரிவினருக்கு தடுப்பூசி வழங்கி முடித்த பிறகு, COWIN செயலியில் விருப்பப்படும் பொதுமக்கள் தாங்களாகவே தங்கள் விவரங்களை பதிவேற்றம் செய்யும் வண்ணம் வசதிகள் ஏற்படுத்தப்படும் என கூறப்படுகிறது.

  மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தமிழகத்தில் இன்று கொரோனா தடுப்புமருந்து செலுத்துவதற்கான தயாரிப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.
  Published by:Suresh V
  First published: