ஹோம் /நியூஸ் /கொரோனா /

Indian Railways: 51 நாட்களுக்குப் பிறகு இன்று தொடங்குகிறது ரயில் சேவை!

Indian Railways: 51 நாட்களுக்குப் பிறகு இன்று தொடங்குகிறது ரயில் சேவை!

கோப்புப் படம்

கோப்புப் படம்

Arogyan Sethu: அறிகுறி இல்லாதவர்கள் மட்டுமே ரயிலில் ஏற அனுமதிக்கப்படுவர். முகக் கவசம் அணிவதும், செல்போனில் கொரோனா தொற்றாளர்களை கண்காணிக்கும் ஆரோக்ய சேது செயலி வைத்திருப்பதும் கட்டாயமாகும்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  51 நாட்களுக்கு பின்பு மீண்டும் ரயில் சேவை இன்று தொடங்குகிறது. டெல்லியில் இருந்து சென்னை உள்ளிட்ட 15 நகரங்களுக்கு ரயில்கள் இயக்கப்பட உள்ள நிலையில் அதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. ரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதத்தில் நாடு முழுவதும் ரயில் சேவை நிறுத்தப்பட்டு 51 நாட்களாகிவிட்டன. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வரும் நிலையில் செவ்வாய்கிழமை முதல் டெல்லியில் இருந்து முக்கிய நகரங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

  சென்னை, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட 15 நகரங்களுக்கு முதற்கட்டமாக ரயில்கள் இயக்கப்படுகிறது. இதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.

  இதில், டெல்லியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ரயில் புறப்படும். மறுமார்க்கத்தில் சென்னை சென்ட்ரலில் இருந்து வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ரயில் டெல்லி கிளம்பும்.

  இந்த ரயில் விஜயவாடா, வாரங்கல், நாக்பூர், போபால், ஜான்சி, ஆக்ரா உள்ளிட்ட நகரங்களில் நின்று செல்லும். இதைப்போல டெல்லியில் இருந்து பெங்களூரு, மும்பை, அகமதாபாத், ஹவுரா நகரங்களுக்கு தினமும் சிறப்பு ரயில் இயக்கப்படும்.

  இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு ஐஆர்சிடிசி இணையதளத்தில் மட்டுமே நடைபெறும். ரயில் நிலைய கவுன்டர்களில் முன்பதிவு செய்யப்படாது.

  அதேபோல, ஆர்.ஏ.சி., மற்றும் காத்திருப்போர் பட்டியலிலும் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாது. சூப்பர் பாஸ்ட் ரயிலுக்கான கட்டணமே வசூலிக்கப்படும்.

  ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்னதாக டிக்கெட்டை ரத்து செய்தால் 50 சதவீதம் கட்டணம் திருப்பித் தரப்படும். உறுதி செய்யப்பட்ட ரயில் டிக்கெட் வைத்திருப்பவர்களே பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்பதால்,பொதுப்பெட்டி இருக்காது.

  ரயில் புறப்படுவதற்கு 7 நாட்களுக்கு முன்பாக முன்பதிவு தொடங்கும். ரயிலில் போர்வை எதுவும் வழங்கப்படாது. உணவு தயாரிப்பு பெட்டி இருக்காது என்றபோதும், உணவுப் பொருட்கள் ரயிலில் விற்கப்படும்.

  ஆனாலும் பயணிகள் தங்கள் வீட்டில் இருந்தே உணவு எடுத்து வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ரயில் நிலையத்திற்கு ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பே வந்துவிட வேண்டும். கொரோனா அறிகுறி உள்ளதா என பயணிகள் அனைவரும் பரிசோதிக்கப்படுவர்.

  அறிகுறி இல்லாதவர்கள் மட்டுமே ரயிலில் ஏற அனுமதிக்கப்படுவர். முகக் கவசம் அணிவதும், செல்போனில் கொரோனா தொற்றாளர்களை கண்காணிக்கும் ஆரோக்ய சேது செயலி வைத்திருப்பதும் கட்டாயமாகும்.

  அடுத்த கட்டமாக மேலும் பல வழித்தடங்களில் சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது.

  Also see...

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Indian Railways, Lockdown, Railway