18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி அளிக்க வேண்டும் : இந்திய மருத்துவ கழகம்

கோப்புப் படம்

இந்தியாவின் தினசரி கொரோனா பாதிப்பு 96 ஆயிரமாக குறைந்துள்ளது. இந்தநிலையில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று, பிரதமருக்கு இந்திய மருத்துவ கழகம் கடிதம் எழுதியுள்ளது.

  • Share this:
    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 96982 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.  446 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 50143 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 1,17,32,279 பேரும் பெருந்தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,65,0547 ஆக உயர்ந்துள்ளது. பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 7,88,223 ஆக உயர்ந்துள்ளது. 8 கோடியே 31,10,926 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    டெல்லியில் அதிகரித்து வரும் கொரோனா காரணமாக ஏப்ரல் 30ம் தேதி வரை இரவு ஊரடங்கு அமல்படுத்த டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை மக்கள் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பணிகளுக்கு மட்டுமே விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. உடனடியாக இந்த உத்தரவு அமலுக்கு வருவதாக முதலமைச்சர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று, பிரதமருக்கு இந்திய மருத்துவ கழகம் கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதத்தில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி தங்கள் வசிப்பிடங்களின் அருகிலேயே இலவசமாக கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. பொதுமக்கள் தனியார் பங்களிப்புடன் தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    அத்தியாவசியமற்ற வகையில் இயங்கும் திரையரங்கம், விளையாட்டு, கலாசார, வழிபாட்டு நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பதுடன், சிறிதுகாலம் தொடர் ஊரடங்கு அமல்படுத்த வேண்டும் என்றும் மருத்துவக் கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.

    மேலும் படிக்க... தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புக்கு தடை: தேர்தல் ஆணையம்

    இந்நிலையில், சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சரியாக ஆக்ஸிஜன் செலுத்தப்படாத காரணத்தால், 2 கொரோனா நோயாளிகள் உயிரிழந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்றுக்கு ஆளாகி, உள்நோயாளிகளாக இருந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். ஆக்ஸிஜன் அழுத்தம் குறைவாக செலுத்தப்பட்டதே இருவரின் உயிரிழப்புக்கும் காரணமென குற்றம் சாட்டப்படுகிறது. இதுகுறித்து மருத்துவமனையில் விசாரணை நடைபெறுகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Vaijayanthi S
    First published: