Covid-19 in India | இந்தியா குறித்து அமெரிக்க டாக்டர் பாசி: கொரோனா முதலாவது அலை உச்சத்தில் இருந்த போதே அலட்சியம், முடிவுக்கு வந்து விட்டதாக தளர்வுகள்

கொரோனா

இந்தியாவில் கொரோனா பரவல் முதலாம் அலை உச்சத்தில் இருந்த போதே கட்டுப்பாடுகள் முன் கூட்டியே விலக்கிக் கொள்ளப்பட்டதால் இப்போது இரண்டாம் அலையில் இந்தியா மூழ்கி வருகிறது என்று அமெரிக்க தொற்று நோய் நிபுணரும் அமெரிக்க அரசின் கொரோனா ஆலோசகருமான டாக்டர் ஆண்டனி பாசி தெரிவித்துள்ளார்.

  • Share this:
    இது தொடர்பாக, அமெரிக்க நாடாளுமன்றத்தின் சுகாதாரத் துறை நிலைக் குழுவில் விவாதிக்கப்பட்டது. இந்தியாவில் பரவும் இரண்டாவது அலைக்கான காரணம், அது மற்ற நாடுகளுக்கு கற்றுத் தரும் பாடம் குறித்து, எம்.பி.,க்கள் விவாதித்தனர்.

    அப்போது டாக்டர் ஆண்டனி பாசி கூறியதாவது:

    கொரோனா முதலாவது அலை முடிவுக்கு வந்து விட்டதாக கருதி முன்னதாகவே கட்டுப்பாடுகள் விலக்கி கொள்ளப்பட்டன.மக்களும் அலட்சியமாக செயல்பட்டனர். ஆனால், அப்போதுதான், முதலாவது அலை உச்சத்தில் இருந்துள்ளது. அதன் விளைவுதான், இந்தியாவில் தற்போது இரண்டாவது அலை மிகத் தீவிரமாக இருப்பதற்கு காரணம்.

    இது நமக்கு கற்றுத் தரும் பாடம். தொற்று நோய்களை எப்போதும் அசாதாரணமாக நினைத்து விடக் கூடாது. இதற்கு முன் பல நோய்களை கட்டுப்படுத்திவிட்டோம்; தடுப்பூசி கண்டுபிடித்து விட்டோம் என, சாதாரணமாக இருந்து விட்டோம்.அதனால் தான், மருத்துவ வசதிகளை, கட்டமைப்புகளை நாம் அதிகரிக்கவில்லை. இந்தியாவில் தற்போது ஆக்சிஜன், மருந்து உள்ளிட்டவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதற்கு இதுவே காரணம்.

    மேலும், நம்முடைய நாட்டை மட்டும் பாதுகாத்தால் போதாது. உலகில் ஏதாவது ஒரு மூலையில் இருந்தாலும், கொரோனா போன்ற வைரஸ் மற்ற இடத்துக்கும் பரவும் என்பதை உணர வேண்டும்.

    இதற்கிடையே அமெரிக்காவில் ஏப்ரல் 26ம் தேதி வரை 9 கோடியே 50 லட்சம் மக்களுக்கு வாக்சின் போடப்பட்டுள்ளது. இதில் 9,245 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸின் புதிய வகை மாதிரிகள் வாக்சினுக்கும் கட்டுப்படவில்லை என்பதை இது அறிவுறுத்துவதாக அமெரிக்க மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

    ஏற்கெனவே இருக்கும் கொரோனா வகைமாதிரிகள் வேறு ஒன்றாக உருமாற்றம் அடையும் போடு வாக்சின் திறனையும் ஒன்றுமில்லாமல் செய்து உடலினுள் தொற்றுகிறது என்பதே அமெரிக்க நிபுணர்களின் கவலையாக உள்ளது.

    எனவே அமெரிக்க நோய்க்கட்டுப்பாட்டு அமைப்பு, வாக்சின் தயாரிப்பாளர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளது, அதாவது புதிதாக பரிணாமம் அடையும் புதுவகை உருமாற்ற கொரோனா தாக்கத்தையும் கருத்தில் கொண்டு அவற்றையும் அடக்கும் விதமாக வாக்சின் உட்பொருள்களை மாற்ற நிபுணர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
    Published by:Muthukumar
    First published: