இங்கிலாந்தில் பரவும் புதிய வகை கொரோனா வைரஸால் அச்சம்... விமான போக்குவரத்திற்கு மத்திய அரசு தடை

இங்கிலாந்தில் பரவும் புதிய வகை கொரோனா வைரஸால் அச்சம்... விமான போக்குவரத்திற்கு மத்திய அரசு தடை

கோப்பு படம்

பிரிட்டனில் இருந்து இந்தியா வரும் விமான சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் கூறியுள்ளது.

 • Share this:
  இங்கிலாந்தில் பரவி வரும் புதிய வகை கொரோனா வைரஸால் அந்நாட்டுடனான விமான சேவையை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. பல்வேறு ஐரோப்பிய நாடுகளும் இங்கிலாந்துடனான போக்குவரத்தை துண்டித்துள்ளன.

  இங்கிலாந்தில் புதிய வகை வைரஸ் பரவுவதால் லண்டன் மற்றும் தெற்கு இங்கிலாந்து பகுதிகளில் 4 அடுக்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுவதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்தார். இதனால் பதறிய ஐரோப்பிய நாடுகள் இங்கிலாந்துடனான போக்குவரத்தை ரத்து செய்வதாக அறிவிக்கத் தொடங்கின.

  ஜனவரி ஒன்றாம் தேதி வரை இங்கிலாந்துடனான போக்குவரத்தை ரத்து செய்வதாக முதல் நாடாக நெதர்லாந்து அறிவித்தது. இதனை தொடர்ந்து இங்கிலாந்துடனான அனைத்து போக்குவரத்துகளும் 48 மணி நேரத்திற்கு ரத்து செய்யப்படுவதாக ஃபிரான்ஸ் அறிவித்தது.

  இதனால் விமான சேவைகள், லண்டன் - பாரிஸை இணைக்கும் ரயில் சேவை, சரக்கு வாகன போக்குவரத்து ஆகிய அனைத்தும் நிறுத்தப்பட்டன. ஃபிரான்ஸைப் போலவே அயர்லாந்தும் விமானம் மற்றும் கப்பல் சேவைகளை 48 மணி நேரத்திற்கு ரத்து செய்தது. சரக்கு கப்பல் சேவை மட்டும் தொடர்ந்து இயக்கப்படும் என்றும் செவ்வாய் கிழமைக்குப் பின் தடையை நீட்டிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று அயர்லாந்து கூறியுள்ளது.

  ஜெர்மனியும் சரக்கு விமானங்களை தவிர மற்ற விமானங்கள் இங்கிலாந்தில் இருந்து வருவதற்கு தடை விதித்துள்ளது. இங்கிலாந்தில் இருந்து வரும் ரயில் மற்றும் விமானங்களுக்கு பெல்ஜியம் 24 மணி நேரத் தடை விதித்துள்ளது.

  ஜனவரி 6 ஆம் தேதி வரை இங்கிலாந்து விமானங்களுக்கு தடை விதித்துள்ள இத்தாலி, கடந்த 14 நாட்களுக்குள் இங்கிலாந்து சென்றவர்கள் இத்தாலிக்குள் நுழையவும் தடை விதித்துள்ளது. செக் குடியரசிற்கு வரும் பயணிகள் இங்கிலாந்தில் 24 மணி நேரம் தங்கியிருந்தால், தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

  இவை மட்டுமின்றி சவுதி அரேபியா, இஸ்ரேல், துருக்கி போன்ற மத்திய கிழக்கு நாடுகளும் இங்கிலாந்து விமானங்களுக்கு தடை விதித்துள்ளன.

  இந்நிலையில் பிரிட்டனில் இருந்து இந்தியா வரும் விமான சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் கூறியுள்ளது. பிரிட்டனில் இருந்து இந்தியா வரும் விமானங்களை டிசம்பர் 31-ம் தேதி வரை நிறுத்தி வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. டிசம்பர் 22-ம் தேதி 11.59 மணியில் இருந்து விமானங்கள் நிறுத்தப்படும்.

  மேலும் 22-ம் தேதி இரவுக்குள் பிரிட்டனில் இருந்து வரும் அனைத்து பயணிகளும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்'' எனக் கூறியுள்ளது. பயணக் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் லண்டனை விட்டு வெளியேற விமான நிலையங்களிலும், ரயில் மற்றும் பேருந்து நிலையங்களிலும் மக்கள் கூட்டம் கூட்டமாக குவிந்தனர்.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vijay R
  First published: