கொரோனா 2-ம் அலை: மேலும் 70 லட்சம் பேர் வேலை இழந்தனர்

எகிறும் வேலையிழப்பு.

கொரோனா வைரஸ் தொற்று இரண்டாவது அலையினால் இந்தியா கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது, இந்தக் காலக்கட்டத்தில் மட்டும் மேலும் 70 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர் என்று இந்திய பொருளாதார கணிப்பு மையம் தெரிவித்துள்ளது.

 • Share this:
  இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் இயக்குனர் மகேஷ் வியாஸ் கூறும்போது, “ ஊரடங்கு காரணமாக மார்ச் மாதத்தை ஒப்பிடும்போது ஏப்ரல் மாதத்தில் 75 லட்சம் வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நாட்டின் வேலை இழப்பு சதவீதம் 7.97 -ஐ தொட்டுள்ளது. இதுவே நகர்ப்புறங்களில் 9.78 சதவீதமாகவும், கிராமப்புற வேலையின்மை 7.13 சதவீதமாகவும் உள்ளது.

  மார்ச் மாதத்தில் நாட்டின் வேலையின்மை சதவீதம் 6.50 ஆக இருந்தது. இந்த நிலையில் ஒரு மாதத்தில் 7.97 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று அதிகரிப்பது பற்றி எனக்கு தெரியாது. ஆனால் ஒவ்வொரு நாளும் வேலையிழப்பு அதிகரிப்பதை நான் பார்க்கிறேன். வேலை இழப்பு ஒருபக்கம் அதிகரித்து வரும் சூழலில் தொழிலாளர் பங்களிப்பு வீதமும் குறைந்து வருகிறது. இது மிகவும் ஆபத்தானது” என்று தெரிவித்துள்ளார்.

  “வேலை வாய்ப்பு குறைந்துள்ளது, இது கொரோனா இரண்டாம் அலையினால் இருக்கலாம்” என்று சிஎம்ஐஇ கூறுகிறது. “வைரஸ் இன்னமும் தீவிரமாகவே இருந்து வருகிறது. மெடிக்கல் ஹெல்த் சேவை பக்கத்தில் நாம் இன்னமும் அழுத்தத்தில்தான் இருக்கிறோம். மே மாதத்திலும் பதற்றமாகவே இருக்கும் என்று நினைக்கிறோம்.

  கடந்த ஆண்டு மார்ச்சில் பிரதமர் நரேந்திர மோடி நாடு தழுவிய லாக்டவுனை அறிவித்த பிறகு கோடி கணக்கானோர் வேலை இழந்தனர், குறிப்பாக அமைப்பு சாரா தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர், இந்தியாவின் ஜிடிபியில் 80% பங்களிப்பு செய்யும் அமைப்பு சாரா தொழில்துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதற்காக அறிவிக்கப்பட்ட நிவாரணப் பேக்கேஜ் ஒன்றுமில்லாமல் போனது.

  வாக்சின் போடப்படும் நடைமுறைகளும் மந்தமடைவது இந்திய பொருளாதாரத்தை பெரிய அளவில் பாதிக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.

  ஐஎச்எஸ் மார்கிட் என்ற தனித்த அமைப்பு ஒன்று எடுத்த சர்வேயின் படி ஏப்ரலில் உற்பத்தித் துறையில் கடும் வேலையிழப்புகள் ஏற்பட்டுள்ளன. நகர்ப்புறங்களில் வேலையின்மை அதிகரித்து வருவதால் தொழிலாளர்கள் கிராமங்களுக்குத் திரும்புகின்றனர் என்கிறது சிஎம்ஐஇ. தனிநபர் வருமானம் குறைகிறது, இது பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் முட்டுக்கட்டை என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
  Published by:Muthukumar
  First published: