இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒரு வாரத்தில் 23% சரிவு- உலகச் சுகாதார அமைப்பு அறிக்கை

உலகச் சுகாதார அமைப்பு (WHO)

இந்தியாவில் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கடந்த ஒரு வாரத்தில் 23 சதவீதம் குறைத்துள்ளது. இருந்தும் உலகளவில் அதிகளவு பாதிப்பில் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது' என, உலக சுகாதார அமைப்புத் தெரிவித்துள்ளது.

 • Share this:
  உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

  கடந்த ஒரு வாரத்தில் உலகளவில் கொரோனாவில் புதிதாக பாதிக்கப்படுவோர், உயிரிழப்போர் எண்ணிக்கை சரிந்துள்ளது. உலகளவில் புதிதாக 41 லட்சம்பேர் புதிதாக தொற்றுக்கு ஆளாகினர்; 84 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். தொற்றில் 14 சதவீதமும், உயிரிழப்பில் 2 சதவீதமும் முந்தைய வாரத்தோடு ஒப்பிடுகையில் குறைந்துள்ளது.

  இந்தியாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் பி.1.617 வகை வைரஸ் தற்போது உலகளவில் 53 நாடுகளுக்குப் பரவியுள்ளது. இந்த வகை வைரஸ்கள் மூன்று வகைகளாக உள்ளன.

  பி.1.617.1, பி.1.617.2, பி.1.617.3 ஆகிய பிரிவுகளில் உள்ளன. பி.1.617.1 வகை வைரஸ்கள் 41 நாடுகளிலும், பி.1.617.2 வகை உருமாற்ற வைரஸ் 54 நாடுகளிலும், பி.1.617.3 வகை வைரஸ் 6 நாடுகளிலும் கண்டறியப்பட்டுள்ளன.

  இதில் பி.1.617 வகை உருமாற்றம் அடைந்த வைரஸ் கவலைக்குரியதாக இருக்கிறது. இந்த வகை வரைஸ் அதிகமாகப் பரவும் சக்தி கொண்டதாகவும், நோயின் தீவிரத்தை அதிகப்படுத்துவதாகவும் உள்ளது.

  கடந்த 7 நாட்களில் இந்தியாவில் 18 லட்சத்து 46 ஆயிரத்து 55 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டனர் இது 23 சதவீதம் குறைவாகும். பிரேசிலில் 4.51 லட்சம் பேர் புதிதாக தொற்றுக்கு ஆளாகினர் இது 3 சதவீதம் குறைவாகும். இந்தியாவில் கடந்த வாரத்தில் 28,292 பேர் உயிரிழந்தனர். 10 லட்சம் பேருக்கு 2.1 பேர் உயிரிழந்தனர். இது 4 சதவீதம் அதிகமாகும்.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாகக் கொரோனா தொற்றியவர்கள் எண்ணிக்கை கடந்த 44 நாட்களுக்குப் பிறகு 2 லட்சத்துக்கும் கீழ் குறைந்து 1.86 லட்சம் பேருக்கு புதிதாகக் கொரோனா தொற்றியுள்ளது.

  பலி எண்ணிக்கையும் 4,000த்திற்கும் கீழ் குறைந்து கடந்த 24 மணி நேரத்தில் 3,660 பேர் மரணித்துள்ளனர். இதன் மூலம் பலி எண்ணிக்கை 3,18,895 ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் ஒரேநாளில் 21,273 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது, பலி எண்ணிக்கை ஒரேநாளில் 884 ஆக இருந்தது. தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, உ.பி. ஆகிய மாநிலங்களில் தொற்று எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
  Published by:Muthukumar
  First published: