முகப்பு /செய்தி /கொரோனா / Sputnik V: ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி இந்தியா வந்தடைந்தது!

Sputnik V: ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி இந்தியா வந்தடைந்தது!

தடுப்பூசி

தடுப்பூசி

ரஷ்யா தயாரித்துள்ள  கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக்-வி  இன்று இந்தியாவின் ஹைதராபாத் வந்தடைந்தது

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

ரஷ்யா தயாரித்துள்ள  கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக்-வி  இன்று இந்தியாவின் ஹைதராபாத் வந்தடைந்தது.

இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது  அலை வேகமாக பரவி வரும் நிலையில், பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணியை மத்திய அரசு துரிதப்படுத்தியுள்ளது. 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி ஏற்கனவே தொடங்கியது.

18 வயது முதல் 45 வயது வரை உள்ளோருக்கு தடுப்பூசி போடும் பணி நாடு முழுவதும் இன்று தொடங்கியது. போதிய தடுப்பூசி இல்லாததால் ஒருசில மாநிலங்களில் 18-45 வயதானவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்கவில்லை.

இந்தியாவில் தற்போது  சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்ட், பாரத் பயோடெக்  தயாரித்த கோவாக்சின் மருந்துகள் பயன்பாட்டில் உள்ளன. மூன்றாவதாக ரஷ்யா தயாரித்துள்ள ஸ்புட்னிக்-வி தடுப்பூசிக்கு  இந்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதியளித்தது.

ரஷ்யாவின் ரஷ்ய நேரடி முதலீட்டு நிறுவனம், தொற்றுநோய்வியல், நுண் உயிரியலுக்கான காமாலியா தேசிய ஆய்வு நிறுவனம் தயாரித்துள்ள  ஸ்புட்னிக் தடுப்பூசியை இறக்குமதி செய்ய இந்தியாவில் உள்ள  டாக்டர் ரெட்டிஸ் லெபாரட்ரீஸ்  ஒப்பந்தம் செய்துள்ளது.

அவரசத் தேவைக்காக  ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை பயன்படுத்திக்கொள்ள டாக்டர் ரெட்டிஸ் லெபாரட்ரீஸ் நிறுவனத்துக்கு  இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு  அனுமதி வழங்கியது.

இதையடுத்து,  ஸ்புட்னிக்-வி தடுப்பூசி  இந்தியாவின்  ஹைதராபாத் நகருக்கு இன்று வந்தடைந்தது. முதற்கட்டமாக 1.5 லட்சம் தடுப்பூசிகள் வந்தடைந்துள்ளன. மேலும்  பல லட்சம் தடுப்பூசிகள் விரைவில் இந்தியா வந்தடையும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தொற்றுநோயை எதிர்த்துப் போராட இந்தியாவின் ஆயுதக் களஞ்சியத்தில் ஸ்பூட்னிக்-வி தடுப்பூசி சேர்க்கப்படும் என்றும் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் வரவால் இந்தியாவின்  தடுப்பூசி திறன் அதிகரிக்கும் என்றும்  பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி துரிதமடையும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் உள்ளூர்   தயாரிப்பு பணிகள் விரைவில் தொடங்கும் என்றும்  ஆண்டுக்கு  85 கோடி தடுப்பூசிகள் வரை தயாரிக்கப்படும் என்றும்  ரஷ்ய தூதர் நிகோலே குடசேவ் தெரிவித்துள்ளார்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: COVID-19 Second Wave, Covid-19 vaccine, Russia