Home /News /coronavirus-latest-news /

உயிரைக் காப்பாற்றும் கடவுளர்கள் ஆன கிராம‘குவாக்’ டாக்டர்கள்: கையெடுத்துக் கும்பிடும் பீகார் கிராம மக்கள்

உயிரைக் காப்பாற்றும் கடவுளர்கள் ஆன கிராம‘குவாக்’ டாக்டர்கள்: கையெடுத்துக் கும்பிடும் பீகார் கிராம மக்கள்

பீகார் கிராமத்தில் உயிரைக் காப்பாற்றும் முறைசாரா மருத்துவர்கள்

பீகார் கிராமத்தில் உயிரைக் காப்பாற்றும் முறைசாரா மருத்துவர்கள்

வருடா வருடம் போலி டாக்டர்கள் கைது என்ற செய்திகளை நாம் தவறாமல் தினசரிகளிலும் நாளிதழ்களிலும் மின் ஊடகங்களிலும் பார்த்திருப்போம், ஆனால் அவர்கள் இப்போது கொரோனா பிடித்து ஆட்டும் பீகார் மாநிலத்தின் கிராமங்களில் உயிரைக் காப்பாற்றும் கடவுள்களாக மக்களால் கும்பிடப்படுகின்றனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
இவர்கள் தங்கள் இருசக்கர வாகனங்களிலோ, சைக்கிளிலோ கிராமம் கிராமமாகச் சென்று மிதமான கொரோனா அறிகுறிகள் உள்ளவர்களுக்கு சிகிச்சை அளித்து நோய் தொற்று பரவாமலும், தீவிரமடையாமலும் காத்து வருகின்றனர். இது போன்ற மருத்துவர்கள் ஆயிரக்கணக்கில் கிராமங்களில் மக்களுக்கு ஆபத்பாந்தவர்களாக இருந்து வருகின்றனர்.

பீகாரில் கொரோனா நிலைமை மிகவும் மோசம் ஏனெனில் அங்கு மருத்துவ உட்கட்டமைப்பு என்றால் என்னவென்றே தெரியாத ஒரு மாநிலமாகும். முந்தைய லாலு ஆட்சியும், ‘வளர்ச்சி’கூட்டணி வைத்து ஆட்சியமைத்த நிதிஷ் குமார் - பாஜக கூட்டணி ஆட்சியும் வெறும் வார்த்தை ஜாலங்கள், ஆவேசப்பேச்சுகளால் மக்களை ஏமாற்றியதாக அங்கு கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

கிராம மருத்துவர்


2018 புள்ளி விவரங்களின் படி 28,391 மக்களுக்கு ஒரேயொரு அரசு மருத்துவர் என்ற நிலையில்தான் பீகார் உள்ளது. தேசிய அளவில் 11,082 பேருக்கு ஒரு அரசு மருத்துவர் என்பதே குறைவு, அதைவிடவும் மோசமாக உள்ளது பீகார். 2005-ல் வெறும் ரூ.278 கோடிதான் பட்ஜெட்டில் மருத்துவத்துக்கு ஒதுக்கப்பட்டது, ஆனால் 2020-ல் கோவிட் புரட்டிப் போட்டதையடுத்து ரூ.10,000 கோடியாக ஹெல்த் பட்ஜெட் உயர்த்தப்பட்டது. ஆனாலும் என்ன நடந்தது, அது எப்படிப் பயன்படுத்தப்பட்டது, மருத்துவத் திட்டங்கள் என்னவென்பதெல்லாம் புரியாத புதிர்தான்.

இந்நிலையில்தான் கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று தொடங்கியது முதல் குவாக்ஸ் என்று அழைக்கப்படும், போலி மருத்துவர்கள் என்று அரசால் ஆண்டாண்டு கைது செய்யப்படும் முறைசாரா மருத்துவர்கள் கிராமப்பகுதிகளில் தங்கள் கைவைத்தியம் மூலம் நிவாரணம் அளித்து வருகின்றனர்.

பம்பாலி கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணா யாதவ் என்பவர் ஆங்கில ஊடக நிருபரிடம் கூறும்போது, “கிராமங்களில் அனைத்து தனியார் கிளினிக்குகள், மருத்துவமனைகள் மூடியே கிடக்கின்றன. எங்களுக்கு இந்த கிராம மருத்துவர்களை விட்டால் வேறு கதி ஏது?” என்கிறார்.

கிராம மக்களுக்கு உயிரைக்காப்பாற்றும் கடவுள்கள்தான் இந்த கிராம மருத்துவர்கள் என்கிறார் கிருஷ்ணா யாதவ். இதே கிராமத்தைச் சேர்ந்த குமார் யாதவ் என்பவர் கூறும்போது, பெரிய மருத்துவமனைகளில் விஷத்தைக் கொடுப்பார்கள், இறந்த உடலை அவர்களே எரித்து விடுவார்கள், என்றார், பீகார் கிராமங்களில் பெரிய மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள் பற்றி இப்படிப்பட்ட பிம்பம்தான் கிராமங்களில் உள்ளது.இந்த குவாக் மருத்துவர்கள் அல்லது கிராம கைவைத்திய மருத்துவர்களும் அலோபதி மருந்துகளுடன் ஆயுர்வேதம், சித்தா, ஹோமியோபதி என்று கலந்துகட்டி கொடுத்து மிதமான கொரோனா அறிகுறிகள் உள்ளவர்களுக்கு ஒரு ரிலீஃப் அளிக்கின்றனர். ஜோலா-சாப் என்று அழைக்கப்படும் இந்த குவாக் டாக்டர்கள் அப்படி மருத்துவம் தெரியாமல் குருட்டாம்போக்கில் அடிப்பவர்கள் அல்ல, இவர்களும் மருத்துவமனைகளில், மருத்துவர்களிடத்தில் கம்பவுண்டர்களாக, உதவியாளர்களாக இருப்பவர்கள்தான். இவர்கள் கிராமங்களில் தங்கள் வீட்டையே கிளினிக்காக மாற்றி பிராக்டீஸ் செய்து வருகின்றனர்.

சவுரவ் குமார் ஷர்மா என்ற குவாக் டாக்டர் அரா என்ற மருத்துவமனையில் 2 ஆண்டுகள் ஐசியுவில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர், இவருக்கு தெரியாத அலோபதி மருந்துகளே இல்லை,ஆக்சிஜன் வைப்பது முதல் ஊசி போடுவது , சலேன் ஏற்றுவது என்று கைவந்த கலையாகக் கையாள்கிறார்.

இவர், “ஒரு உயிரைக் காப்பாற்றுவதை விட பெரிய சந்தோஷம் என்ன இருக்க முடியும், அதுதான் நல்லுணர்வு” என்கிறார்.

போஜ்பூர் மாவட்டத்தின் பிர்ஹாப் கிராமத்தில் மக்களுக்கு மருத்துவம் பார்த்து வரும் சிபாஹி என்ற மருத்துவர் கூறும்போது, “நான் எப்போதும் பாராசிட்டமால், அஸித்ரால், குளோரோம்பினிகால் மற்றும் வைட்டமின் சி போன்ற மாத்திரைகளை கைவசம் வைத்திருப்பேன். அதனால் எப்போது வேண்டுமானாலும் யாருக்கும் என்னால் சிகிச்சை அளிக்க முடியும் என்கிறார்.

காய்ச்சல், சளி, இருமல், வயிற்றுக்குமட்டல், வயிற்றுப்போக்கு போன்ற சாதாரண நோய் அறிகுறிகளை இவர்கள் சிகிச்சை மூலம் குணப்படுத்துகின்றனர். இதனால் மக்களின் தெய்வமாக இப்போது மதிக்கப்படுகின்றனர்.

இவர்கள் லட்சக்கணக்கில் பீகாரில் இருப்பதாக கூறப்படுகிறது, இவர்களையும் கொரோனா முன் களப்பணியில் இணைத்துக் கொள்ளலாமே என்று ஒரு அரசு முன்னணி அறுவை சிகிச்சை மருத்துவர் ஆலோசனை கூறிய போது அவரை இடைநீக்கம் செய்ததும் குறிப்பிடத்தக்கது.
Published by:Muthukumar
First published:

Tags: Bihar, Corona, Covid-19, COVID-19 Second Wave

அடுத்த செய்தி