COVID-19 Help to India: இந்தியாவுக்கு ஒட்டுமொத்த உதவிகளை உடனடியாக அனுப்புகிறோம்- அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு

ஜோ பைடன், மோடி

இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ளதையடுத்து பல்வேறு நாடுகளும் இந்தியாவுக்கு உதவ முன்வந்துள்ளன, அமெரிக்கா ஒட்டுமொத்த மருத்துவ உதவிகள் உள்ளிட்ட உதவிகளை உடனடியாக அனுப்புவதாக அதிபர் ஜோ பைடன் உறுதியளித்துள்ளார்.

  • Share this:
    திங்களன்று ஜோ பைடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் நீண்ட நேரம் பேசினார். அப்போது இந்தியாவுடன் அமெரிக்கா எப்போதும் உடன் நிற்கும், அமெரிக்காவுக்கு இந்தியா செய்த உதவிகளை மறக்க முடியாது என்றும் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இந்நிலையில் நேற்று வெள்ளை மாளிகை செய்தியாளர்களிடம் ஜோ பைடன் கூறும்போது, “உடனடியாக இந்தியாவுக்கு ஒட்டுமொத்த உதவிகளை அனுப்புகிறோம். ரெம்டெசிவிர், மற்றும் பிற மருந்துகள் உள்ளிட்ட உதவிகளை உடனடியாக அனுப்புகிறோம்.

    அதே போல் வாக்சின் தயாரிப்பதற்கான இயந்திரத்துக்குரிய உதிரி பாகங்களையும் அனுப்புகிறோம்.

    இப்போதைக்கு என்ன பிரச்சினை எனில், நோவாவாக்ஸ் உள்ளிட்ட வாக்சின்கள் கையிலிருப்பதை உறுதி செய்ய வேண்டியுள்ளது. இதனை உறுதி செய்து கொண்ட பின் தடுப்பூசிகளையும் தேவையுள்ள நாடுகளுடன் நாங்கள் பகிர்ந்து கொள்ள முடியும்.

    அமெரிக்கா ஆரம்ப கட்ட கொரோனா காலத்தில் கஷ்டப்பட்ட போது இந்தியா உதவியதை மறக்க முடியாது.

    இந்தியா இப்போது கொரோனா தொற்றுப் பரவலில் தீவிர நிலையை எட்டியுள்ளது. நாளொன்றுக்கு 3 லட்சத்துக்கும் மேல் கொரோனா கேஸ்கள் புதிதாக வந்து கொண்டிருக்கின்றன. இறப்புகள் நாளொன்றுக்கு 2 ஆயிரத்தைத் தாண்டுகிறது. மருத்துவமனைகள் படுக்கைகள், ஆக்சிஜன் தட்டுப்பாடுகளினா திண்டாடி வருகின்றன.

    இந்தியாவுக்கு குவியும் உதவி:

    பிரான்ஸ்: ஐரோப்பிய நாடான பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் பரிந்துரையை தொடர்ந்து, அந்நாட்டில் இருந்து ஆக்சிஜன் ஜெனரேட்டர்கள், திரவ ஆக்சிஜன் கன்டெய்னர்கள் மற்றும் வென்டிலேட்டர் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.முதற்கட்டமாக எட்டு ஆக்சிஜன் ஜெனரேட்டர்கள், ஐந்து திரவ ஆக்சிஜன் நிரம்பிய கன்டெய்னர்கள் மற்றும் வென்டிலேட்டர்கள் ஆகியவை, கப்பல் மற்றும் விமானம் வாயிலாக, இந்த வார இறுதிக்குள் அனுப்பி வைக்கப்படும்.

    தாய்லாந்து: இந்தியாவுக்கு காலி ஆக்சிஜன் சிலிண்டர்களை, இந்திய விமானப்படை விமானங்கள் வாயிலாக, தாய்லாந்து அனுப்பி வருகிறது. நேற்று மூன்றாவது முறையாக, தாய்லாந்திருந்து, காலி ஆக்சிஜன் சிலிண்டர்கள் வந்தன.

    சிங்கப்பூர்: மற்றொரு தென் கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரிலிருந்தும், காலி ஆக்சிஜன் டேங்கர்கள், இந்தியாவுக்கு விரைவில் வர உள்ளதாக, மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய நாடான அயர்லாந்தும், மருத்துவ உபகரணங்களை அனுப்பி வைத்துள்ளது.

    ஆஸ்திரேலியா: சுகாதார துறை அமைச்சர், கிரேக் ஹன்ட் கூறியதாவது:இந்தியாவுக்கு ஆக்சிஜன், வென்டிலேட்டர்கள், பாதுகாப்பு உடைகள், மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றை அனுப்ப, அரசு முடிவு செய்துள்ளது. தடுப்பூசி மருந்துகளும் போதிய அளவிற்கு உள்ளன. இந்தியா கேட்டுக் கொண்டால், தடுப்பூசி மருந்து அனுப்புவது குறித்து பரிசீலிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    இதுதவிர ஆப்பிள், கூகுள் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களும் உதவிகளை அனுப்பி வருகின்றன.
    Published by:Muthukumar
    First published: