சசிகலாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக விக்டோரியா மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் ரமேஷ் கிருஷ்ணா தெரிவித்துள்ளார். இந்நிலையில், இளவரசிக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சசிகலாவிற்கு நோய்த் தொற்று குறையத் தொடங்கியுள்ளதால் ஆக்சிஜன் அளவு குறைக்கப்பட்டு உள்ளதாகக் கூறினார். அரசு மருத்துவமனையிலேயே அனைத்து வசதிகளும் சிறப்பான முறையில் இருப்பதாலேயே சசிகலாவை தனியார் மறுத்துவமனைக்கு மாற்ற மறுப்பு தெரிவித்ததாகவும் அவர் விளக்கம் அளித்தார்.
மேலும் இந்த மருத்துவமனையிலேயே சிகிச்சையை தொடரவே சசிகலாவும் விரும்புவதாகவும் மருத்துவர் ரமேஷ் கிருஷ்ணா தெரிவித்தார். வழக்கமான உணவுகளை அவர் எடுத்துக் கொள்வதாகவும் அவர் கூறினார். 7 முதல் 10 நாட்கள் சசிகலா தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருப்பது கட்டாயம் என்றும் அவர் கூறினார். டிஸ்சார்ஜ் ஆனாலும் 14 நாட்கள் சசிகலா தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். இதனால் 27-ம் தேதி சசிகலா விடுதலை ஆனாலும், அவர் உடனடியாக தமிழகம் திரும்புவதற்கான வாய்ப்புகள் இல்லை.
சசிகலாவுடன் சிறையில் ஒன்றாக இருந்த அவரது உறவினர் இளவரசிக்கு எடுக்கப்பட்ட ஆர்டிபிஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் சிறையில் இருந்த அவர், பெங்களுரூ விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டு கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே இளவரசிக்கும் சி.டி.ஸ்கேன் பரிசோதனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை குறித்து முடிவு எடுக்காமல் சிறைத்துறை காலம் தாழ்த்தி வருவதாக அவரது வழக்கறிஞர் அசோகன் குற்ற்ம்சாட்டியுள்ளார். சசிகலாவிற்கு ஆர்டிபிசிஆர் சோதனையில் கொரோனா உறுதியாகவில்லை. அதேசமயம் சிடி ஸ்கேன் செய்யப்பட்ட போதுதான் தொற்று இருப்பது தெரியவந்தது என்பதால், இளவரசியையும் விக்டோரியா மருத்துவமனைக்கு அழைத்து வந்து சோதனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.