Oxygen level | ஆக்சிஜன் அளவு 92 முதல் 94 வரை இருந்தால் போதுமானது என்றே அர்த்தம், பதற்றம் தேவையில்லை: எய்ம்ஸ் இயக்குநர் டாக்டர் ரந்தீப் குலேரியா

எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரந்தீப் குலேரியா

ஆக்சிஜன் அளவு 92 முதல் 94 வரை இருந்தால் பதற்றமடைய வேண்டியதேயில்லை, அது நல்ல அளவுதான் என்கிறார் எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் குலேரியா.

  • Share this:
    கொரோனா இரண்டாம் அலை தீவிரமாகப் பரவி வரும் நிலையில் நம் உடலின் ஆக்சிஜன் அளவை அடிக்கடிப் பரிசோதிக்கும் பல்ஸ் ஆக்ஸிமீட்டர்களுக்கு அதிகம் வேலை வந்துள்ளது, கிராக்கியும் அதிகரித்துள்ளது, ஆனால் ஆக்சிஜன் அளவு 92 முதல் 94 வரை இருந்தால் பதற்றமடைய வேண்டியதேயில்லை, அது நல்ல அளவுதான் என்கிறார் எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் குலேரியா.

    கொரோனா சிகிச்சையில் ஆக்சிஜனின் பங்கு குறித்த இணையக் கருத்தரங்கில் பேசிய குலேரியா, வெண்டிலேட்டர்களை விட ஆக்சிஜன் சிகிச்சை பாதுகாப்பானது, வெற்றிகரமானது என்றார். அதே வேளையில் ஆக்சிஜனை கண்டபடி பயன்படுத்தி அதனை தீர்த்து விடக்கூடாது என்பதில் கவனம் அவசியம் என்றார்.

    ஒருவரது ஆக்சிஜன் அளவு 95% இருக்கிறது என்றால் அதனை 98-99% என்று கொண்டு வருவதற்கு ஆக்சிஜனைப் பயன்படுத்துவது விரயம் என்கிறார் குலேரியா.

    “உங்கள் உடம்பில் ஆக்சிஜன் அளவு 94% இருக்கிறது என்றால் போதுமான ஆக்சிஜன் உங்களுக்கு இருப்பதாகவே அர்த்தம். நாங்கள் முன்பு நுரையீரல் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் சிகிச்சை அளிக்கும் போது 88% ஆக்சிஜன் இருந்தாலே திருப்திகரமானது என்ற முடிவுக்கு வருவோம், இது சரிதான், ஆனால் இப்போது 92-94 என்றால் பதற்றமடைகின்றனர், தேவையே இல்லை இது போதுமான ஆக்சிஜன் அளவுதான்.

    ஆக்சிஜன் அளவு 92-93 என்று இருந்தால் உடனே ஆபத்தான நிலை என்று கருத வேண்டிய அவசியமே இல்லை. பதற்றமடையாமல் மருத்துவ உதவி கோரலாம்” என்றார்.

    இதில் கலந்து கொண்ட மற்ற நிபுணர்களும் ஓய்வு எடுத்த பிறகு 15 நிமிடங்கள் கழித்து ஆக்சிஜன் பரிசோதனை செய்தால் போதுமானது. நீடித்து ஆக்சிஜன் அளவு குறைந்து கொண்டே வந்தால்தான் மருத்துவரை அழைக்க வேண்டும். ஆக்சிஜன் அளவை அளக்கும் பல்ஸ் ஆக்ஸிமீட்டர்களில் காட்டும் அளவு நாம் எந்த நிலையில் இருந்து கொண்டு ஆக்சிஜன் அளவை எடுக்கிறோம் என்பதைப் பொறுத்தும் மாறுபடும். ஏதோ ஒருமுறை ஆக்சிஜன் அளவு குறைகிறது என்பதற்காக பதற்றம் தேவையில்லை என்கின்றனர்.

    வீட்டில் பயன்படுத்த மக்கள் ஆக்சிஜன் சிலிண்டர்களை வாங்குகின்றனரே என்ற கேள்விக்கு எய்ம்ஸ் இயக்குநர் டாக்டர் குலேரியா கூறும்போது, “அதை எப்படி பயன்படுத்துவது என்று தெரியாமலேயே ஆக்சிஜன் சிலிண்டர்களை வாங்குகின்றனர். எச்சரிக்கை இல்லாமல் கையாண்டால் விரயம்தான் ஆகும்.

    இதற்கு ஒரு உதாரணம் கூற வேண்டுமெனில் வீட்டில் ஆக்சிஜன் பயன்படுத்தும் போது நோயாளிகள் உணவு உட்கொள்ளும் போது ஆக்சிஜன் மாஸ்கை அப்படியே கழற்றி வைத்து விட்டு உணவு உட்கொள்ளுகிறர்கள், சுவிட்ச் ஆஃப் செய்வதில்லை, இது விரயம்தானே” என்றார்.
    Published by:Muthukumar
    First published: