கொரோனாவால் பாதிக்கப்பட்ட விசாரணைக் கைதிகள் சிலர், தங்களுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என சிறைத்துறை துணைத் தலைவரிடம் புகார் அளித்தனர். இதன் காரணமாக சிறைத்துறை அதிகாரிகள் அந்தக் கைதிகளைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு (NCHRO) மாநிலச் செயலாளர் ஆ.ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கடந்த 2019ம் ஆண்டு ஒரு வழக்கு தொடர்பாக சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டு கடந்த 18 மாதங்களாக விசாரணை சிறைவாசிகளாக பூந்தமல்லி கிளைச் சிறையில் இருந்து வந்தனர். மேற்படி வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.
இந்த 10 நபர்களுள் ஒருவர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மீதமுள்ள ஒன்பது சிறைவாசிகளுக்கும் கொரோனா உறுதிசெய்யப்பட்டதால் பூந்தமல்லி கிளைச் சிறையிலிருந்து சென்னை புழல் மத்திய சிறைக்கு அவர்கள் மாற்றப்பட்டனர்.
Also read: மதுரையை மையமாக வைத்து இரண்டாவது தலைநகர் - அமைச்சர் உதயகுமார் தீர்மானம்
இந்நிலையில், கடந்த 09.08.2020 அன்று சிறைத்துறை துணைத் தலைவர் மற்றும் சென்னை அரசு தலைமை மருத்துவமனை டீன் ஆகியோர் தலைமையிலான மருத்துவக்குழு புழல் சிறையில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட விசாரணைக் கைதிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து ஆய்வு செய்ய வந்துள்ளது. அப்போது மேற்படி ஒன்பது சிறைவாசிகளும் சிறைத்துறை அதிகாரிகள் தங்களிடம் பாரபட்சமாக நடந்து கொள்வதாகவும், தங்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவிடாமல் தடுப்பதாகவும் சிறைத்துறை துணை தலைவரிடம் சுட்டிக்காட்டியதாக தெரிய வருகின்றது.
இவ்வாறு அந்த உயர் அதிகாரியிடம் புகார் அளித்ததால் சிறைத்துறை அதிகாரிகள் வன்மம் கொண்டு மேற்படி ஒன்பது சிறைவாசிகளையும் கடுமையாகத் தாக்கியுள்ளனர். தாக்கப்பட்ட சிறைவாசிகளுள் ஒருவர் 60 வயதைக் கடந்த மூத்த குடிமகன் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசு இந்த விசயத்தில் உடனடியாக தலையிட்டு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள அந்த ஒன்பது சிறைவாசிகளுக்கும் உரிய சிகிச்சை வழங்கிடவும், மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட சிறை அதிகாரிகளை கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்திடவும், விசாரணை சிறைவாசிகளின் உறவினர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் அவர்களைப் பார்ப்பதற்கு அனுமதியளிக்க வேண்டும் என்றும் NCHRO தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.