கொரோனா தொற்று தீவிரம் அடையும்போது உடலில் ஆக்சிஜன் அளவு குறைந்து உயிரிழப்பு அபாயம் ஏற்படுகிறது. உடலில் ஆக்சிஜன் அளவை வீட்டில் இருந்தபடியே உடனுக்குடன் அறிவதற்கு பல்ஸ் ஆக்சிமீட்டர் என்ற விரல் அளவே உள்ள கருவி பயன்படுகிறது. இதை பயன்படுத்துவதும் எளிதே.
முதலில் ஒரு இடத்தில் அமர்ந்து சுமார் 10 நிமிடங்கள் ஆசுவாசப்படுத்தியபின், பல்ஸ் ஆக்சிமீட்டர் கருவி மூலம் ஆக்சிஜன் அளவை சோதனை செய்யவேண்டும். வீட்டில் பலரும் பயன்படுத்துவதாக இருப்பின் ஒவ்வொருவரும் கிருமிநாசினியால் விரலை சுத்தப்படுத்திவிட்டு பயன்படுத்த வேண்டும்.
பல்ஸ் ஆக்சிமீட்டரை வலது கை ஆட்காட்டி அல்லது பெருவிரலில் பொருத்தியதுமே கருவியில் தசம பின்னம் போல் இரு எண்கள் தெரியும். அதில் மேலிருப்பது ஆக்சிஜன் அளவு. கீழே உள்ள எண், இதயத்துடிப்பு வேகத்தை குறிப்பதாகும். சில விநாடிகளுக்குப் பின்,
ஆக்சிஜன் அளவையும், நாடித்துடிப்பையும் குறித்துக் கொள்ள வேண்டும்.
விரல்களில் மருதாணி, நகப்பூச்சு மற்றும் ஈரம் இருந்தால் ஆக்சிஜன் அளவை கருவி குறைவாக காட்டும் என்பதால் கவனம் தேவை. ஆக்சிஜன் அளவு 95 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை இருப்பது இயல்பு. 94 சதவீதத்துக்குக் குறைந்தால், இடது கை விரல்களில் வைத்து மீண்டும் சோதிக்க வேண்டும்,
அப்படியும் 94 சதவீதத்துக்கு குறைவாக ஆக்சிஜன் அளவு இருந்தால், மருத்துவ உதவியை உடனே நாடவேண்டும், மேலும் கூடுதல் மருத்துவ உதவிக்கு 104 இலவச சேவை மையத்தை தொடர்பு கொள்ளலாம். இந்த பல்ஸ் ஆக்சிமீட்டர் கருவி வீட்டின் அருகில் உள்ள மருந்து கடைகளில் கிடைக்கும். இது 1800 ரூபாய் முதல் விலைக்கு கிடைக்கிறது.
கொரோனாவின் பிடியில் நாடு சிக்கியிருக்கும் தருணத்தில் இந்த பல்ஸ் ஆக்சிமீட்டரை வீட்டில் வைத்திருப்பது உசிதம்..
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.