அணிவகுத்து நின்ற ஆம்புலன்ஸ்கள், ஆக்சிஜனுக்காக அலறிய குரல்கள்... ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை கொரோனா உச்சத்தை சமாளித்தது எப்படி? 

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் காத்திருந்த ஆம்புலன்ஸ்கள்

கொரோனா முதல் அலையைப் போல அல்லாமல், இரண்டாவது அலையில் மருத்துவமனையை தேடி வரும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

  • Share this:
தமிழகத்திலேயே கொரோனா பரவலில் உச்ச நிலையில் சென்னை இருந்தபோது, ராஜீவ் காந்தி மருத்துவமனை வாசலில் நூற்றுக்கணக்கான ஆம்புலன்சுகள் காத்திருந்தன. படுக்கைகள் கிடைக்காத நிலையில், ஆம்புலன்சுக்குள்ளேயே சிகிச்சை நடப்பதும், சிலர் ஆம்புலன்சில் மரணமடைந்ததையும் பார்த்தோம்.

கொரோனா சிகிச்சைக்காக மட்டும் அதிகபட்ச எண்ணிக்கையில் 2050 படுக்கைகளைக் கொண்டுள்ள, உயர் சிறப்பு மருத்துவனையின் நிலைமை இப்போது ஆச்சர்யமாக மாறியுள்ளது. ஆக்சிஜன் வசதியுள்ள 278 படுக்கைகள் காலியாக உள்ளன. 1306 நோயாளர்கள் மட்டுமே அங்கு சிகிச்சை பெற்று வருகின்றார்கள். இந்த மாற்றம் நடந்தது எப்படி என்று விளக்குகிறார், மருத்துவமனை முதல்வர், டாக்டர் தேரணி ராஜன் :

நீண்ட வரிசையில் ஆம்புலன்சுகள் காத்திருந்தபோது, நிலைமை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்று பிரம்மிப்பாக இருந்தது. முதலில் இந்த சூழலை எதிர்கொள்வதற்காக தனிச்சிறப்பு குழுக்களை ஏற்படுத்தினோம். ஒரு மருத்துவர், ஒரு நுறையீரல் நிபுணர், தொழில்நுட்ப வல்லுனர், செவிலியர் உள்ளடக்கிய அந்த குழு, ஒவ்வொரு ஆம்புலன்ஸாக ஏறி நோயாளியின் நிலையை கண்டறிவார்கள். தீவிர சிகிச்சை தேவைப்படும் நபர் வரிசையில் எங்கோ கடைசியில் இருப்பார்.

Also Read : கொரோனாவால் உயிரிழந்தவரின் சடலத்தை ஆற்றில் தூக்கி எறியும் அதிர்ச்சி வீடியோ!

அப்படிப்பட்ட நோயாளிகளுக்கு மருத்துவ கவனம் முதலில் தேவை என்பதால், இந்த குழு  நோயாளரின் உடல் நிலைமையை ஆய்வு செய்து, உடனடி சிகிச்சை தேவைப்படுவோர் யார் என்று பார்த்து, உயிரிழப்பு நடக்காமல் தடுக்க, ஆம்புலன்சிலேயே மருந்துகள் கொடுப்பது உள்ளிட்ட பணிகளை முன்னெடுத்தனர். உயர் சிகிச்சை தேவைப்படாதவர்களை, எழும்பூர் மகப்பேரு மருத்துவமனை மற்றும் தனிமைப்படுத்துதல் மையங்களுக்கு அனுப்பிட முடிந்தது.

ராஜீவ் காந்தி மருத்துவமனை முதல்வர், டாக்டர் தேரணி ராஜன்


கொரோனா முதல் அலையைப் போல அல்லாமல், இரண்டாவது அலையில் மருத்துவமனையை தேடி வரும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இளைஞர்களுக்கு பாதிப்பு அதிகமாக இருந்தது, நுரையீரல் பாதிப்பினால் சிகிச்சைக்கு வருவோர் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. தனியார் மருத்துவமனைகளில் இருந்து மட்டுமல்லாமல் பிற அரசு மருத்துவமனைகளில் இருந்தும் சிகிச்சைக்காக ஏராளமான நோயாளர்கள் அனுப்பப்பட்டார்கள்.

காத்திருப்பே இல்லாமல் தடுக்க  புதிய ஜீரோ டிலே வார்டு ஏற்படுத்தினோம். அங்கு ஆக்சிஜன் வசதியை ஏற்படுத்தி, ஆம்புலன்சில் காத்திருந்தவர்களை அங்கு மாற்றினோம். ஆனால் அதுவும் நிரம்பி தொடங்கி சவாலான சில நாட்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஆக்சிஜன் தேவையும் 45 மெட்ரிக் டன் அளவிற்கு அதிகமானது. ஆக்சிஜன் எங்கும் வீணாகாமல் சரியான கொரோனா நோயாளிக்கு சரியான அளவில் வழங்கப்படுகிறதா என தனிச்சிறப்பாக கவனிக்க, மயக்கவியல் பேராசிரியர் தலைமையில் ஒரு குழு அமைத்து செயல்பட்டனர்.

Also Read : வியட்னாமில் புதிய ஹைபிரிட் வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு!

கள்ளக்குறிச்சியிலிருந்து பெறப்பட்ட 48 கூடுதல் வெண்டிலேட்டர்கள் உட்பட, மாநிலம் முழுவதும் பயன்பாடு குறைவாக உள்ள பகுதிகளில் இருந்து வெண்டிலேட்டர்கள் பெற்று பயன்படுத்தப்பட்டன. ஒரு ஷிப்ட்டிற்கு 350 மருத்துவர்கள் பணியாற்றினார்கள். சுழன்று சுழன்று பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களே இந்த சுமையை சமாளித்தார்கள்.

இவை அல்லாமல் தமிழக அரசின் ஊரடங்கு அறிவிப்பும், சிகிச்சைக்கான புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டு பிரபலமாக்கியதும் மருத்துவமனைக்கு வர தேவையில்லாதவர்கள், வந்து கூடுவதை குறைக்க உதவியது. இது மருத்துவமனை வளங்கள் வீணாகமல் தடுக்க உதவியது என்றார்.
Published by:Vijay R
First published: