Delta Variant vs Coronavirus | டெல்டா வேரியண்ட் அறிகுறிகள் vs அசல் கோவிட் அறிகுறிகள்- வேறுபாடுகள் என்ன?

டெல்டா வேரியண்ட்டின் வெவ்வேறு பண்புகள் (வைரஸ் காரணிகள்) காரணமாக, அறிகுறிகளும் மாறுகின்றன.

டெல்டா வேரியண்ட்டின் வெவ்வேறு பண்புகள் (வைரஸ் காரணிகள்) காரணமாக, அறிகுறிகளும் மாறுகின்றன.

  • Share this:
நம் வாழ்க்கை மற்றும் வாழ்க்கை முறையை நாவல் கொரோனா வைரஸ் புரட்டி போட்டு சுமார் ஒன்றரை வருடங்கள் ஆகிவிட்டது. கொரோனா வைரஸின் இரண்டாம் அலை மெதுவாக ஓய்ந்து வரும் நேரத்தில், அடுத்த பேரிடியாக வந்து இறங்கி உள்ளன டெல்டா மற்றும் டெல்டா பிளஸ் வகை வைரஸ் வேரியண்ட்கள். இந்த இரு வகை புதிய வைரஸ் வேரியண்ட்களும் மனித உயிர்களுக்கு மேலும் ஆபத்தை விளைவிக்க கூடியவை என்று மருத்துவ உலகம் எச்சரித்துள்ளது. சமீபத்திய கண்டுபிடிப்புகளின் படி, டெல்டா வேரியண்ட் மூலம் ஏற்படும் அறிகுறிகள், இதற்கு முன் பரவி இருந்த ஒரிஜினல் கொரோனா வைரஸ் அறிகுறிகளில் இருந்து வேறுபடலாம் என்று நிபுணர்கள் குறிப்பிட்டு உள்ளனர்.

அசல் கோவிட் vs டெல்டா வேரியண்ட்ஸ்- இரண்டும் எவ்வாறு வேறுபடுகின்றன?

நிபுணர்களின் ஆராய்ச்சிகளின் படி, வைரஸ்கள் சூழலுக்கு தகுந்தவாறு புதிய உருமாற்றத்தை செய்து கொண்டே இருக்கின்றன. உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, வழக்கமாக ஒரு வைரஸ் அதனை நகலெடுக்கிறது அல்லது நகல்களை உருவாக்குகிறது. வரையறுக்கப்பட்ட படி இந்த மாற்றமானது உருமாற்றமடைந்த பிறழ்வுகள் (mutations) அல்லது வளர்ச்சி நிலையில் உண்டாகும் அடிப்படையான மரபியல் மாற்றம் என்று அழைக்கப்படுகின்றன. இதன்படி ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட புதிய பிறழ்வுகளை காணும் வைரஸ் அசல் வைரஸின் “வேரியண்ட்” என குறிப்பிடப்படுகிறது. SARs-COV-2 வைரஸைப் பொறுத்தவரை, அது பல ஸ்ட்ரெயின்களாக மாறியுள்ளது. இதில் டெல்டா வேரியண்ட் B.1.617.2 என்றும் அழைக்கப்படுகிறது. இது தற்போது வரை மிகவும் ஆதிக்கம் செலுத்தும் ஸ்ட்ரெயினாக கருதப்படுகிறது. ஒரிஜினல் ஸ்ட்ரெயினுக்கு பதில் பிறழ்வு வைரஸ்கள் மரபணு வரிசைமுறையில் வேறுபாட்டை கொண்டிருக்கலாம். இதன் மூலம் ஆரோக்கியமான உயிரணுக்களுடன் வைரஸ்கள் தங்களை இன்னும் ஆழமாக இணைத்து கொள்ளக்கூடும். எனவே, இது ஒரிஜினல் ஸ்ட்ரெயினுடன் ஒப்பிடும் போது மிகவும் தீவிரமான தொற்றாக பரவும் தன்மையுடனும் இருப்பதாக கூறப்படுகிறது.

டெல்டா வேரியண்ட் அறிகுறிகள், கோவிட் அறிகுறிகளிலிருந்து வேறுபடுமா?

வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்படும் போது அது 2 காரணிகளை பொறுத்தது. ஒன்று வைரல் காரணிகளுடன் (viral factors) தொடர்புடையது மற்றொன்று ஹோஸ்ட் காரணிகளை (host factors) உள்ளடக்கியது. இதில் viral factors என்பது நோய் தொற்றின் வீதம், நகலெடுக்கும் வேகம், பரவும் முறை மற்றும் பலவற்றை கொண்டது. host factors அதாவது பாதிக்கப்படுவோர் காராணிகளை பொறுத்த வரை வயது, பாலினம், மருந்துகள், உணவு, உடற்பயிற்சி, உடல்நலம் மற்றும் மன அழுத்தத்தை உள்ளடக்கியது. எனவே, குறிப்பிட்ட வைரஸின் அறிகுறிகள் என வரும் போது, அவற்றில் மிகவும் பொதுவான அறிகுறிகளை கண்டறிய தனிநபர்களிடமிருந்து போதுமான தரவுகள் சேகரிக்கப்பட வேண்டும். டெல்டா வேரியண்ட் என்பது ஒரிஜினல் வைரஸின் பிறழ்வு என்பதால், உருமாறிய இந்த டெல்டா வேரியண்ட்டின் அறிகுறிகளும் ஒரிஜினலில் இருந்து மாறியிருக்கலாம் என்று தெரிகிறது. லண்டன் ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, பொதுவான கொரோனா அறிகுறிகள் ஒரிஜினல் கோவிட் அறிகுறிகளிலிருந்து மாறியிருக்கலாம் என்று கூறுகின்றனர்.

அறிக்கை என்ன சொல்கிறது..?

இங்கிலாந்து நாட்டில் அறிகுறிகள் பற்றி மொபைல் ஆப் மூலம் சேகரிக்கப்பட்ட தரவுகள் தொடர்பான அறிக்கையில், காய்ச்சல், இருமல், தலைவலி மற்றும் தொண்டை புண் பொதுவான கோவிட் அறிகுறிகளாக தற்போது இருக்கும் போது, முந்தைய தரவுகளில் மூக்கு ஒழுகுதல் அரிதான அறிகுறியாகவே தெரிவிக்கப்பட்டது. தவிர ஒரிஜினல் கோவிட் தொற்றின் போது வாசனை உணர்வை இழப்பது, முதலில் மிகவும் பொதுவானதாக இருந்தது. ஆனால் இது இப்போது 9ஆவது பொதுவான அறிகுறியாகும். இப்படி அறிகுறிகளில் ஏற்படும் மாற்றங்கள் மக்களுக்கு செலுத்தப்படும் கொரோனா தடுப்பூசியின் விளைவாக இருக்கலாம் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். தவிர, வைரஸின் பரிணாம வளர்ச்சியும் அறிகுறிகளின் மாற்றத்திற்கு காரணமாக இருக்கலாம். டெல்டா வேரியண்ட்டின் வெவ்வேறு பண்புகள் (வைரஸ் காரணிகள்) காரணமாக, அறிகுறிகளும் மாறுகின்றன. இருப்பினும் அதை நிரூபிக்க உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

புழக்கத்தில் இருக்கும் கொரோனா தடுப்பூசிகள் டெல்டா வேரியண்ட்டிற்கு எதிராக அல்லது புதிய வளர்ந்து வரும் வேரியண்ட்களுக்கு எதிராக செயல்படுமா என்பது தொடர்பான சலசலப்புகள் எழுந்துள்ளன. எனினும் சில கொரோனா தடுப்பூசிகள் டெல்டா வேரியண்ட்டிற்கு எதிராக பயனுள்ளதாக இருக்கும் என்றே சில ஆய்வின் முடிவுகள் கூறுகின்றன.
Published by:Archana R
First published: