EXCLUSIVE: கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தி மீண்டுவரும் டென்மார்க்.. எப்படி சாத்தியமானது? - டென்மார்க் தமிழர் தரும் புதிய தகவல்கள்

ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் சூழல் வந்தால் அவர்களின் சம்பளத்தில் 75% நிதி உதவி டென்மார்க் அரசாங்கம் மூன்று மாதங்களுக்கு தருவதாக அறிவித்தது.

EXCLUSIVE: கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தி மீண்டுவரும் டென்மார்க்.. எப்படி சாத்தியமானது? - டென்மார்க் தமிழர் தரும் புதிய தகவல்கள்
டென்மார்க்
  • Share this:
உலகம் முழுவதும் பரவிவரும் கொரோனா வைரஸ் ஐரோப்பிய நாடுகளை மிகக் கடுமையாகப் பாதித்துள்ளது. ஆனால், டென்மார்க் நாடு கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்தி, பெரிய பாதிப்புகளைத் தவிர்த்துள்ளது.

டென்மார்க அரசாங்கத்தின் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து டென்மார்க் வாழ் தமிழர் சுமேசு குமார் நியூஸ்18-க்கு பகிர்ந்துள்ளார்.

டென்மார்க் அரசாங்கத்தின் நடவடிக்கை குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது:


‘கொரோனா தொற்று சீனாவுக்கு அடுத்ததாக பரவ ஆரம்பித்தது ஐரோப்பிய நாடான இத்தாலியில். கடந்த பிப்ரவரி மாதத்தின் ஆரம்பத்தில் இத்தாலியில் பரவ ஆரம்பித்து, ஒரு சில வாரங்களில் அங்கு ஆயிரக்கணக்கான மக்களை பலி கொண்டுவிட்டு மெல்ல மெல்ல மற்ற ஐரோப்பா நாடுகளுக்கும் பரவ ஆரம்பித்தது. அந்த வகையில் டென்மார்க் நாட்டில் முதல் கொரோனா தொற்று, இத்தாலிக்கு பனிச்சறுக்கு சென்று விட்டு திரும்பிய ஒருவரால் கடந்த பிப்ரவரி  27-ம் தேதி உறுதியானது.



5.8 மில்லியன் (58 லட்சம்) மக்கள் தொகையைக் கொண்ட சிறிய நாடான டென்மார்க் கொரோனா தொற்று நடவடிக்கைக்கு தயாரானது. அடுத்த இரண்டு வாரங்களில் டென்மார்க் அரசு பாராளுமன்ற உறுப்பினர்களிடமும், அனைத்து அதிகாரிகளிடமும் விவாதித்து பல்வேறு நடவடிக்கைகளையும், மருத்துவ முன்னேற்பாடுகளையும் விரிவாக திட்டமிட்டு சரியாக மார்ச் 12 -ம் தேதி நாடெங்கும் ஊரடங்கை அறிவித்தது.

ஊரடங்கு என்று வெறுமனே அறிவித்து மக்களை பீதியாக்காமல், எவையெவை இயங்கும் எவையெவை இயங்காது, நிறுவனங்களுக்கு என்ன மாதிரியான கட்டுப்பாடு, வணிகங்களுக்கு என்ன மாதிரியான கட்டுப்பாடு, குடிமக்களுக்கு என்ன மாதிரியான கட்டுப்பாடு என்று விலாவாரியாக விவரித்தது டென்மார்க் அரசாங்கம்.

அதன்படி அனைத்து பள்ளி கல்லூரிகள், பெரிய வணிக வளாகங்கள், முடி திருத்தகம் மதுபான விடுதிகள், இப்படி மக்கள் அதிகம் நெருக்கமாக இருக்கக்கூடிய சூழல் இருக்கும் இடங்களை முடக்க உடனடி விடுமுறை அளிக்கப்பட்டது. இவையனைத்தையும் செயல்படுத்துவதற்கு முன்னதாக டென்மார்க்கின் வான்வழி, தரைவழி மற்றும் சாலை வழி என எல்லா எல்லைகளையும் உடனடியாக மூடி கொரோனா வெளியிலிருந்து உள்ளே பரவும் வழியை அடைத்தது டென்மார்க்.



அதே சமயம் இந்த நெருக்கடியால் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கிவிடாமல் இருக்க அரசாங்கம் நிதி உதவி வழங்கும் என்று அறிவித்தது. அதன்படி ஒரு நிறுவனம் போதிய உற்பத்தி இல்லாமல் வருமான இழப்பு ஏற்படுவதால், ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் சூழல் வந்தால் அவர்களின் சம்பளத்தில் 75% நிதி உதவி அரசாங்கம் மூன்று மாதங்களுக்கு தருவதாக அறிவித்தது.

அப்போதைக்கு டென்மார்க் அரசாங்கம் கொரோனா தொற்றை ஜூன் மாதம் முதல்வாரத்திற்குள் கட்டுப்படுத்திவிடலாம் என்று கணக்கீடு செய்து திட்டங்களை அறிவித்தது.

இதனால் நிறுவனங்களுக்கு பெரிய நிதி சுமை குறையும், நாட்டில் திடீர் வேலை வாய்ப்பு திண்டாட்டம் தவிர்க்கப்படும், ஊழியர்கள் மூன்று மாதம் விடுப்பு போல வீட்டில் இருப்பதால் கொரோனா தொற்று பரவுதல் குறையும் என பல்வேறு சிக்கலைகளை சமாளிக்க முடியும் என்று டென்மார்க் அரசாங்கம் திறன்பட திட்டமிட்டு செயல்படுத்தியது.

ஊரடங்கு காலத்தில் மக்கள் அனைவரும் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து சுயகட்டுப்பாட்டை கடைபிடித்து அரசுக்கு பேருதவியாக இருந்தனர். குடும்பத்தில் அனைவரும் வீட்டிலேயே இருந்தாலும் தினமும் அனைவரும் கடைக்கு சென்று பொருட்கள் வாங்கவோ, வெளியே சென்று பொழுதை கழிக்கவோ மிக கண்டிப்பான கட்டுப்பாடுகளை அரசு விதிக்கவில்லை.

ஆனால் யார் எங்கு சென்றாலும் குறிப்பிட்ட இடைவெளியை பின்பற்றவும், கை கழுவுதல், கைக்குட்டையை வைத்து இருமுதல், தொற்று அறிகுறி இருப்பவர்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக்கொள்ளுதல் போன்ற சுகாதாரமான அறிவுரைகளை வழங்கியும், பொது இடங்களில் 10 பேருக்கு மேல் கூடினால் அபராதம் என்றும் அரசாங்கம் அறிவித்துவிட்டு மக்களின் முடிவை மக்களின் கையில் விட்டுவிட்டு மேற்பார்வை பார்க்க ஆரம்பித்தது.

மூன்று நாட்களுக்கு ஒருமுறை என்று பிரதமர் மட்டுமல்லாது முக்கிய அமைச்சர்களும் தொலைக்காட்சி வாயிலாக மக்களிடம் தங்கள் திட்டங்களையும், தினசரி நிலவரங்களையும் அறிவித்துக்கொண்டே இருந்தனர்.

ஒரு பக்கம் மெல்ல மெல்ல கொரோனா தொற்று குறைந்த அளவில் பரவ ஆரம்பித்தாலும், தொற்றால் பாதிக்கப்பட்டவர்களும் அவர்களை சார்ந்தவர்களும் வீட்டிலேயே தங்களை தாங்களே கட்டுப்படுத்தி தனிமைப்படுத்தி கொண்டதால், மற்ற ஐரோப்பிய நாடுகளை ஒப்பிட்டு பார்க்கும் போது இங்கு பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படவில்லை. இதுவரை கிட்டத்தட்ட 8 500 பேர் பாதிக்கப்பட்டு இருந்தாலும், அதில் சுமார் 420 பேர்தான் மரணித்து உள்ளனர். அவர்களில் 95% சதவீதத்திற்கும் மேல் 65 வயதை கடந்தவர்கள், அவர்கள் அனைவருமே ஒன்றுக்கு மேற்பட்ட பெரிய வியாதிகளால் சிகிச்சை எடுத்துக்கொண்டு இருந்த நோயாளிகளே ஆவர்.

இன்றைய நிலவரப்படி இங்கு கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பவர்கள் 285 பேர் மட்டுமே, அதில் பேர் 56 மட்டுமே செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு தீவிர சிகிச்சையில் உள்ளார்கள். அவர்கள் அனைவரும் 70 வயதை கடந்து நீரழிவு, புற்று நோய் மற்றும் இதய நோய் ஆகிய நோய்களில் எதாவது ஒன்றால் பாதிக்கப்பட்டு ஏற்கனவே சிகிச்சை எடுத்துக்கொண்டு இருந்தவர்கள்.

மார்ச் மாதம் பிற்பகுதியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை சற்று உயர ஆரம்பித்தாலும், இரண்டு வாரங்களில் மிக குறைந்த எண்ணிக்கையில் கீழ் நோக்கி சென்றது. தாங்கள் எதிர்பார்த்த ஜூன் மாதத்தை விட முன்னரே தொற்று பரவுதல் கட்டுப்பாட்டுடன் இருப்பதை புள்ளிவிபரங்கள் வாயிலாக பார்த்து மகிழ்ச்சியடைந்த டென்மார்க் அரசாங்கம், உடனடியாக ஊரடங்கின் முதல் நிலையை கடந்த ஏப்ரல் 15- ம் தேதி தளர்த்தி அறிவித்தது. இதன்படி ஆரம்ப பள்ளிகள் மற்றும் ஒரு சில பொதுத்துறை நிறுவனங்கள் போன்றவைகளை திறக்க உத்தரவிட்டது.

இதன்மூலம் குழந்தைகளை பள்ளி அனுப்புவதன் வாயிலாக, அவர்களின் பெற்றோர்கள் தங்கள் நிறுவனங்களில் வேலைக்கு செல்ல தயாராக இருக்க ஆயுத்தமாகும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் முடி திருத்தகம் சிறிய அளவிலான வணிக வளாகங்கள் போன்றவை திறக்கப்பட்டுள்ளன. இருப்பினும் இங்கு பத்து நபர்களுக்கு மேல் ஒன்றாக கூடி இருப்பது தடை செய்யப்பட்டுள்ளது. இன்னும் சில தினங்களில் இரண்டாம் கட்ட கட்டுப்பாடுகளை தளர்த்தி அனைத்து நிறுவனங்கள் மற்றும் பள்ளி கல்லூரிகளை திறக்க திட்டமிட்டுள்ளது.

டென்மார்க்கின் எல்லைக்கு மிக அருகில் இருக்கும் சுவீடன் அரசும் அந்த மக்களும் பெரிய அளவில் ஊரடங்கை சரிவர செயல்படுத்தாமல் இருந்ததை பல்வேறு ஐரோப்பிய ஊடகங்கள் விமர்சித்துவந்தன. அதன் காரணமாக அந்த நாடு கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதை புள்ளிவிபரங்கள் வாயிலாக பார்க்க முடிகிறது. கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் கொரோனா தொற்று டென்மார்க் மற்றும் சுவீடன் நாட்டிற்குள் வந்து பரவ ஆரம்பித்திருந்தாலும், எண்ணிக்கையின்படி பார்த்தால் டென்மார்க்கை விட பலமடங்கு பாதிப்பை சுவீடன் நாடு சந்தித்துள்ளது. சுவீடன் நாட்டில் இதுவரை கிட்டத்தட்ட 18 ஆயிரத்து ஐநூறு பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டும், அதில் 2200 பேர் மரணித்தும் உள்ளனர்.

இது போல எந்தவொரு பேரிடரோ சமூக சிக்கலோ உருவானால், அரசாங்கம் மக்களின் பக்கம் நின்று யோசித்து அவர்களுக்கான நலன்களை தீர ஆராய்ந்து திட்டமிடுவதும், அந்த மக்கள் அரசாங்கத்தின் பக்கம் நின்று யோசித்து அவர்களின் திடங்களுக்கு மதிப்பளித்து பின்பற்றுவதும்தான் சரியான தீர்வையும் அதன் மூலம் வெற்றியையும் கொடுக்கும் என்பதற்கு டென்மார்க் அரசும் மக்களும் ஒரு சிறந்த உதாரணம்.










Also see:
First published: April 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading