கொரோனா தீவிரமடையும் சூழலில் மது விற்பனையை அனுமதிப்பது ஏன்? நீதிமன்றம் கேள்வி

கோப்பு

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மதுக்கடைகளை மூடக் கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, கொரோனா தீவிரமடையும் சூழலில் மது விற்பனையை அனுமதிப்பது ஏன் என அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது

 • Share this:
  கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மதுக்கடைகளை மூடக் கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, கொரோனா தீவிரமடையும் சூழலில் மது விற்பனையை அனுமதிப்பது ஏன் என அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.

  தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2வது அலை வேகமாக பரவிவரும் நிலையில் அதனை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகள் நாளை முதல் அமலுக்கு வருகின்றது.

  அதேவேளையில், புதிய உத்தரவில் டாஸ்மாக் கடைகளுக்கு எந்தவித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை என்று சர்ச்சை எழுந்துள்ளது.   கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக தமிழகத்தில் தற்போது டாஸ்மாக் மதுபானக் கடைகள் பகல் 12 மணி முதல் இரவு 9 மணி முதல் செயல்பட்டு வருகின்றன.

  இந்நிலையில், திருச்சேந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் , சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், கொரோனா 2ம் அலை தமிழகத்தில் வேகமாக பரவிவரும் நிலையில், அதனை கட்டுப்படுத்தும் வகையில் டாஸ்பாக் கடைகளை மூட உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

  நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், பி.புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த மனு விசாரணைக்கு வந்தது.  அப்போது, கொரோனால் இருந்து காத்து கொள்ள ஒவ்வொருவரும் உடலில் எதிர்ப்பு சக்தியை உருவாக்க வேண்டும்  என அனைத்து ஆய்வுகளும் கூறுவதாக தெரிவித்த நீதிபதிகள்,  மனிதர்களுக்கு எதிர்ப்பு சக்தியை குறைக்கும் மதுபான விற்பனைக்கு கொரோனா தொற்று தீவிரமாக பரவும் காலத்தில் ஏன் அனுமதி வழங்கப்படுகிறது என கேள்வி எழுப்பினர்.

  மனுதாரரின் கோரிக்கை குறித்து மத்திய , மாநில அரசுகள்  பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜூன் 4ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Murugesh M
  First published: