சேலம் அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு

சேலம் அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு

 • Last Updated :
 • Share this:
  கொரோனோ சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலிப்பதாக  தனியார் மருத்துவமனைகள் மீது புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சேலத்தில், அரசு மருத்துவமனையை ஆய்வு செய்த  சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

  சேலம் அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று திடீரென ஆய்வு மேற்கொண்டார். மருத்துவமனையில் ஒவ்வொரு பகுதிக்கும் சென்ற ராதாகிருஷ்ணன் மகப்பேறு பிரிவில் உள்ள பிரசவ வார்டு, தீவிர பிரசவ அறுவை சிகிச்சை பிரிவு உள்ளிட்ட  பிரிவுகளுக்கு சென்று அங்கு நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், தேவையான மருந்து பொருட்கள் உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

  அங்கே மேற்கொள்ளப்படும் சிகிச்சை முறைகளையும் கேட்டறிந்தார்.  மேலும், கொரானா சிகிச்சை மையம் அதிநவீன தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் மருந்துக் கிடங்கு  ஆய்வகம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுகாதாரத்துறை செயலாளர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

  தொடர்ந்து செய்திகளுக்கு பேட்டி அளித்த ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் கொரோனோ பாதிப்பு படிப்படியாக குறைந்துள்ளது. என்றும் அரசு மருத்துவமனையில் 75 ஆயிரம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டவர்களில் ஆயிரத்து நூறு பேருக்கு மட்டுமே தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். மேலும், கொரோனா இறப்பு சதவீதம் 1 சதவிகிதத்திற்கு கீழ் குறைந்துள்ளதாகவும், அதேபோல் நோய்த்தொற்றும் 2 சதவீதமாக குறைந்துள்ளது என்பதையும் சுட்டிக்காட்டினார். அதையும் ஜீரோவாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

  மேலும், கல்லூரி விடுதிகள், உணவு விடுதிகளில் 20 பேருக்கு மேல் குடியிருக்கக்கூடாது. கட்டாயம் முககவசம் அணிந்திருக்க வேண்டும். ஐஐடி-யில் தொற்று கண்டறியப்பட்டுள்ளதால் அனைத்து கல்லூரி மாணவ மாணவிகளுக்கும் 15 நாட்களுக்கு ஒரு முறை பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கல்லூரி ஆய்வகங்கள் மற்றும் உணவு விடுதிகளில் மாணவர்கள் தள்ளி நிற்க வேண்டும், ஒன்றாக உணவு அருந்தக்கூடாது. பெரும்பாலும் ஆன்லைன் வகுப்புகளை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.

  கொரோனோவில் இருந்து மீண்டு வந்தவர்களுக்கு  மனநல சிகிச்சை அந்தந்த அரசு மருத்துவமனையில் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்த ராதாகிருஷ்ணன், தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தால், அங்கு உடனடியாக ஆய்வு நடத்தி அந்த மருத்துவமனையின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

  இந்த ஆய்வின்போது மருத்துவமனை முதல்வர் பாலாஜி நாதன் மருத்துவ கண்காணிப்பாளர் தனபால் மற்றும் துறை தலைவர்கள் மருத்துவர்கள் உடனிருந்தனர்.
  Published by:Suresh V
  First published: