HOME»NEWS»CORONAVIRUS-LATEST-NEWS»health ministry says over 1 91 lakh inoculated on day 1 yuv

நாடு முழுவதும் 1.91 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது: மத்திய அரசு

தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்ட முதல் நாளில், பல்வேறு மாநிலங்களில் கோ-வின் செயலி தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடங்கியதாக கூறப்படுகிறது.

நாடு முழுவதும் 1.91 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது: மத்திய அரசு
தடுப்பூசி
  • Share this:

கோ-வின் செயலி முடங்கியதால், பல்வேறு மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தாமதமானதாக தகவல் வெளியாகி உள்ளது. நாடு முழுவதும் ஒரு லட்சத்து 91 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டதாக சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொள்ள விரும்புவோர், முதலில் தங்கள் விவரங்களை அளித்து, கோ-வின் செயலியில் விண்ணப்பிக்க வேண்டும். கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை கண்காணிக்கும் விதமாகவே, மத்திய அரசு இந்த செயலியை உருவாக்கியிருக்கிறது.

தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்ட முதல் நாளில், பல்வேறு மாநிலங்களில் கோ-வின் செயலி தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடங்கியதாக கூறப்படுகிறது. மேற்குவங்கத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்ட முன்கள பணியாளர்களின் செல்போனுக்கு, குறுந்தகவல் உடனடியாக செல்லவில்லை. இதனால் பெரும்பாலான இடங்களில் தடுப்பூசி போடப்பட்டதை, தாள்களில் குறித்து அதிகாரிகள் உறுதி செய்தனர். முர்ஷிபாபாத் உள்ளிட்ட மாவட்டங்களிலும், கோ-வின் செயலி முறையாக செயல்படவில்லை.



இதேபோல், கர்நாடகா, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களிலும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தாமதமாக தொடங்கியதாக கூறப்படுகிறது.

கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரசு மருத்துமவனையில், தடுப்பூசி போடுவதற்காக 86 முன்கள பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில், நண்பகல் 12 மணி வரை ஒருவர் கூட தடுப்பூசி போட்டுக்கொள்ள வரவில்லை. அங்கு பணியாற்றிய எலெக்ட்ரீசியன் விருப்பம் தெரிவித்தததால், அவருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

தடுப்பூசி தொடர்பாக மக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிரதமர் மோடி


இந்நிலையில், நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகளை பிரதமர் நரேந்திர மோடி, தனது அலுவலகத்திலிருந்தபடி தொடர்ந்து கண்காணித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பான வீடியோவையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், முதல் நாளில் நாடு முழுவதும் ஒரு லட்சத்து 91 ஆயிரத்து 181 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாக ஆந்திரப்பிரதேசத்தில் சுமார் 17 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. எந்தப் பகுதியிலும் யாருக்கும் பக்கவிளைவு ஏற்படவில்லை என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. முதல் நாள் என்பதால், சில தடுப்பூசி மையங்களில் பயனாளிகளின் தகவல்களை சேர்ப்பதில் தாமதம் ஏற்பட்டதாகவும், முதல் நாளில் பட்டியலில் சேர்க்கப்படாத சுகாதாரப் பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இந்த இரண்டு பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட்டதாக சுகாதார அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
Published by:Yuvaraj V
First published: