ஹோம் /நியூஸ் /கொரோனா /

கொரோனா பரவுவதை தடுக்க போர்க்கால அடிப்படையில் அரசு செயல்படுகிறது - முதலமைச்சர்

கொரோனா பரவுவதை தடுக்க போர்க்கால அடிப்படையில் அரசு செயல்படுகிறது - முதலமைச்சர்

 • News18 Tamil
 • 3 minute read
 • Last Updated :

  கொரோனா பரவுவதை தடுக்க உரிய தடுப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

  சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், கொரோனாவால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூன்று பேரின் நிலை என்ன? டெல்லியில் இருந்து கொரோனா பாதிப்புடன் சென்னை வந்த நபருடன் தொடர்புடையவர்கள் அனைவரும் கண்டு பிடிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு விட்டார்களா என்று கேள்வி எழுப்பினார்.

  தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை அளிக்க ஐசியூ தனிமை வார்டுகளை அதிகரிக்க வேண்டும் என்றும், வெண்டிலட்டர் உடன் கூடிய படுக்கை வசதிகளை கூடுதலாக ஏற்படுத்தவும் ஸ்டாலின் வலியுறுத்தினார்.

  பாதிப்பிற்கு ஒதுக்கப்பட்ட 60 கோடி ரூபாய் நிதி என்பது போதாது. எனவே தேவைப்பட்டால் 500 கோடி அல்லது ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

  இதற்கு பதில் அளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், லேசான இருமல் இருந்தாலும் தற்போது அரசு மருத்துவமனைக்கு வந்து தங்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய வருகிறார்கள். ஆனால் அனைவருக்கும் இந்த சோதனை நடத்தப்பட வேண்டிய அவசியமில்லை .

  மத்திய அரசு யார் யாருக்கு சோதனை செய்ய வேண்டும் என விதிமுறைகளை வகுத்துள்ளது. இந்த விதிமுறைகளின்படி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார்.

  தற்போது தமிழகம் முழுவதும் 1120 தனிமை வார்டுகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், இதன் எண்ணிக்கையை மூன்று மடங்கு உயர்த்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருப்பதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

  மேலும் 1500 வெண்டிலேட்டர் வசதியுடன் கூடிய படுக்கை வசதிகள் அரசு மருத்துவமனைகளில் உள்ளது. தற்போது கூடுதலாக 560 வென்டிலேட்டர்களை ஏற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்ட தலைமை மருத்துவமனைகள் மட்டுமல்லாது இரண்டாம்நிலை மருத்துவமனைகளிலும் வெண்டிலட்டர் வசதியை ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

  மேலும் சாதாரண முககவசம் ஒரு லட்சமும், மூன்று அடுக்கு கொண்ட முக்கவசங்கள் 10 லட்சம் கொள்முதல் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். ஆனால் தட்டுபாடு இருப்பதால் இன்னும் முழுமையாக கொள்முதல் செய்யமுடியவில்லை என்றும் அவர் கூறினார்.

  கொரோனா குறித்து பொதுமக்கள் தங்கள் சந்தேகங்களையும் புகார்களை தெரிவிக்க மாநில அளவில் சென்னையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் செயல்படும் இந்த கட்டுப்பாட்டு அறையைத் 104 என்ற எண் மூலம் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.

  கொரோனா பரிசோதனை ஆய்வு மையங்கள், தற்போது கோவை, சேலம், திருச்சி ஆகிய இடங்களில் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் தமிழகம் முழுவதும் உள்ள தலைமை மருத்துவமனைகளில் பரிசோதனை மையம் அமைக்க அனுமதி கோரியுள்ளதாகவும், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் பரிசோதனை மையத்திற்கு விரைவில் ஒப்புதல் கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.

  மேலும் ஓய்வு பெற்ற மருத்துவர்களை சிகிச்சை பணியில் ஈடுபடுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தனியார் மருத்துவமனைகளிலும் தனிமை வார்டுகளை ஏற்படுத்த அறிக்கை வெளியிடப்பட்டு இருப்பதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

  நோய் பரவுவதை தடுக்க பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் ரயில் நிலையங்களிலும் பேருந்து நிலையங்களிலும் பொது மக்கள் அதிகமாக நடமாடி வருவது கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.

  பொதுமக்கள் விடுமுறைக்கு சுற்றுலா செல்வது என்ற எண்ணங்களில் இருந்து நோய் எதிர்ப்பு எண்ணத்திற்கு வர வேண்டும் என்றார். பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே வைரஸ் பரவுவதை தடுக்க முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

  இதேபோன்று பாதித்துள்ள டெல்லி இளைஞருடன் தொடர்புடைய 193 பேர் கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் உரிய சோதனைக்கு உட்படுத்தப்பட்டு இருப்பதாகவும் அயர்லாந்தில் இருந்து பாதிப்புடன் சென்னை வந்த இளைஞருடன் தொடர்புடைய 90 பேரை கண்டுபிடித்து அவர்களுக்கு உரிய சோதனைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

  முதலமைச்சர்

  தொடர்ந்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பாதிப்பை தடுக்க உரிய தடுப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட்டு வருகிறது.

  உள்ளாட்சித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் பொதுமக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையங்கள் , ரயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

  சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கும் விடுதிக்கு வரும் பார்வையாளர்களுக்கும் உரிய சோதனைகள் நடத்தப்படும் என்றும் முதலமைச்சர் கூறினார்.


  இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:


  சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


  Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


  Also see... 

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: CoronaVirus, Edappadi palanisamy, TN Assembly