கொரோனாவுக்கு ஒதுக்கப்பட்ட நிதி யானைப் பசிக்கு சோளப் பொறி...! கே.எஸ். அழகிரி அறிக்கை

"மத்திய அரசு அறிவித்துள்ள நிவாரண உதவிகள் தமிழக மக்களுக்கு முழு பயனையும் அளிக்காதது மிகுந்த வேதனையை தருகிறது."

கொரோனாவுக்கு ஒதுக்கப்பட்ட நிதி யானைப் பசிக்கு சோளப் பொறி...! கே.எஸ். அழகிரி அறிக்கை
கே.எஸ். அழகிரி, தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர்.
  • Share this:
மத்திய அரசு கொரோனாவுக்காக ஒதுக்கியுள்ள நிதி யானைப் பசிக்கு சோளப் பொறியாகத்தான் இருக்கும் என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ். அழகிரி கூறியுள்ளார்.

அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

“கொரோனா ஊரடங்கு பாதிப்புக்கு நிவாரணம் அளிக்க 1,70,000 கோடி ரூபாய் நிதியுதவியை மத்திய அரசு வழங்கியுள்ளது. இதன் மூலம் 80 கோடி மக்களுக்கு அரிசி, கோதுமை வழங்குவது, விவசாயிகளுக்கு முதல் தவணையாக ரூ.2000, 20 கோடி பெண்களுக்கு மாதம் ரூ.500, விதவைகள், மூத்த குடிமக்களுக்கு 1000 ரூபாய் வழங்குவது என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்த அறிவிப்பு ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் திட்டம்தான். இது தற்போது விரிவுபடுத்தப்பட்டு, முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. சுய உதவிக் குழுவுக்கு வழங்கப்படுகிற கடனை 10 லட்சத்திலிருந்து 20 லட்சமாக உயர்த்துவதால், தற்போதைய சூழலில் எந்த பயனும் இல்லை. ஏற்கனவே இருப்பில் உள்ள கட்டிடத் தொழிலாளர் பாதுகாப்பு நிதி 30,000 கோடியை மாநில அரசு விருப்பம்போல் பயன்படுத்தலாம் என்று கூறிவிட்டதால், மத்திய அரசுக்கு எந்த நிதிச் சுமையும் இல்லை.

நாடு முழுவதும் உணவகங்களை மூடியதால் 20 லட்சம் பேரும், ஆட்டோமொபைல் தொழில்கள் முடக்கத்தால் 3.5 லட்சம் பேரும் வேலை இழந்துள்ளனர். ஏறத்தாழ 7.5 லட்சம் வாகன உற்பத்தி முடக்கப்பட்டுள்ளது. இதனால் 7 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது. தேசிய பங்குச் சந்தையின் வீழ்ச்சியால், முதலீட்டாளர்கள் 52 லட்சம் கோடி ரூபாய் வரை இழப்பைச் சந்தித்துள்ளனர். மேலும், நமது பொருளாதாரத்தில் 90 லட்சம் கோடி ரூபாய் இழப்பு என்று கூறப்படுகிறது.

Also read: வங்கிகள் இணைப்பைத் தள்ளிப் போடுங்கள் - ரவிக்குமார் எம்.பி. கோரிக்கைஇந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி நடப்பாண்டில் 4.5 சதவீதத்திலிருந்து 2.5 சதவீதமாகவும், அடுத்த ஆண்டில் எதிர்பார்க்கப்பட்ட 5.2 சதவீத வளர்ச்சி, 3.5 சதவீதமாக வீழ்ச்சியடையும் என்றும் பொருளாதார வல்லுநனர்களால் மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பின்னணியில் நம் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 130 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 64 சதவீதமாகும். இத்தகைய பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என தர மதிப்பீட்டு நிறுவனங்கள் அபாய சங்கு ஊதியுள்ளன.

நாட்டு மக்களை பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீட்டெடுக்க, பிரதமர் மோடி சிறப்பு நிவாரண திட்டங்களை அறிவிக்க வேண்டும். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஏற்கனவே வலியுறுத்திவரும் "நியாய்” (NYAY) திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் 6000 வீதம் குறைந்தபட்ச வருமானத்தை உறுதி செய்கிற வகையில் வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்ற மத்திய அரசு முன்வரவேண்டும்.

இதை தவிர கொரோனா ஊரடங்கால் வேலை இழந்த ஏழை, எளிய மக்களுக்கு உடனடியாக தங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்கிற வகையில் நேரடி பணமாற்றத்தின் மூலம் மாதத்துக்கு ரூ.3000 வீதம் 6 மாதங்களுக்கு 12 கோடி குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கவேண்டும். இதற்காக 2.2 லட்சம் கோடி ஒதுக்கினால் மொத்தம் 60 கோடி பயனாளிகளுக்கு பயன் தரும். நாடு தழுவிய முடக்கத்தால் குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, குறு, சிறு, நடுத்தரத் தொழில்களுக்குப் பெறப்பட்ட கடன்களுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும்.

மத்திய அரசு அறிவித்துள்ள நிவாரண உதவிகள் தமிழக மக்களுக்கு முழு பயனையும் அளிக்காதது மிகுந்த வேதனையை தருகிறது. தமிழகத்தில் மொத்த குடும்ப அட்டைகள் 2 கோடியே 1 லட்சம். ஆனால் மத்திய அரசின் அறிவிப்பின்படி பயன்பெறுவோர் 1 கோடியே 11 லட்சம் . இதில் 90 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் விடுபடுகிற நிலை ஏற்பட்டுள்ளது.

Also read: ஊரடங்கு: காவலர்கள் குடிமக்களைத் தாக்கக் கூடாது - கேரள உயர் நீதிமன்ற நீதிபதி

அதேபோல தமிழக அரசு நடைமுறைப்படுத்துகிற 9 சமூக பாதுகாப்பு திட்டங்களில் பயன்பெறுவோர் 32 லட்சம் பேர். ஆனால் மத்திய பாஜக அரசு நிறைவேற்றும் 3 சமூக நலத் திட்டங்களால் பயன்பெறுவோர் 20 லட்சம் பேர் மட்டுமே. இந்த பயனை பெறமுடியாத நிலையில் 12 லட்சம் பேர் உள்ளனர்.

மத்திய அரசின் இத்தகைய பாரபட்சமிக்க அணுகுமுறையால் எவரும் பாதிக்கப்படாமல் இருக்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரிய நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசை வலியுறுத்தவேண்டும்.

இன்றைய இக்கட்டான சூழலில் மத்திய பாஜக அரசுக்கு மிகப் பெரிய வரப்பிரசாதமாக அமைந்திருப்பது, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத வகையில் 30 டாலராக வீழ்ச்சியடைந்துள்ளதுதான். இதைப் பயன்படுத்தி நிதி ஆதாரத்தை பெருக்கிக் கொள்ள வேண்டும். எனவே, மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல் திட்டங்களை வகுத்து விரைந்து செயல்பட்டு, எதிர்கொண்டு வருகிற பேராபத்திலிருந்து காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கையை மக்களுக்கு ஏற்படுத்துவது மிக மிக அவசியமாகும்.

உலகத்தின் வல்லரசாக இருக்கிற 35 கோடி மக்கள் தொகை கொண்ட அமெரிக்கா, கொரோனா தாக்குதலில் இருந்து தொழில் முனைவோரை பாதுகாக்க 1.5 டிரில்லியன் டாலர் (நமது ரூபாய் மதிப்பில் 1 கோடியே 7 லட்சத்து 14 ஆயிரத்து 500 கோடி) நிதி ஒதுக்கியுள்ளது. பிரிட்டன் 900 பில்லியன் டாலரை ஒதுக்கியுள்ளது. ஆனால், நமது பிரதமர் மோடியோ 136 கோடி மக்கள் கொண்ட நம் நாட்டிற்கு, வெறும் 15 ஆயிரம் கோடியை ஒதுக்கியிருப்பது, யானைப் பசிக்கு சோளப் பொறியாகத்தான் இருக்கும் என்பதை தெரிவிக்க விரும்புகிறேன்.”

இவ்வாறு தனது அறிக்கையில் கே.எஸ். அழகிரி தெரிவித்திருக்கிறார்.

Also see:
First published: March 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading