இலவசத் தடுப்பூசி : பிரதமர் மோடிக்கு முன்னாள் அதிகாரிகள் வேண்டுகோள்

பிரதமர் நரேந்திர மோடி

நாட்டில் உள்ள குடிமக்கள் அனைவருக்குமே இலவசமாக தடுப்பூசி போடப்பட வேண்டும் என்று முன்னாள் குடிமைப் பணியாளர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 • Share this:
  இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தலைவிரித்தாடுகிறது, தினசரி பாதிப்பு 3 லட்சத்துக்கும் கீழ் படிப்படியாகக் குறைந்தாலும் பலி எண்ணிக்கை 4,000த்திற்கும் கீழ் குறையவில்லை. இந்நிலையில் தடுப்பூசி நடவடிக்கைகளை துரிதப்படுத்தவில்லை எனில் 6-8 மாதங்களில் 3வது அலை ஏற்படுவதை தவிர்க்க முடியாது என்று ஐஐசி பேராசிரியர் வித்யாசாகர் எச்சரித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

  இந்நிலையில், முன்னாள் அமைச்சரவை செயலர் கே.எம்.சந்திரசேகர் சுகாதாரத்துறை செயலர் சுஜாதா ராவ் வெளியுறவுத்துறை செயலர் மற்றும் தேசிய பாதுாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் உட்பட 116 முன்னாள் குடிமை பணியாளர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி உள்ளனர்.

  அதன் விபரம்: இந்த கொரோனா பெருந்தொற்று காலத்தில் மருத்துவ உதவி கேட்டு மக்களின் கதறல் அதை மிக அலட்சியமாக கையாளும் மத்திய அரசின் மனோபாவம் எங்களை கடுமையாக பாதித்துள்ளது. சர்வதேச சமூகம் நம் விஞ்ஞானிகள் எச்சரித்தும் இரண்டாம் அலைக்கு நாம் தயாராகவில்லை. முதல் அலைக்கும் இரண்டாம் அலைக்கும் இடையே போதிய இடைவெளி இருந்தும் மருத்துவ பணியாளர்கள் மருத்துவமனை படுக்கைள் ஆக்சிஜன் வென்டிலேட்டர் மருந்துகள் உள்ளிட்டவற்றை அதிகரிக்க அரசு தவறிவிட்டது.

  தடுப்பூசி விநியோகத்தில் உலகின் முன்னோடியாக நாம் விளங்கினாலும் கையிருப்பு திட்டமிடுதலில் தவறு செய்துவிட்டோம். நாட்டில் உள்ள அனைத்து குடிமகன்களுக்கும் தடுப்பூசி இலவசமாக வழங்கப்பட வேண்டும். கிராமம் மற்றும் நகர்புறங்களில் ஆர்டிபிசிஆர் பரிசோதனையை பெரும் அளவில் அதிகரிக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

  நாட்டில் தடுப்பூசி தட்டுப்பாடுகள் நிலவுவதால் மாநில அரசுகள் 21 கோடி தடுப்பூசிகளுக்காக வெளிநாட்டு டெண்டர் விடுத்துள்ளது. இப்போது 18-45 வயதினருக்கு அதிகம் தடுப்பூசி பயன்படுவதால் பிற பிரிவினருக்கான தடுப்பூசி பிரயோகம் குறைந்துள்ளது.

  தேவை அதிகரிப்பால் உலக நாடுகளிலிருந்து நம் மாநில அரசுகளின் கோரிக்கை நிறைவேற்றப்படுமா என்று சந்தேகம் எழுந்துள்ளது. உ.பி. 4 கோடி தடுப்பூசிகளுக்கும் தமிழகம் 5 கோடி தடுப்பூசிகள் கேட்டும், கேரளா 3 கோடி தடுப்பூசிகள் கேட்டும் வெளிநாடுகளுக்கு டெண்டர் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
  Published by:Muthukumar
  First published: