Booster shots: பொருளாதாரத்தை மீட்டெடுக்க 8 திட்டங்கள்: முழு விவரம்!

நிர்மலா சீதாராமன்

வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள், சிறு நிதி நிறுவனங்கள் கடன் வழங்கி வருகின்றன. இதில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் வரை கடன் வாங்குவோருக்கு அரசு உத்தரவாதம் வழங்கும் என்றும்  இதன்மூலம் 25 லட்சம் பேர் பயனடைவார்கள் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

  • Share this:
பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் 8 திட்டங்களை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். 

கொரோனா தொற்று 2வது அலை காரணமாக நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் 8  திட்டங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.  இதில் 4 திட்டங்கள் புதிய திட்டங்கள் ஆகும்.  ஏற்கனவே உள்ள 4 திட்டங்கள் கூடுதல் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு உதவும் வகையில் 1.10 லட்சம் கோடி மதிப்பிலான கடன் உத்தரவாத திட்டத்தை அவர் அறிவித்தார்.  இதில் 50 ஆயிரம் கோடி ரூபாய் சுகாதாரத் துறைக்கும்  மீதமுள்ள 60 ஆயிரம் கோடி ரூபாய் பிற துறைகளுக்கும்  ஒதுக்கப்படுவதாக அவர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.

23,220 கோடி ரூபாய் சுகாதாரத் துறைக்கு கூடுதலாக ஒதுக்கப்படுவதாக தெரிவித்த அவர்,  இந்த தொகை குறுகிய கால அவசரநிலைகளுக்கு தயாராவதற்கும் குழந்தை பராமரிப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படும் என்றார்.  , மாவட்ட, உள் மாவட்ட அளவில் ஐ.சி.யு.  படுக்கைககள், ஆக்சிஜன் விநியோகம் ஆகியவை அதிகரிக்கப்படும் என்றும்  மருத்துவ கருவிகள், மருந்துகள், தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெறுவது, ஆம்புலன்ஸ் சேவை ஆகியவை  தடையின்றி கிடைப்பது உறுதி செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும் படிக்க: பொது சுகாதாரத்துக்கு கூடுதலாக ரூ.23,220 கோடி...


நாட்டின் அனைத்து கிராம பஞ்சாயத்துகளுக்கும் பிராட்பேண்ட் இணைப்பை வழங்கும் பாரத் நெட் திட்டத்துக்கு கூடுதலாக 19,041 கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாகவும் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இதன் மூலம் இந்த திட்டத்திற்கான செலவு 61,09 கோடியாக உயர்ந்துள்ளது.  கிராம பஞ்சாயத்துகளில் இந்த திட்டம் விரிவுப்படுத்தப்படுவதோடு தரம் உயர்த்தப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் கூறினார்.

பெரிய அளவிலான மின்னணு உற்பத்திக்கான உற்பத்தி இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை வழங்கப்படும் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பிராந்திய விவசாய சந்தைப்படுத்தல் நிறுவனத்தில் மறுமலர்ச்சி ஏற்படுத்தப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதற்காக 77.45 கோடி ரூபாய்  முன்மொழியப்பட்டுள்ளதாகவும்  அவர் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

புரதச் சத்து, இரும்பு சத்து, ஜிங்க், விட்டமின் -ஏ  நிறைந்த புதிய பயிர் வகைகளை இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில்  உருவாக்கியுள்ளதாக தெரிவித்த நிர்மலா சீதாராமன்,  இவை நோய்,  பூச்சிகொல்லி, பஞ்சம், வெள்ளம் போன்றவற்றால் பாதிக்கப்படாது என்றும் அரிசி, பட்டாணி, தினை, மக்காச்சோளம் என 21 வகைகள் தேசத்துக்கு அர்ப்பணிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள், சிறு நிதி நிறுவனங்கள் கடன் வழங்கி வருகின்றன. இதில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் வரை கடன் வாங்குவோருக்கு அரசு உத்தரவாதம் வழங்கும் என்றும்  இதன்மூலம் 25 லட்சம் பேர் பயனடைவார்கள் என்றும் தெரிவித்த நிர்மலா சீதாராமன், இந்த கடனுக்கான வட்டி என்பது, வங்கியின் குறைந்த அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ள வட்டியுடன் 2 சதவீதம் அதிகமாக  இருக்கும் என்றார்.  இந்த கடனுக்கான அதிகபட்ச திருப்பி செலுத்தும் காலம் 3 ஆண்டுகள் ஆகும்.

இதையும் படிங்க: 5 லட்சம் சுற்றுலா பயணிகளுக்கு இலவச விசா..


வெளிநாடுகளுக்கு விமான சேவை தொடங்கிய பின்னர், வெளிநாடுகளில் இருந்து, இந்தியாவுக்கு வரும், முதல் 5 லட்சம் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார். சுற்றுலா துறையைச் சார்ந்தவர்கள் தங்கள் கடனை செலுத்தவும் தொழிலை  மீண்டும் தொடங்கவும் கடனுதவு வழங்கப்படும் என்று தெரிவித்தார். சுற்றுலா நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சமும் சுற்றுலா கைடுகளுக்கு ரூ.1 லட்சமும்  கடன் வழங்கப்படும்.

ஆத்ம நிர்பார் பாரத் திட்டம் நீட்டிக்கப்படுவதாகவும்  நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். ஆத்ம நிர்பார் பாரத் ரோஜ்கர் யோஜனாவின் கீழ், வேலை வாய்ப்பை உருவாக்கும் விதமாக புதிதாக பணியாளர்களை நியமிக்கும் நிறுவனங்களுக்கு இத்திட்டத்தின் கீழ்  சலுகை அறிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: தொழிலாளர்களுக்கான பி.எஃப். சலுகை நீட்டிப்பு..

அதன்படி, ஊழியர்களின் மாத ஊதியம்  ரூ.15 ஆயிரம் அல்லது அதற்கு கீழாக இருந்தால் பணியாளர்கள் பங்களிப்பாக 12 சதவீதம், நிறுவனத்தின் பங்களிப்பாக 12 சதவீதம் என 24 சதவீதம் 2 ஆண்டுகளுக்கு நிறுவனங்களுக்கு மானியமாக வழங்கப்படும். ஒருவேளை வேலை வழங்கும் நிறுவனத்தில் 1000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றினால், பணியாளர்கள் பங்களிப்பான 12 சதவீதம் மட்டும் வழங்கப்படும்.  இந்த திட்டம் அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 80 ஆயிரம் நிறுவனங்களைச் சேர்ந்த 21 லட்சத்து 40 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளதாக தெரிவித்தார்.

டி.ஏ.பி மற்றும் என்.கே.பி.சார்ந்த பூச்சிக்கொல்லி மருந்துகளுகாக கூடுதலாக 14,775 கோடி ரூபாய்  ஒதுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
Published by:Murugesh M
First published: