சென்னை மாநகராட்சி முழுவதும் கொரோனா தடுப்புப் பணிகளில் களப்பணியாளர்கள் ஈடுபட்டு வந்தனர். இவர்கள் ஒவ்வொரு மண்டலங்களிலும் வீடு வீடாகச் சென்று பரிசோதனை செய்வது, காய்ச்சல் உள்ளவர்களின் விவரங்களைச் சேகரிப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.
மண்டல அலுவலகங்கள் மூலமாகவும், தன்னார்வ அமைப்புகள் வாயிலாகவும் மாதச் சம்பளம் அடிப்படையில் இவர்களை சென்னை மாநகராட்சி நிர்வாகம் பணியில் அமர்த்தியது.

கொரோனா தடுப்புப் பணியில் களப்பணியாளர்
ஆனால், பல்வேறு மண்டலங்களில் பணியாற்றிய களப் பணியாளர்களுக்கு ஆரம்பம் முதலே தாமதமாக ஊதியம் வழங்கியதாகவும், கடைசியாக இன்னும் ஆகஸ்ட் மாத ஊதியம் வழங்கப்படவில்லை என்றும் பணியாற்றிய களப்பணியாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து நுங்கம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி யுவஸ்ரீ கூறுகையில், "கொரோனா காலகட்டத்தில் அச்சம் இருந்தாலும், மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தாலும், மோசமான குடும்ப பொருளாதாரச் சூழல் காரணமாகவும் இந்த பணியில் ஈடுபட்டோம். ஆனால் இன்னும் சம்பளம் வழங்கப்படாமல் இருப்பது வேதனை அளிக்கிறது.
Also read: வேட்பாளர்களை அறிவித்து வாக்கு சேகரிக்கும் பணியைத் தொடங்கியது நாம் தமிழர் கட்சி..
பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும், அன்றாட உணவு, போக்குவரத்திற்கு பணம் இல்லாமல் சிரமப்பட்டு இந்த வேலைக்கு சென்ற எங்களுக்கும் நிலுவையிலுள்ள சம்பளத்தை உடனே வழங்க வேண்டும்" என்றார்.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷிடம் கேட்டபோது, ஆகஸ்ட் மாத சம்பளம் மட்டும் வழங்கப்படவில்லை. அந்த ஊதியத்தை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாளை அவர்களுக்கு சம்பளம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.