கட்டுப்பாடுகளை மீறி திமுக, திரிணாமுல் கட்சியினர் வெற்றிக் கொண்டாட்டம்: தேர்தல் ஆணையம் எச்சரிகை

தேர்தல் கொண்டாட்டம்

5 மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், கொரோனா கட்டுப்பாடுகளை மீறி அரசியல் கட்சினர் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

 • Share this:
  5 மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், கொரோனா கட்டுப்பாடுகளை மீறி அரசியல் கட்சினர் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இத்தகைய செயல்களை உடனடியாக தடுத்து நிறுத்த மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல்  ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

  தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள்  இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன.

  கொரோனா பரவலின் 2வது அலைக்கு தேர்தல் ஆணையமே காரணம் என்றும்  5 மாநில தேர்தலின்போது கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்க தேர்தல் ஆணையம் தவறிவிட்டதாக சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்தது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாகப் பின்பற்றாவிட்டால் வாக்கு எண்ணிக்கையை தள்ளிவைக்க உத்தரவிட நேரிடும் என்றும் எச்சரித்தது.

  இந்நிலையில், தேர்தல் வெற்றி கொண்டாட்டங்களில் ஈடுபட அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்தது.  தடை உத்தரவை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம்  உத்தரவிட்டது.

  இந்நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வரும் நிலையில், கொரோனா கட்டுப்பாடுகளை காற்றில் பறக்கவிட்டபடி அரசியல் கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் முடிவை விட கட்சியினரின் உயிரே முக்கியம் என்றும் கட்சியினர் தேர்தல் கொண்டாட்டங்களை தவிர்க்க வேண்டும் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை மூலம் கேட்டுக்கொண்டிருந்தார்.

  எனினும், காலை முதலே ஏராளமான திமுகவினர் அண்ணா அறிவாயலத்தில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் குவிந்து வருகின்றனர். முகக்கவசம் போன்றவை அணியாமல் அவர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.


  மேற்கு வங்கத்திலும் திரிணாமூல் காங்கிரஸார் கொரோனா பரவலை கணக்கில் கொள்ளாமல் தேர்தல் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

  அரசியல் கட்சியினர்  தேர்தல் கொண்டாட்டங்களில் ஈடுபடுவது குறித்து தகவல் அறிந்த இந்திய தேர்தல் ஆணையம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.  இவ்வாறு கூடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி மாநில தலைமை செயலாளர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

  தேர்தல் கொண்டாட்டங்களை தடுத்து நிறுத்தாத சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பணி இடைநீக்கம் செய்து கிரிமினல் நடவடிக்கை எடுக்கவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

   


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Murugesh M
  First published: