HOME»NEWS»CORONAVIRUS-LATEST-NEWS»doses price and side effects of covid 19 vaccine scs

விலை, டோஸ், பக்க விளைவுகள்: கொரோனா தடுப்பூசி குறித்து நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டியவை...

முதல் நாளான இன்று, 3 லட்சத்துக்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு கோவிட் -19-க்கு எதிரான தடுப்பூசி போடப்படுகிறது.

விலை, டோஸ், பக்க விளைவுகள்: கொரோனா தடுப்பூசி குறித்து நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டியவை...
கொரோனா தடுப்பூசி
  • Share this:

உலகின் மிகப்பெரிய கோவிட்-19 தடுப்பூசி திட்டத்தை இந்தியா தொடங்கியுள்ளது. 3 கோடி மக்களுக்கு முன்னுரிமை தரும் வகையில் இந்த தடுப்பூசிகள் தயார் செய்யப்பட்டுள்ளன. தடுப்பூசி புழக்கத்திற்கு வந்திருக்கும் முதல் நாளான இன்று, 3 லட்சத்துக்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு கோவிட் -19-க்கு எதிரான தடுப்பூசி போடப்படுகிறது. இந்த கொரோனா தடுப்பூசி திட்டத்தை டெல்லியில் காணொலி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். .

இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் மற்றும் அதன் விலைகள்


சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவால் உருவாக்கப்பட்ட கோவிஷீல்ட் மற்றும் பாரத் பயோடெக்கின் கோவாக்சின் ஆகிய 2 தடுப்பூசிகளுக்கு இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இவை ஏற்கனவே அனைத்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன. கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஒரு டோஸ் இந்தியாவில் ரூபாய் 200 முதல் 295-க்குள் கிடைக்கும். தனியார் சந்தையில் வாங்கினால் ரூ. 1,000 செலவாகும் என சீரம் இன்ஸ்டிடியூட் தலைவர் ஆதர் பூனவல்லா கூறியுள்ளார்.

ஏதேனும் பக்க விளைவுகள் உண்டா?



இரண்டு தடுப்பூசிகளிலும் லேசான பக்க விளைவுகள் இருப்பது குறித்து சுகாதார அமைச்சகம் எச்சரித்துள்ளது.கோவிஷீல்டை பொறுத்தவரை, ஊசி போட்ட இடத்தில் வலி, தலைவலி, சோர்வு, தசைநார் வலி, உடல்நலக்குறைவு, காய்ச்சல், குளிர், மூட்டுவலி, மற்றும் குமட்டல் போன்ற சில லேசான விளைவுகள் ஏற்படலாம்.

கோவாக்ஸின் விஷயத்தில் சில லேசான பாதகமான விளைவுகள் ஏற்படலாம். ஊசி போட்ட இடத்தில் வலி, தலைவலி, சோர்வு, காய்ச்சல், உடல் வலி, வயிற்று வலி, குமட்டல், வாந்தி, தலைச்சுற்றல்-மயக்கம், நடுக்கம், வியர்வை, குளிர், இருமல் மற்றும் ஊசி போட்ட இடத்தில் வீக்கம் ஆகியவை இதில் அடங்கும். தடுப்பூசிக்குப் பிந்தைய எதிர்விளைவுகளுக்கு அறிகுறி தென்பட்டால், பாராசிட்டமல் பயன்படுத்தப்படலாம் என சுகாராத அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

டோஸ்களை மிக்ஸ் செய்யக் கூடாது - சுகாதார அமைச்சகம்

அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் சுகாதார அமைச்சகம் எழுதிய கடிதத்தில், இந்திய அரசின் அங்கீகாரத்தின் கீழ் அவசர பயன்பாட்டுக்கு வரும் கொரோனா வைரஸ் தடுப்பூசி 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே. தவிர, COVID-19 தடுப்பூசிகளின் பரிமாற்றம் இதில் அனுமதிக்கப்படவில்லை என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதாவது முதலில் என்ன தடுப்பூசி போட்டீர்களோ அதைத்தான் இரண்டாவது டோஸுக்கும் போட வேண்டும். முதலில் ஒன்று, இரண்டாவது முறை வேறொன்று என இருக்கக்கூடாது என சுகாதார அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் மனோகர் அக்னானி எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னுரிமை யாருக்கு?

சுகாதார பணியாளர்களுக்கு தான் இதில் முன்னுரிமை. ஏனெனில் அவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படுவதற்கான அதிக ஆபத்து உள்ளதை நாம் அறிவோம். அடுத்து, முன் கள பணியாளர்கள். இது COVID-19 இறப்பு விகிதத்தை குறைத்து, சமூக மற்றும் பொருளாதார தாக்கத்தைக் குறைக்க உதவும். கடைசியாக, 50 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் 50 வயதிற்கு உட்பட்ட மற்ற நோய்களுடன் இருப்பவர்களுக்கு தடுப்பூசி போடப்படும். ஏனெனில் இந்த பிரிவில் அதிக இறப்பு உள்ளது.

கோ-வின் ஆப்

கோ-வின் என்பது கோவிட் -19 தடுப்பூசி விநியோகத்தை கண்காணிக்க மத்திய அரசால் வடிவமைக்கப்பட்ட ஒரு ஆன்லைன் செயலியாகும். இது கொரோனா வைரஸ் எதிர்ப்பு தடுப்பூசி திட்டத்திற்கு அடித்தளமாக அமையும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மக்கள் சுய விபரங்களை பதிவு செய்யும் வகையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், முதலில் முன்கள தொழிலாளர்கள் மற்றும் அதிக பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்பதால், இந்த செயலி நன்கு செயல்பட சிறிது காலம் ஆகும். கோ-வின் பயன்பாட்டில் ஐந்து தொகுதிகள் உள்ளன. நிர்வாகி, பதிவு, தடுப்பூசி, பயனாளியின் ஒப்புதல், மற்றும் அறிக்கை என 5 முக்கிய தொகுதிகள் உள்ளன. நாட்டில் COVID-19 தடுப்பூசிக்கான கண்காணிப்பு மற்றும் பதிவை உறுதி செய்வதற்காக இவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. மொபைல் பயன்பாடு ஈவின் (எலக்ட்ரானிக் தடுப்பூசி நுண்ணறிவு நெட்வொர்க்) மேம்படுத்தப்பட்ட பதிப்பாகும். இது கூகிள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர் வழியாக இலவசமாக பதிவிறக்கம் செய்ய முடியும். கயோஸில் இயங்கும் ஜியோ தொலைபேசிகளிலும் இந்த பயன்பாடு விரைவில் தொடங்கப்படலாம்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Shalini C
First published: