சென்னையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து, வீடு வீடாக சென்று காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறியும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி, குடியிருப்பு பகுதிகளில் தொடர்ந்து காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படுகின்றன. வீடு வீடாக சென்று காய்ச்சல் பாதிப்பு குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றது. நேற்று ஒரே நாளில் 229 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டன. 18,099 பேர் முகாமில் பங்கேற்றனர்.
இந்நிலையில் சென்னை மாநகராட்சி நிரிவாகம் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அத்துடன் பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. இதை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட இருக்கின்றது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தற்போது கொரோனா நோய் தொற்றின் 2 ஆவது அலை அதிகரித்து வருவதால் நோய் தொற்று பரவலை தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
இதற்காக பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதை மீறினால் அபராதம் விதிப்பதுடன் நடவடிக்கைகள் எடுக்கப்படும். கொரோனா நிபந்தனைகளை கடைபிடிக்காவிட்டால் அவர்களுக்கு ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படும். முக கவசம் அணியாவிட்டால் ரூ.200 செலுத்த வேண்டும். முக கவசத்தை வாய் மற்றும் மூக்கு மூடி இருக்கும் வகையில் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும்.
பொது இடத்தில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும். பொதுமக்கள் கூடும் இடங்களில் கண்டிப்பாக சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும். அதை மீறுபவர்கள் ரூ.500 அபராதம் செலுத்த வேண்டும்.
சலூன்கள், அழகு நிலையங்கள், ஜிம்கள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் அவர்கள் ரூ.5 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும்.
நோய் கட்டுப்பாட்டு மண்டலங்களில் விதிமுறைகளை மீறும் தனி நபர்களுக்கு ரூ.500-ம், வாகனம் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு ரூ.5 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படும்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருச்சி மாநகராட்சிப் பகுதிகளில் கொரோனா பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறியும் வகையில், வார்டு வாரியாக காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படுகின்றன. திருச்சி மாநகராட்சி, மாவட்டத்தில் தினமும் 4, 500 பேருக்கு பரிசோதனையும் 600க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசியும் செலுத்தப்படுகின்றன.
திருச்சி மாவட்டத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai, Corona spread, CoronaVirus, Covid-19