கொரோனா தடுப்பூசி இரண்டாவது டோஸ் தாமதமாக போடலாமா? மருத்துவர்கள் விளக்கம்!

மாதிரி படம்

இந்தியாவில் அடுத்ததாக அறிமுகப்படுத்தப்பட இருக்கின்ற ஸ்புட்னிக் -வி தடுப்பூசியின் இரண்டாவது டோசை மூன்று வார இடைவெளியில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வரும் வேளையில் பலருக்கு இரண்டாவது டோஸ் மருந்து கிடைப்பதில்லை. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி இரண்டாவது டோஸ் தாமதமாக போட்டுக்கொண்டால் என்னவாகும் என்ற கேள்விக்கு மருத்துவர்கள் விளக்கமளித்துள்ளனர்.

இந்தியாவில் பயன்பாட்டில் இருக்கும் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளை இரண்டு டோஸ்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். கோவாக்சின் தடுப்பூசியை 4 வாரத்தில் இரண்டாவது டோஸ் எடுத்துக்கொள்ள வேண்டும். கோவிஷீல்ட் தடுப்பூசி 6 முதல் 8 வாரங்களில் இரண்டாவது டோஸ் எடுத்துக்கொள்ளவேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த உரிய காலத்தில் இரண்டாவது டோஸ் எடுத்துக் கொள்ளாவிட்டால் தடுப்பூசியின் பாதுகாப்பு குறையும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து நுரையீரல் நிபுணர் மருத்துவர் ஜெயராமன் கூறுகையில், " இரண்டாவது டோஸ் உரிய நேரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஓரிரு நாட்கள் முன்போ பின்போ எடுத்துக்கொள்வதில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் இரண்டாவது டோஸ் எடுத்துக்கொள்ள பல வாரங்கள் தாமதமானால் எடுத்துக்கொண்ட முதல் போஸின் வீரியம் குறைந்து போகும். இரண்டாவது டோஸ் எடுத்துக்கொள்ளும்போது அது மீண்டும் முதல் டோஸ் எடுத்துக்கொள்வதற்கு சமமாகும் " என்றார்.

Also read... Explainer: இந்தியாவில் நீடிக்கும் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு - மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன?

கோவிஷீல்டு தடுப்பூசி முதலில் நான்கு வாரங்களில் இரண்டாவது டோஸ் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. ஆனால் அதனை மாற்றி 6 முதல் 8 வாரங்களில் இரண்டாவது தோசை எடுத்துக் கொண்டால் அந்த தடுப்பூசியின் மூலம் கிடைக்கும் பாதுகாப்பு அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவித்தன.

அதனடிப்படையில் இந்தியாவிலும் இந்த தடுப்பூசியை இரண்டாவது டோஸ் செலுத்துவதற்கான கால அவகாசம் மாற்றப்பட்டது. ஆனால் இதேபோன்று மற்ற தடுப்பூசி களுக்கும் இது செல்லும் என்று நினைக்க கூடாது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும் ஆய்வுகளின் அடிப்படையில் கூறக்கூடிய உரிய காலத்தில் இரண்டாவது டோஸ் போடும் போது மட்டுமே முழு பாதுகாப்பை நாம் எட்ட முடியும் என்றும் தெரிவிக்கின்றனர்.

இதேபோன்று தொற்று நோய் மருத்துவர் ஹரிஹரன் இது குறித்து கூறுகையில், " இரண்டாவது டோஸ் உரிய நேரத்தில் எடுத்தும் கொள்ளும் போது தான் அதற்கான பலன் முழுமையாக கிடைக்கும். தாமதம் ஆனால் அதன் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்" என்கிறார் .

இந்தியாவில் அடுத்ததாக அறிமுகப்படுத்தப்பட இருக்கின்ற ஸ்புட்னிக் -வி தடுப்பூசியின் இரண்டாவது டோசை மூன்று வார இடைவெளியில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: