காட்சி ஊடகத்தினருடன், சென்னை தலைமை செயலகத்தில், நேற்று முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார் அப்போது மக்களை அச்சுறுத்தாமல் விழிப்புணர்வு கொடுங்கள் என்று ஊடகத்துறையினரை கேட்டுக் கொண்டார்.
3.50 கோடி தடுப்பூசிகள் கொள்முதல் செய்ய, சர்வதேச ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு உள்ளது.மேற்கு வங்கம், துர்காபுரியில் இருந்து, 80 டன் திரவ ஆக்சிஜன், ரயிலில் வந்துள்ளது. நெதர்லாந்து நாட்டில் இருந்து, விமானப்படை விமானத்தில், திரவ ஆக்சிஜன் கொண்டு வரப்பட்டுள்ளது, என்று கூறினார் ஸ்டாலின்.
ஊடகத்துறையினருக்கு ஸ்டாலின் வைத்த கோரிக்கை:
மருத்துவ நெருக்கடி, நிதி நெருக்கடியை ஒரு சேர சமாளித்து வருகிறோம்.இதை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில், ஊடகங்களின் ஒத்துழைப்பு மிகவும் முக்கியம். அரசு எடுத்து வரும் முயற்சிகளை, ஊடகங்கள் முழுமையாக எடுத்துரைக்க வேண்டும். இது, அரசியல் விவகாரம் அல்ல; உயிர் காக்கும் விஷயம் என்பதால், கொரோனா விஷயங்களை மிகுந்த எச்சரிக்கையுடன் வெளியிட வேண்டும்.
தமிழக அரசு வெளிப்படைத் தன்மையாக உள்ளது; எதையும் மறைக்கக் கூடாது என, உத்தரவிட்டு உள்ளேன். பல மாதங்களாக மறைக்கும் நிலைமை நீடித்துள்ளது. இப்போது, முழு உண்மையை தெரிவித்து வருகிறோம்.தவறான செய்திகளை வெளியிட வேண்டாம். தனியார் ஆம்புலன்ஸ்கள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதால், கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஆனால், '108' ஆம்புலன்சுக்கு கட்டணம் என, தவறாக செய்தி போடுகின்றனர். இது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளில், தமிழக அரசு முனைப்பாக ஈடுபட்டாலும், மக்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அதை சரியாக அவர்களிடம் கொண்டு போய் சேர்ப்பதில், ஊடகங்களின் ஒத்துழைப்பு மிகவும் முக்கியம். மக்கள் உயிர் காக்க உறுதுணையாக இருங்கள். அரசின் செய்திகளை முழுமையாக வெளியிடுங்கள். சந்தேகம் இருந்தால், அமைச்சர்கள், அதிகாரிகளிடம் கேட்டு வெளியிடுங்கள். விழிப்புணர்வு வாசகங்களை பரப்ப வேண்டும்.
'டிவி' தொடர்களில் தோன்றும் நபர்கள், முக கவசம் அணிந்திருப்பது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டால், அது, மக்கள் மனதில் ஆழமாகப் பதியும். முக கவசம் அணிவது பாதுகாப்பானது. 'டிவி'க்களில் தொடர் நாடகங்கள், செய்திகள் ஒளிபரப்பும் போது, விழிப்புணர்வு வாசகங்களை வெளியிட வேண்டும். நீங்கள் வெளியிடும் செய்திகள், மக்களை பயத்தில் ஆழ்த்தி விடக்கூடாது; விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும். நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட்டால், கொரோனா பெருந்தொற்றில் இருந்து மீண்டு வர முடியும்.
இவ்வாறு கூறினார் முதல்வர் ஸ்டாலின்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Corona, M.K.Stalin, Mass Media, Tamil Nadu govt