துரைமுருகன் உடல்நிலை சீராக உள்ளது - மருத்துவமனை அறிக்கை

துரைமுருகன் உடல்நிலை சீராக உள்ளது - மருத்துவமனை அறிக்கை

துரைமுருகன்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் திமுக பொது செயலாளர் துரைமுருகனின் உடல்நிலை சீராக உள்ளதாக ரேலா மருத்துவமனை தெரிவித்துள்ளது.

 • Share this:
  murumuruganதிமுக பொது செயலாளர் துரைமுருகன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னை குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

  இதனிடையே நேற்று துரைமுருகனின் உடல்நிலை மோசமடைந்ததாக தகவல் வெளியானது. இதையடுத்து ரேலா மருத்துவமனை நிர்வாகம் துரைமுருகனின் உடல்நிலை குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

  அதில் துரைமுருகனின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், தொடர்ந்து மருத்துவர்கள் குழு கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  கடந்த ஆண்டு தொடக்கம் முதல் நாட்டையே அச்சுறுத்தி வரும் கொரோனாவின் பிடியில் தமிழக மக்களும் தலைவர்களும் கூட சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்றனர். எம்எல்ஏக்கள், எம்பிக்களும் தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்ட நிலையில், கன்னியாகுமரி எம்.பி. வசந்த குமார், சேப்பாக்கம் எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் ஆகியோர் மீள முடியாமல் காலமாகினர்.

  இந்த சூழலில் சட்டமன்றத் தேர்தல் பரப்புரையும், தனிமனித இடைவெளி என்றால் கிலோ என்ன விலை என கேட்கும் வகையில் அதில் கூடிய கூட்டமும் கொரோனா பரவ வசதியாய் போனது. அதுவரையில் பொது நிகழ்ச்சிகளில் அதிகம் தலைகாட்டாத தலைவர்கள் கூட மக்களை நேரில் சந்தித்து வாக்கு கேட்க வீதி வீதியாய் செல்ல வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டனர்.

  அதிலும், முகக்கவசம் இன்றி பேசியும், வாக்காளருக்கு நெருக்கமாக சென்றும் பரப்புரை செய்ததால் கொரோனாவின் வலையில் அவர்களில் சிலர் சிக்கிக் கொள்ள நேர்ந்தது. மக்கள் நீதி மய்ய வேளச்சேரி வேட்பாளர் சந்தோஷ் பாபு, சிவகங்கை இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் குணசேகரன் ஆகியோர் பரப்புரை தொடங்கிய சில நாட்களிலேயே தொற்றால் பாதிக்கப்பட்டு வாக்கு சேகரிப்பை கைவிட நேர்ந்தது.

  மக்கள் நீதி மய்யத்தின் அண்ணா நகர் வேட்பாளர் பொன்ராஜ் பரப்புரையில் தீவிரம் காட்டி வந்த நிலையில் கொரோனா தாக்க, ஆன்லைன் பரப்புரைக்கு மாறிக் கொண்டார். குறிஞ்சிப்பாடி திமுக வேட்பாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பாபநாசம் தொகுதி வேட்பாளரான மனிதநேய மக்கள் கட்சித் தலைவருமான ஜவாஹிருல்லாவும் கொரோனாவிடம் இருந்து தப்பிக்க இயலவில்லை.

  வேட்பாளர்கள் மட்டுமின்றி அவர்களுக்காக பரப்புரைக் களம் கண்ட தலைவர்களையும் கொரோனா விட்டுவைக்கவில்லை. தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பாதிக்கப்பட்டார். தமிழகம் முழுவதும் சுற்றி வந்த திமுக எம்.பி. கனிமொழி கொரோனாவால் பாதிக்கப்பட்டு பாதுகாப்பு கவச உடையுடன் வாக்களிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. வாக்குப்பதிவு முடிந்தாலும் கொரோனாவின் தாக்கம் ஓயவில்லை என்றுதான் கூற வேண்டும். திமுக பொதுச்செயலாளரும், காட்பாடி வேட்பாளருமான துரைமுருகனுக்கு தொற்று உறுதியாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

  அதிமுகவின் பல்லடம் வேட்பாளர் எம்.எஸ்.எம். ஆனந்தன், திருப்பூர் வடக்கு தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் எம்.சுப்பிரமணியனும் வாக்குப்பதிவுக்கு பின் தொற்று பாதித்தவர்களின் பட்டியலில் சேர்ந்துள்ளார்கள். அரவக்குறிச்சி தொகுதி முழுவதும் இடைவிடாது பரப்புரை செய்த அத் தெகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலையும் கொரோனாவால் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

  வேட்பாளர்கள், தலைவர்களுக்கு தொற்று உறுதியாவது வெளிப்படையாகத் தெரிகிறது. ஆனால் அவர்களின் கூட்டங்களில் கூடிய பல்லாயிரம் பேருக்கு தொற்று பாதிக்கப்பட்டதா, அவர்களின் மூலம் வேறு யாருக்காவது பரவியதா என பரிசோதிக்கப்படாதது துரதிருஷ்டமே
  Published by:Sheik Hanifah
  First published: