கொரோனாவினால் பெரிய அளவில் பாதிக்கப்பட்ட பிரேசிலில், குறிப்பாக வடக்கு பிரேசில் மானவ்ஸில் மருத்துவச் சிகிச்சைக்காகக் காத்திருப்பது விரயம் என்று மக்கள் தங்கள் சொந்தப் பயனுக்கான ஆக்சிஜனுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவலம் நேர்ந்துள்ளது.
கொரோனா நோயாளிகளை மருத்துவனைக்கு அனுப்பாமல் பலரும் வீடுகளிலேயே வைத்து சிகிச்சை பார்த்து வருகின்றனர். இதற்கு ஆக்சிஜன் தேவைப்படுவதால் கடும் வெயிலிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆக்சிஜன் வாங்கிச் செல்கின்றனர்.
கொரோனாவினால் பிரேசிலின் மருத்துவ அமைப்புகளே பெரிய அளவில் சரிவு கண்டன. இதில் வடக்கு பிரேசில் நகரமான மானவ்ஸில் முதல் அலை அடித்து ஓயாத நிலையில் தற்போது அதன் உருமாறிய புதியவகையும் தாக்கி வருகிறது. அமேசோனாஸில் புதுவகை கரோனாவுக்கு 187 பேர் மரணமடைந்துள்ளனர்.
பிரேசில் அதிபர் மீது கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில் அமேசோனாஸுக்கு பிராணவாயு சப்ளை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் எத்தனை நாளைக்கு அரசாங்கம் ஆக்சிஜன் சப்ளை செய்யும் என்று மக்கள் தங்களுக்கான பிராணவாயு சிலிண்டர்களை தாங்களே நீண்ட வரிசையில் நின்று வாங்கிச் செல்கின்றனர்.
பலருக்கும் ஆக்சிஜன் கிடைப்பதில்லை. மருத்துவமனைக்குச் செல்லக் கூடாது என்பதில் தெளிவாக உள்ளனர் மக்கள். இணையதளம் மூலமாகவும் மருத்துவ நண்பர்கள் மூலமாகவும் தாங்களாகவே தெரிந்து கொண்டு, பயிற்சி பெற்று வீட்டிலேயே கொரோனாவ் நோயாளிகளுக்கு ஆக்சிஜனை அளித்து வருகின்றனர். பிரேசிலில் இதுவரை 2 லட்சத்து 20 ஆயிரத்து 237 பேர் கொரோனாவுக்குப் பலியாகியுள்ளனர். உலகம் முழுதும் கொரோனாவுக்கு 21 லட்சத்து 84 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர்.