கொரோனா பாதிப்பு டெல்லியில் அதிகரித்து வரும் நிலையில், டெல்லி மக்களுக்கு மட்டுமே அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று உத்தரவிட்டிருந்தார். மத்திய அரசின் கீழ்வரும் எய்ம்ஸ், ராம் மனோகர் லோகியா, உள்ளிட்ட உள்ள ஆறு மருத்துவமனைகளில் மட்டும் அனைவருக்கும் சிகிச்சை வழங்கப்படும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
டெல்லி அமைச்சரவையின் இந்த உத்தரவுக்கு துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் தடை விதித்திருக்கிறார். கொரோனா சிகிச்சைக்காக வரும் அனைவருக்கும் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும், டெல்லியைச் சாராதவர்கள் என்ற அடிப்படையில் சிகிச்சை யாருக்கும் மறுக்கப்படக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், அனைவருக்கும் மருத்துவ சிக்சை என்பதை உச்சநீதிமன்றமும் பல்வேறு வழக்குகளில் தெளிவுபடுத்தியுள்ளதாக அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் வழிமுறைகள் அடிப்படையில், கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்து நோய் அறிகுறி இல்லாமல் இருப்பவர்களுக்கும் சோதனை செய்யப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளது. அத்தோடு, அனைத்து மருத்துவமனைகளிலும் இந்த உத்தரவு செயல்படுத்தப்படுகிறதா என்பதை அரசு அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"துணைநிலை ஆளுநரின் உத்தரவு பெரிய பிரச்னையைக் கிளப்பியுள்ளது. இக்கட்டான சமயத்தில் நாடு முழுவதுமிருந்தும் வருபவர்களுக்கு மருத்துவ சிகிக்கை வழங்குவது என்பது கடினமான ஒன்று. ஆனாலும் டெல்லி அரசு முயற்சிக்கும்" என முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, "பாஜகாவின் அழுத்தத்தால்தான் துணைநிலை ஆளுநர், அரசின் உத்தரவை ரத்து செய்துள்ளார். இதனால் டெல்லிவாசிகளுக்கு டெல்லி மருத்துவமனைகளில் படுக்கை கிடைக்காது. கொரோனா பாதிப்பை பாஜக ஏன் அரசியலாக்குகிறது" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தை எட்டியுள்ளது. 874 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். பாதுகாப்பு மேலும் அதிகரித்து வரும் நிலையில் இந்த மாத இறுதிக்குள் 15 ஆயிரம் படுக்கைகள் தேவைப்படும் என நிபுணர்கள் குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன்
இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Also see:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.