Remdesivir | அரசுதான் கொள்முதல் செய்கிறது... ரெம்டெசிவிர் மருந்துக்கு தட்டுப்பாடு எப்படி வருகிறது - டெல்லி உயர்நீதிமன்றம் கேள்வி

ரெம்டெசிவர் - கொரோனா மருந்து

டெல்லி நகரமே இந்த மருந்து இல்லாமல் தவிக்கிறது. அரசாங்கம்தான் மருந்தை மொத்தமாக கொள்முதல் செய்கிறது. இருந்தும் ஏன் இப்படி நிகழ்கிறது

  • Share this:
    கொரோனா இரண்டாவது அலை இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக தலைநகர் டெல்லியே தத்தளிக்கிறது. மத்திய அரசு தங்களுக்கு தேவையான ஆக்சிஜனை பெற்றுத்தரவேண்டும் என கையைவிரித்தது ஆம் ஆத்மி அரசு. ஆக்சிஜன் பற்றாக்குறை, படுக்கை வசதிகள் இல்லாதது, ரெம்டெசிவிர் மருந்துக்கான தட்டுப்பாடு ஆகியவை டெல்லி மக்களை மேலும் வேதனைப்படுத்தியுள்ளது. தனியார் மருத்துவமனை ஒன்று மத்திய அரசிடம் இருந்து ஆக்சிஜன் பெற்றுத்தாருங்கள் என நீதிமன்ற படியேறிய சம்பவமும் நடந்தது.

    இந்நிலையில் டெல்லி உயர்நீதிமன்றம் அம்மாநில அரசையும், மத்திய அரசையும் நோக்கி  ரெம்டெசிவிர் மருந்து தட்டுப்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளது. டெல்லியை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் தாக்கல் செய்த மனுவில், ரெம்டெசிவிர் மருந்துகளில் 6 அளவுகளில் 3 மட்டுமே தனக்கு கிடைத்துள்ளது. மீதியுள்ள 3 மருந்துகளை தனக்கு வழங்க டெல்லி அரசை உத்தரவிடவேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது தான் மத்திய அரசு, ஆம் ஆத்மி அரசாங்கத்தை நோக்கி இந்த கேள்வியை நீதிமன்றம் எழுப்பியது.

    டெல்லி நகரமே இந்த மருந்து இல்லாமல் தவிக்கிறது. அரசாங்கம்தான் மருந்தை மொத்தமாக கொள்முதல் செய்கிறது. இருந்தும் ஏன் இப்படி நிகழ்கிறது என்ற கேள்வியை டெல்லி உயர்நீதிமன்றம் முன்வைத்தது. இதற்கு பதிலளித்த டெல்லி அரசு தரப்பு, டெல்லியில் இந்த மருந்தை உற்பத்தி செய்வதற்கான வசதிகள் இல்லை. வெளிமாநிலங்களில் இருந்தே மருந்து பெறப்படுகிறது. வெளிமாநிலங்கள் அவர்களின் தேவையை பூர்த்தி செய்துக்கொண்ட பின்னரே மருந்தை விநியோகிக்கின்றனர் எனப் பதிலளித்தது. பிப்ரவரி மாதம் ஏராளாமான ஸ்டாக் இருந்தது. ஆனால் அவை தற்போது காலாவதியாகிவிட்டது. ஏனெனில் அப்போது இந்த மருந்து மருத்துவர்களால் தீவிரமாக பரிந்துரைக்கப்படவில்லை எனக் கூறியது.

    இந்த விளக்கத்தை ஏற்க நீதிமன்றம் மறுத்தது. எல்லா இடங்களிலும் மருத்துவர்களால் இந்த மருந்து பரிந்துரைக்கப்படுகிறது என நீதிபதிகள் கூறினர். இந்த மருத்தை இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதிக்கவில்லையா என்ற கேள்வியை நீதிபதிகள் முன்வைத்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது மத்திய அரசு தரப்பில், ’இந்த மருந்தை மருத்துவமனைகளில் மட்டுமே பெற முடியும். மருந்தகங்களில் மக்கள் எப்படி வாங்க முடியும் எனக் கூறப்பட்டது. இதற்கு பதிலளித்த நீதிமன்றம் “மருத்துவமனைகளில் படுக்கைகள் அல்லது ஆக்சிஜன்கள் கிடைக்கவில்லை. அங்கிருந்து மக்கள் எப்படி மருந்தை பெறுவார்கள்” என காட்டமாக கேள்வி எழுப்பியது.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Ramprasath H
    First published: