பல நிர்வாகக் குளறுபடிகளால் வெளிநாட்டிலிருந்து வந்த கொரோனா நிவாரணப் பொருட்கள் தேக்கம்

பல நிர்வாகக் குளறுபடிகளால் வெளிநாட்டிலிருந்து வந்த கொரோனா நிவாரணப் பொருட்கள் தேக்கம்

கொரோனா நிவாரண பொருட்கள்

கொரோனா பாதிக்கப்பட்டோருக்கு உதவுவதற்காக வெளிநாடுகளில் இருந்து அனுப்பப்பட்ட பொருட்கள், சுங்கத் துறை ஒப்புதல் மற்றும் எங்கு அனுப்புவது போன்ற குழப்பங்களால் தேங்கி உள்ளன.

 • Share this:
  கடந்த 10 நாட்களாக மருத்துவ சாதனங்கள், மருந்துகள், ஆக்சிஜன் செறிவூட்டிகள், வெண்டிலேட்டர்கள் என்று பல வெளிநாடுகளிலிருந்தும் இந்தியாவுக்கு உதவிப்பொருட்கள் குவிந்து வருகின்றன. ஆக்சிஜன் தட்டுப்பாடு, மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் தட்டுப்பாடு உள்ள நிலையில் நிவாரணப்பொருட்கள் நிர்வாகக் குளறுபடிகளால் நோயாளிகளுக்குச் செல்லாமல் தேங்கிக் கிடக்கின்றன.

  நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை மிக தீவிரமாக உள்ளது. ஆக்சிஜன், மருந்து, தடுப்பூசிகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல நாடுகளில் இருந்து உதவிப் பொருட்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. 20 விமானங்களில் உதவிப் பொருட்கள் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

  ஆக்சிஜன் செறிவூட்டிகள்,'ரெம்டெசிவிர்'மருந்துகள் என,பல பொருட்கள் வந்துள்ளன. ஆனால், சுங்கத் துறை அனுமதி வழங்குவதில் உள்ள கோளாறுகளால், பெரும்பாலான பொருட்களை வெளியே அனுப்ப முடியவில்லை.அதைத் தவிர, அந்தப் பொருட்களை எங்கு, யாருக்கு அனுப்ப வேண்டும் என்பது தொடர்பான தெளிவான திட்டமிடல் இல்லாதது, போக்குவரத்து வசதி செய்யாதது ஆகிய நிர்வாக குளறுபடிகளும் இணைந்து, உதவிப் பொருட்கள் தேங்குவதற்கு காரணமாகி உள்ளன.  இது குறித்து சுகாதார துறை உயரதிகாரிகள், “சில பிரச்னைகள் உள்ளது உண்மை தான். சுங்க துறையால் தாமதம் ஏற்படுவதை தடுக்க, 'ஆன்லைன்' மூலம் விண்ணப்பிக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.அரசுகளிடம் இருந்து அரசுக்கு; வெளிநாட்டைச் சேர்ந்த நிறுவனங்களிடம் இருந்து நம் அரசுக்கு; வெளி நாட்டு நிறுவனங்கள் அல்லது தொண்டு நிறுவனங்களில் இருந்து நம் நாட்டில் உள்ள நிறுவனங்கள் அல்லது தொண்டு நிறுவனங்களுக்கு என, பல விதங்களில், உதவிப் பொருட்கள் வந்துள்ளன.சிக்கல்அந்தந்த நிலைக்கு ஏற்ப அவை கையாளப்பட வேண்டும்.

  வெளிநாடுகளில் இருந்து நம் அரசுக்கு வந்துள்ள பொருட்களில், ஆக்சிஜன் உள்ளிட்டவற்றை யாருக்கு, எப்படி அனுப்ப வேண்டும் என்பதிலும் சிக்கல் உள்ளது. அடுத்த சில நாட்களில் இந்தக் குழப்பங்களுக்கு தீர்வு ஏற்படும் என்று நம்புகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

  மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், தடுப்பூசிகளுக்கு எந்தத் தட்டுப்பாடும் இல்லை. கையில் தற்போது, 75 லட்சம், 'டோஸ்' தடுப்பூசிகள் உள்ளன. அவற்றில், 48 லட்சம் தடுப்பூசிகள், மூன்று நாட்களுக்குள் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இதுவரை, நாடு முழுதும், 16 கோடி, 'டோஸ்' மருந்து இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  ஆனால் மத்திய சுகாதார அமைச்சகம் நிவாரணப்பொருட்கள் மாநில அரசுகளுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் அனுப்பப்பட்டு வருவதாகக் கூறியுள்ளது.
  Published by:Muthukumar
  First published: