ஊரடங்கு உத்தரவு: விபரீதத்தை உணராமல் நடமாடும் பொதுமக்கள்!

அத்தியாவசியப் பொருட்கள் வழக்கம்போல் கிடைக்க அரசு உறுதி பூண்டிருந்தாலும், மக்கள் இவ்வாறு கூடுவது ஆபத்தையே அதிகரிக்கும்.

ஊரடங்கு உத்தரவு: விபரீதத்தை உணராமல் நடமாடும் பொதுமக்கள்!
அத்தியாவசியப் பொருட்கள் வழக்கம்போல் கிடைக்க அரசு உறுதி பூண்டிருந்தாலும், மக்கள் இவ்வாறு கூடுவது ஆபத்தையே அதிகரிக்கும்.
  • Share this:
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் விபரீதத்தை உணராமல் பொதுமக்கள் நடமாடி வருகின்றனர்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. வீடுகளிலேயே பொதுமக்களை முடக்கி வைப்பதன் மூலம் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடியும் என்பதால், இந்த உத்தரவு நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டாலும், சாமானிய மக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக, அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதனால், சிறிய அளவிலான மளிகைக் கடைகள், பால் மற்றும் இறைச்சி விற்பனைக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் விபரீதத்தை உணராமல் சென்னையில் பெரிய அளவிலான சூப்பர் மார்க்கெட்டுகள் கூட திறக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற கடைகள் திறக்கப்படுவதால், கொரோனா வைரஸ் பரவும் வாய்ப்பு மிக அதிகம் என்பதை உணராமல் உள்ளனர்.


வண்ணாரப்பேட்டையிலும் கடைகள் வழக்கம்போல் செயல்பட்ட நிலையில் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பொருட்களை வாங்கிச் சென்றனர். போலீசார் தொடர்ந்து ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தும், பொதுமக்கள் அதனை பொருட்படுத்தவில்லை.

தருமபுரி நகர்ப்பகுதியில் உழவர் சந்தை, ஆவின் பாலகம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிந்தனர். குறிப்பிட்ட இடைவெளியில் நின்று, அத்தியாவசியப் பொருட்களை வாங்குமாறு அறிவுறுத்தப்பட்டும் பொதுமக்கள் பலர் அலட்சியப்படுத்தி, வந்து சென்றனர்.

ராமநாதபுரத்திலும் அரசு உத்தரவை மீறி காய்கறி மற்றும் மீன் சந்தையில் கூட்டம் அலைமோதியது. பல இடங்களில் டீக்கடைகள், சிறிய உணவகங்கள், பேக்கரிகள் திறக்கப்பட்டிருந்தன. இதனிடையே, போலீசார் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தும், அதை மீறி பொதுமக்கள் கூட்டம் கூட்டமாகவே வந்து சென்றனர்.நாகையிலும் மீன்சந்தை மற்றும் காய்கறிச் சந்தையில் மக்கள் கூட்டம் அலைமோதியது. அரசின் உத்தரவையும் மீறி, பொதுமக்கள் அதிகளவில் கூடுவதால், சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல தரப்பினரும் அறிவுறுத்தியுள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மீன்பிடித் துறைமுகத்தில் மீன் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், அங்கு வழக்கம்போல் மீன் ஏலம் நடைபெற்றது. குறைந்த விலையில் மீன் விற்கப்படுவதை அறிந்த பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது.

அத்தியாவசியப் பொருட்கள் வழக்கம்போல் கிடைக்க அரசு உறுதி பூண்டிருந்தாலும், மக்கள் இவ்வாறு கூடுவது ஆபத்தையே அதிகரிக்கும் என்பதால், உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பல தரப்பினரும் வலியுறுத்தி உள்ளனர்.

Also see:
First published: March 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்