18 வயது மேற்பட்டோருக்கு தடுப்பூசிக்கான முன்பதிவு தொடங்கியது - சில நிமிடங்கள் முடங்கிய கோ-வின் இணையதளம்

தடுப்பூசி

18 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான முன்பதிவு இன்று தொடங்கிய நிலையில், இதற்காக வடிவமைக்கப்பட்ட கோவின் இணையத்தளத்தில் பதிவு செய்ய முடியவில்லை என பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்

  • Share this:
18 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான முன்பதிவு இன்று தொடங்கிய நிலையில், இதற்காக வடிவமைக்கப்பட்ட கோவின் இணையத்தளத்தில் பதிவு செய்ய முடியவில்லை என பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

18 - 45 வயது உடையவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி மே மாதம் ஒன்றாம் தேதி தொடங்குகிறது. இதற்கான முன்பதிவு நாடு முழுவதும் இன்று பிற்பகல் 4 மணிக்கு தொடங்கியது.  கோவின் செயலி மற்றும் இணைய பக்கம் மூலம் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டது .

முன்பதிவு செய்பவர் ஒரே நேரத்தில் 4 குடும்ப உறுப்பினர்களுக்கு முன்பதிவு செய்யலாம். பயனாளர் இருக்கும் இடத்திற்கு அருகில் உள்ள அரசு அல்லது தனியார் கொரோனா தடுப்பூசி மையங்களை தேர்வு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தடுப்பூசி செலுத்துவதற்கான முன்பதிவு தொடங்கியதையடுத்து, ஏராளமானோர் முன்பதிவு செய்ய முயன்றனர். ஒரே நேரத்தில் பல லட்சம் பேர் முன்பதிவு செய்ய முயன்றதால் கோவின் இணையதளம் முடங்கியதாக கூறப்படுகிறது.  தங்களால் கோவின் இணையதளத்தில் முன்பதிவு செய்ய முடியவில்லை என்றும் இணையதளம் பக்கம் இயங்காமல் டவுன் ஆனதாகவும் பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இதேபோல், ஜூலை  மாதம் வரை  தடுப்பூசி செலுத்துவதற்கு இடம் இல்லை என  இணையதளம் பக்கத்தில்  தெரிவிக்கப்பட்டதாகவும் சிலர் கூறியுள்ளனர்.

சென்னை தியாகராய நகருக்கு உட்பட்ட பகுதிகளில் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி போடுவதற்கு மட்டுமே மையங்கள் இருப்பதாகவும், அதற்கு குறைவான வயது உள்ளவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கு மையங்கள் தற்போது இல்லை என்றும் இணையதளம் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டதாக ஒரு பயனாளர் தனது சமூக வலைதள பக்கத்தில்  தெரிவித்துள்ளார்.இந்நிலையில், கோவின் பக்கம் முடங்கவில்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. தேசிய சுகாதார ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆர்.எஸ். சர்மா அளித்துள்ள  விளக்கத்தில்,  இடங்கள் கிடைப்பது மாநிலங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளைப் பொறுத்தது என்றும் . மாநிலங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் அவற்றின் மையங்கள், தடுப்பூசி விலைகள் போன்ற விவரங்களுடன்  தெரிவிக்கும்பட்சத்தில் , மக்கள்  தடுப்பூசிக்கு முன்பதிவு செய்ய முடியும் என்று கூறியுள்ளார்.

 

முதல் நாளில் 75 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்துக்கொள்ள முன்பதிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Murugesh M
First published: